வெள்ளி, 13 டிசம்பர், 2019

நாம் சுயநலவாதியாக மாறியதற்கு வேதங்களே காரணம்.. யக்ஞம்! யாகம்! வேள்வி! ஹோமம்!

Dhinakaran Chelliah : நாம் சுயநலவாதியாக மாறியதற்கு வேதங்களே காரணம்!
யக்ஞம்! யாகம்! வேள்வி! ஹோமம்!
தங்களை வேத வைதீகர்களாகவும்,
சனாதனவாதிகளாகவும், இந்துத்துவ வாதிகளாகவும்,துவிஜர்களாகவும்( இருபிறப்பாளர்கள்),சங்கரர், ராமாநுஜர்,மத்வர் இவர்களைப் பின்பற்றுபவர்களாகவும், வேதங்களை உயர்வாக கருதுபவர்கள் தயவு செய்து இந்தக் கட்டுரையைப் படிக்கவும்!
உங்களது மேலான கவனத்திற்காக இருக்கு (ரிக்)வேதத்தின் முதலாவது மண்டலத்தில் உள்ள சில சூக்தங்களில்(மொத்தம் 191) சில
மந்திரங்களை(இருக்குகள் மொத்தம் 2006) மட்டும் இணைத்துள்ளேன். இணைத்துள்ள பக்கங்களைப் படித்தாலே வேதங்களில் கூறப்பட்ட செய்திகள் எப்படிப்பட்டவை என்பதை எளிதாக உங்களால் புரிந்து கொள்ள இயலும்.
முதல் மண்டலம் மொத்தம் 343 பக்கங்களைக் கொண்டுள்ளது( சான்றுக்காக சில பக்கங்களை முதலாவது மண்டலத்திலிருந்து மட்டும் இணைத்துள்ளேன்), அதில் ஒரு சில பக்கங்களைத் தவிர எல்லாப் பக்கங்களிலும் யக்ஞம் பற்றிய குறிப்புக்கள் வருகிறது.மந்திரங்களை வாயால் சொல்லிக் கொண்டு, அதோடு கூட அதற்கான ஒரு காரியத்தையும் அக்னி முகமாகப் பண்ணுவதுதான் யக்ஞம்.இதை யாகம் என்றும் சொல்கிறார்கள்.
யாகம்,வேள்வி,ஹோமம், யக்ஞம் போன்றவை உளவியல் ரீதியாக நமக்கு பெரிய தாக்கங்களை உண்டுபண்ணியிருக்கிறது. அதில் முக்கியமானது “சுயநலமும், பயமும்!”. நமக்குள்ள பய மற்றும் சுயநல எண்ணங்களுக்கும் இந்த வேத வைதீக சடங்கு முறைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதை விளக்குவதற்கே இந்தப் பதிவு!

வேத காலத்தில் யாகம், வேள்வி,ஹோமம்,யக்ஞம் போன்றவைகளில் சோம ரசத்தை ஊற்றி மிருகங்களைப் பலியிட்டு, தேவ தேவதைகளுக்கு அளித்து,தங்களையும் தங்களது உடமைகளான கால்நடைகளையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும்படி அதி தேவ தேவதைகளான இந்திரன்,வருணன்,அக்னி, வாயுயை வேண்டினர். இருக்கு வேதத்தின் ஒன்பதாம் மண்டலத்தின் அனைத்து 114 சூக்தங்களும் சோமபானத்தை பற்றியது தான்.நான்கு வேதங்களில் பக்கத்திற்கு பக்கம் இதற்கான ஆதாரங்கள் உண்டு.
அதாவது இந்தச் சடங்குகள் மூலமாக அதி தேவதைகளை குஷிப்படுத்தி தங்களது சொந்த தேவைகளை விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்வது.நாளடைவில் மன்னர்களுக்காக இவற்றை நடத்தி இந்தச் சடங்குகள் அசுவமேதை, காமேஷ்டி, ராஜசூயம், சோமயாகம், புண்டரீகம் என விரிவு படுத்தப்படுகிறது. பதினெட்டு வகையான வேள்விகளைக் குறிப்பதுவே ‘யாகம்’. இதுவே 400 க்கும் மேற்பட்ட வகைகளாக மாறி மிகப் பெரிய தொழிலாக அன்றைய காலங்களில் நடத்தப்பட்டிருக்கிறது. 400 க்கு மேற்பட்ட யாக வேள்வி இருந்ததை காஞ்சி மகாப் பெரியவா தனது நூலிலும் உரையிலும் குறிப்பிட்டிருக்கிறார். அன்றைய காலங்களில் தினசரி வாழ்க்கையின் அங்கமாகவே வேத வைதீகர்களின் வாழ்க்கை முறைகளில் இருந்திருக்கிறது.வைதீகர்கள் வீடுகளில் ஔபாஸானம் (அக்னி வளர்ப்பது) என்பது தலையாய ஒன்று.இதைக் கொண்டுதான் சேஷ ஹோமம் செய்திருக்கிறார்கள்.
இந்தச் சடங்குகள் பின்னர் விரிவு படுத்தப்பட்டு அர்ச்சனை, ஆரத்தி, அபிஷேகம், அனுஷ்டானம், கர்மாக்கள் எனப் பெருக்கி இந்த சுயநலத்தினை மக்கள் மனதில் ஆழமாய் பதித்துவிட்டார்கள். இதைச் செய்யாமல் போனால் ஆச்சாரம் கெட்டுவிடும், பாவம் தீட்டு நரகம் எனப் பயமுறுத்தி வைத்தார்கள்.
அதாவது அதே concept, தேவ தேவதைகளை யாகம் வேள்வி செய்து குஷிப் படுத்தியது போல் தெய்வங்களுக்கு சடங்குகளைச் செய்து குஷிப்படுத்தி தங்களது சொந்த காரியங்களை பூர்த்தி செய்து கொள்வது.இதைக் கண்மூடி ஏன் எதற்கு எனக் கேள்வி கேட்காமல் நாமும் நமது பிள்ளைகளுக்காகவும் நமக்கு நல்ல உடல்நிலை,வேலை, தொழில் விருத்தி வேண்டி மட்டுமே கோயில்களில் அர்ச்சனை நமது பெயர்களில் செய்ய பழகிவிட்டோம்.
அதே போன்று கண்திருஷ்டி, திருஷ்டி சுற்றிப் போடுவது, கடைமூடும் போது சூடம் ஏற்றுவது,பில்லி சூனியம் என சுயநலம் பெருகிப் போனது.
இவற்றைப் பயத்தினாலும் செய்பவர்கள் உண்டு.உலக நன்மை வேண்டி ஒருவரும் அர்ச்சனையோ பூசையோ செய்வினையோ செய்வதில்லை. இப்படித்தான் பய(பக்தி)முள்ள சுயநலவாதிகளாக மாறிப் போனோம், மாற்றப்பட்டோம். பொதுநலத்தில் கடவுள் பெயரில் அர்ச்சிக்கவும் சாஸ்திரங்களில் பிரமாணமும் இல்லை. ஆனால் கொலையே பண்ணினாலும் திருடினாலும் வன்கொடுமைகளில் ஈடுபட்டாலும் சாஸ்திரப்படி பரிகாரம் மட்டும் உண்டு.
பண்டைய குறுநில மன்னர்கள், பேரரசர்கள் காலத்தில் ஒரு மன்னன் இன்னொரு மன்னனுடன் போர்தொடுத்துப் போகும்போது ஒரு கும்பல் கோயில்களில் அல்லது அவர்களது குடியிருப்புப் பகுதிகளில் யாக வேள்விகளை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பார்கள்.எதிரி மன்னன் ஜெயித்து தங்கள் நாட்டு மன்னன் தோற்றுப்போனால், யாகம் வேள்வி நடத்துபவர்கள், தங்களிடம் வரும் எதிரி நாட்டு மன்னனிடம் சொல்வார்கள், மன்னா! எங்களை ஆண்டவன் கொடுங்கோல் அரசன், அவனது அழிவிற்கும் உனது வெற்றிக்காகவே நாங்கள் யாகமும் வேள்வியும் ஹோமமும் நடத்தினோம் என்பார்கள். ஒரு வேளை தங்களது மன்னன் வெற்றி பெற்றுவிட்டால் அவனது வெற்றி வேண்டியே இந்த யாக வேள்வி நடந்ததாகக் கூறிப் பொன்,கன்னி, பூமி தானம் பெற்றுக் கொள்வார்கள். ஆக யார் வெற்றி பெற்றாலும் யாகம்,வேள்வி,ஹோமம் நடத்தியவர்களுக்கு எல்லா வகையிலும் லாபமே. எவன் ஆட்சிக்கு வந்தாலும் இந்த யாகம்,வேள்வி,ஹோமம் நடத்துபவர்களுன் நலன்கள் பாதுகாக்கப் பட்டு வந்தன என்பதை கடந்த வரலாற்றின் எல்லா காலங்களிலும் காண முடிகிறது. மாவீரனாய் போற்றப்படும் வீர சிவாஜி கூட வைதீகர்கள் ஏற்படுத்திய பயத்தினால் யாக ஹோமங்களை நடத்தி இரு முறை பட்டமேற்றதை அறிகிறோம்.
இப்படித்தான் வைதீகர்களில் ஒருசிலரால் இன்றுவரை தங்களது சுய லாபங்களுக்காக இந்தத் தொழில் செய்யப்பட்டுகிறது.இந்த சுயநலத்திலிருந்தும் பயத்திலிருந்தும் நமக்கு விடுதலை வேண்டும், அப்போதுதான் மனதில் தன்னம்பிக்கை பிறக்கும்.சமத்துவமும் மனித நேயமும் தழைக்கும்!
இவற்றைப் புரிந்துகொள்ள நமக்குத்தான் வெகு காலம் ஆகிப் போனது! இனிமேலாவது நாம் விழித்துக் கொள்வோம்!
குறிப்பு:
காய்ந்து போன குச்சிகளை யாகத்திற்கோ, ஹோமத்திற்கோ பயன்படுத்தினால் அதன் பெயர் “சமித்து”
“அவி”என்பதும் தானியங்களால் செய்யபடுகிற ஒரு வித உணவு.
“ஆகுதி” எனப்படுவதும் உணவுகளை பொருட்களை மற்றவர்களுக்கு கொடுப்பது.
ரிக் வேதத்தின் முதலாவது மண்டலத்தில் சில பக்கங்களை மட்டும் இணைத்துள்ளேன்!

1 கருத்து:

Sridharan Appandairaj சொன்னது…

எவ்வளவு ஆழமான கருத்துக்களை அழுத்தம் திருத்தமா சொல்லி இருக்கீங்க. பணிவான நன்றிகள் ஐயா.