திங்கள், 9 டிசம்பர், 2019

திமுகவில் எடப்பாடியின் கறுப்பு ஆடுகள்: ஸ்டாலின் எச்சரிக்கை!

மின்னம்பலம் : திமுகவில் எடப்பாடியின் கறுப்பு ஆடுகள்: ஸ்டாலின் எச்சரிக்கை!திமுகவின் மாசெக்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று (டிசம்பர் 8) சென்னை தி.நகரில் அமைந்துள்ள அக்கார்டு ஹோட்டலில் நடந்தது. அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கம் ஏற்கனவே ஒரு திருமணத்துக்காகப் பதிவு செய்யப்பட்டுவிட்டதால், உள்ளாட்சித் தேர்தலைப் பற்றி விவாதிப்பதற்காகக் கூட்டப்பட்ட இந்த அவசரக் கூட்டத்தை ஜெகத்ரட்சகனின் நட்சத்திர ஹோட்டலான அக்கார்டு ஹோட்டலில் நடத்தினார்கள்.
மாலை 5.45 மணிக்குத் தொடங்கிய கூட்டம் சுமார் ஒன்றே முக்கால் மணி நேரத்துக்கு நீடித்தது. மாநிலங்களவை எம்.பி.யான வில்சன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. காலையிலேயே அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்திவிட்டு டெல்லி புறப்பட்டுச் சென்றுவிட்டார். தமிழகத் தேர்தல் ஆணையத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கான பணிகளுக்காகவே அவர் டெல்லி சென்றிருக்கிறார். வழக்கத்துக்கு மாறாக திமுகவின் மாசெக்கள், எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுகவின் மூத்த வழக்கறிஞர்களான சண்முகசுந்தரம்,என்.ஆர். இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

உச்ச நீதிமன்ற அவமதிப்பு
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றி சில நிமிடங்கள் பேசுமாறு என்.ஆர்.இளங்கோவை திமுக தலைவர் கேட்டுக்கொண்டதை அடுத்து அவர் பேசினார்.
“தமிழகத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு என்பது தெளிவான உச்ச நீதிமன்ற அவமதிப்பு. மறு வரையறை, இட ஒதுக்கீட்டை முடித்துவிட்டுத்தான் தேர்தல் அறிவிக்க வேண்டும். அதுவும் 2011 மக்கள்தொகை அடிப்படையில்தான் வரையறுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தமிழகத் தேர்தல் ஆணையமும் ஒப்புக்கொண்டது. ஆனால், இப்போது 2001 மக்கள்தொகை கணக்கெடுப்புபடியே நடந்த வரையறையில் தேர்தல் நடத்துகிறார்கள். இது தெளிவான உச்ச நீதிமன்ற அவமதிப்பு. இதை எதிர்த்து நாம் நீதிமன்றம் செல்லப் போகிறோம்” என்று குறிப்பிட்டார்.
திருமாவளவன், பொன்முடிக்கு எதிராக ஜெ.அன்பழகன்
அதன்பின் பொன்முடி, எ.வ.வேலு, ஜெ.அன்பழகன், மனோ தங்கராஜ் ஆகிய மாவட்டச் செயலாளர்கள் மாவட்ட வரையறை பற்றியும் பேசினார்கள். இதில் ஜெ.அன்பழகன் பேசிய பேச்சுக்கு திமுகவின் பல மாசெக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
“ஆலந்தூர் பாரதி முதன்முதலில் ஒரு வார்டில் மறுவரையறை சரியில்லை என்றுதான் பிரச்சினையைக் கிளப்பினார். அதனால்தான் தேர்தலுக்கே தடை விதிக்கப்பட்டது. எனவே நாம் நீதிமன்றத்தில் நியாயத்தைப் பெறுவோம்.
இது உள்ளாட்சித் தேர்தல் பற்றிய கூட்டம். ஆனால் அதோடு இங்கே வேறு சில விஷயங்கள் பற்றியும் பேச வேண்டியிருக்கிறது. நீங்கள் (ஸ்டாலின்) தலைவராகி ஒரு வருடம் ஆகிவிட்டது. நானும் பேசலாமா, பேசலாமா என்று யோசித்து யோசித்துதான் இப்போது பேசுகிறேன். சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின் நீங்கள் முதலில் கள ஆய்வு நடத்தினீர்கள். தொண்டர்கள் பலர் தைரியமாக முன் வந்து புகார் சொன்னார்கள். ஆனால், என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? ஒன்றும் இல்லை. இப்போது இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் தோற்றோம். குழு போட்டு அறிக்கை கேட்டீர்கள். ஆனால், என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? தலைவரென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுத்தால்தான் தலைவர்.
நம் ஓட்டுகளைப் பெற்று பொறுப்புக்கு வந்த, பதவிக்கு வந்த ஒருவர் முதலமைச்சரைப் பார்க்கிறார், ஆலோசனை நடத்துகிறார். (திருமாவளவனைத்தான் பெயர் குறிப்பிடாமல் சொல்கிறார்) நாம் சேர்க்கவில்லை என்றால் அவர்கள் எல்லாம் ஜீரோ. ஆனால், இப்போது பெரியண்ணன் மாதிரி நாட்டாமை செய்துகொண்டிருக்கிறார்கள். தலைவர் முதல்வராக வேண்டும் என்பதற்காக நாங்கள் எந்தவித தியாகத்தையும் செய்யத் தயார். ஆனால், இந்த மாதிரி துரோகிகளுக்காக நாம் உழைக்கக் கூடாது. அவர்களை எல்லாம் முதலில் தலைவர் கூட்டணியை விட்டுக் கழற்றிவிட வேண்டும். கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் நடவடிக்கை எடுத்தால்தான் உள்ளாட்சித் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்” என்று படபடவென பேசினார் ஜெ.அன்பழகன். இந்தப் பேச்சுக்குப் பலரும் வரவேற்பு தெரிவித்தனர். பொன்முடியின் முகம் சிவந்துபோனது.

உடனே எழுந்து ஜெ.அன்பழகனுக்குப் பதில் சொன்ன கே.என்.நேரு, “தலைவர் யாரையும் கழற்றிவிட மாட்டார். அவர்களாகவே கழன்று போகும்படி ஆக்கிவிடுவார். இப்ப நம்மளா கழற்றிவிட்டோம்னா, பின்னாடி தேர்தலின்போது தேவைப்பட்டாகூட அவங்ககிட்ட பேச முடியாது. இந்த விஷயத்துல தலைவர் கலைஞர் பாணியைத்தான் இப்ப நம்ம தலைவர் தளபதியும் ஃபாலோ பண்றாரு” என்று பதில் கூறினார்.
ஸ்டாலினுக்கு ராயல் சல்யூட் - துரைமுருகன்
இதன்பின் பொருளாளர் துரைமுருகன் பேசினார். “நம் தலைவர் அதிமுகவைப் பார்த்தும், தேர்தல் ஆணையத்தைப் பார்த்தும் என்னென்ன கேள்விகள் கேட்டாரோ அதையேதான் உச்ச நீதிமன்றமும் கேட்டிருக்கிறது. அதற்காக தலைவருக்கு அனைவரும் ஒரு ராயல் சல்யூட் வைப்போம்” என்று ஸ்டாலினைப் பார்த்து வணக்கம் வைத்தார்.
திமுகவில் சிலருக்கும் எடப்பாடியோடு தொடர்பு
நிறைவுரையாற்றிய ஸ்டாலின், “நமது வழக்கறிஞர்கள் சொன்னபடி உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தமிழகத் தேர்தல் ஆணையம் செயல்பட்டிருக்கிறது. இதை நாம் முறைப்படி மீண்டும் நீதிமன்றத்திலேயே சென்று முறையிடுவோம். நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை விதிக்காவிட்டால் நாம் தேர்தலில் நிச்சயமாகப் போட்டியிட்டு வெல்வோம். அப்படி ஒருவேளை தடை விதிக்குமானால் ஒவ்வோர் ஊராட்சியிலும் தெருமுனைக் கூட்டம் போட்டு, நீதிமன்றம் ஏன் தேர்தலுக்குத் தடை போட்டது என்றும், எடப்பாடி அரசு செய்த தேர்தல் முறைகேடுகளையும் நாம் விளக்க வேண்டும்” என்று பேசிவிட்டு,
“இங்க அன்பழகன் ஒரு கருத்தைச் சொன்னார். நம் கூட்டணித் தலைவர்களை விடுங்கள். நம் கட்சியிலேயே சிலர் எடப்பாடியோடு தொடர்பு வைத்திருப்பதாக எனக்குத் தகவல்கள் வருகின்றன. அப்படி இருந்தால் கண்டிக்கிறேன், அதை இதோடு நிறுத்திவிடுங்கள் என்று எச்சரிக்கிறேன். ஆளுங்கட்சியோடு மறைமுகத் தொடர்புகளைத் தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியாகவே கூறுகிறேன்” என்று பேச்சை முடித்தார் ஸ்டாலின்.
தேர்தலைச் சந்திக்கத் தயார் - தீர்மானம்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “தமிழ்நாட்டில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணையம் தனது சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் முழுமையாக அதிமுக அரசிடம் சரணாகதி செய்துவிட்டு முதலமைச்சர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் விருப்பத்துக்காக உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டு அடுத்தடுத்து குழப்பங்களை அணிவகுக்க வைத்து மூன்று வருடங்களுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் ஜனநாயகக் கருத்தாக்கத்தைப் படுகொலை செய்திருப்பதற்குக் கண்டனம் தெரிவிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில், புதிய மாவட்டங்களைப் பிரித்து உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சிக்குத் தடை விதித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த தீர்மானத்தில்,

“1995ஆம் வருட தமிழ்நாடு பஞ்சாயத்து (இட ஒதுக்கீடு மற்றும் இட ஒதுக்கீடு சுழற்சி) விதி 6இன் கீழான இட ஒதுக்கீட்டு கொள்கையை முழுமையாகக் கடைப்பிடித்து உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேர்தல் அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளைக் கடைப்பிடித்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஒப்புக்கொண்டிருக்கிறார்” என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “முதலமைச்சரும், அமைச்சர்களும், தாம் செய்த குற்றத்தை மற்றவர் தலையில் சுமத்தித் தப்பித்திடும் தீய நோக்கத்துடன், உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போக திமுக காரணம் என்று செய்யும் பொய்ப் பிரச்சாரத்திற்கும்; 6.12.2019 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகள் எதையும் பின்பற்றாமல், உள்ளாட்சித் தேர்தல் எப்படியாவது தடைப்படட்டுமே என்ற உள்நோக்கத்துடனும், அலட்சிய மனப்பான்மையுடனும், 7.12.2019 அன்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய தேர்தல் அறிவிப்புக்கும்; இந்தக் கூட்டம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது” என்றும்,
தமிழக மக்கள் திமுக பக்கம் உறுதியாக நின்று பேராதரவினை நல்கிடுவார்கள். எனவே உள்ளாட்சி மன்றத் தேர்தல் எப்போது வந்தாலும்; மக்கள் குரலே மகேசன் குரல்; மக்கள் என்றும் நம் பக்கமே என்ற மகத்தான நம்பிக்கையுடன், தேர்தலை நேரெதிரே சந்தித்து, புதியதொரு சரித்திரம் படைத்திட திமுக தயார்” என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
ஹோட்டலில் நடந்த கூட்டமென்பதால் அசைவ விருந்து பரிமாறப்பட்டும், சில எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகை மாத விரதம் என்பதால் அசைவம் சாப்பிடாமலேயே புறப்பட்டுவிட்டனர்.
- ஆரா

கருத்துகள் இல்லை: