வெள்ளி, 13 டிசம்பர், 2019

இங்கிலாந்துத் தேர்தல் முடிவுகள்-2019.. போரிஸ் ஜோன்ஸனின் 'Brexit' வெற்றி'

Rajes Bala : 'போரிஸ் ஜோன்ஸனின் 'Brexit' வெற்றி'
இங்கிலாந்துத் தேர்தல் முடிவுகள்-2019
இங்கிலாந்தில் பலரும் எதிர்பார்த்படி கொன்சர்வேட்டிவ்(பழமை தழுவும்) கட்சியின்; தலைவர் போரிஸ் ஜோன்ஸன் நேற்று நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். தேர்தல் ஆய்வுகளும் பத்திரிகைகளும் சொல்லிக்கொண்டு வந்த தொகுதிகளைவிடக் கூடத்தொகுதிகளைவென்றிருக்கிறார். பிரபுக்கள்,முதலாளிகள்,நில உடமையாளர்களின் கட்சி எனச் சொல்லப்படும் கொன்சர்வேட்டிவ் கட்சி பிரித்தானிய சரித்திரத்தில் முதற்தடவையாகத் தொழிற்கட்சியின் கோட்டை என்று சொல்லப் பட்ட,இங்கிலாந்தின் வடகிழக்கின் பல தொகுதிகளையும் வென்றெடுத்து வெற்றிவாகை கொண்டாடுகிறது.
கொன்சர்வேட்டிவ் கட்சி 45 விகித வாக்குகளையும், தொழிற்கட்சி 33 விகித வாக்குகளையும் பெற்றிருக்கிறது. புpரித்தானியாவின் 650 தொகுதிகளில் கொனசர்வேட்டிவ் கட்சி 364 இடங்களையும்,தொழிற்கட்சி 203 இடங்களையும், மிகுதிகளை மற்றக் கட்சிகளும் பெற்றிருக்கின்றன. தேர்தல் பிரசாரத்தில் போரிஸ் ஜோன்ஸன் 68 இடங்களை மேலதிகமாக வென்று அரசு அமைப்பேன் என்றர்.ஆனால் 78 தொகுதிகளை மேலதிகமாக வென்று அமோக வெற்றி பெற்றிருக்கிறார். ரோனி பிளேயார் 1997ல் 20.000 மேலதிக வாக்குகளால் வென்றெடுத்த செட்ஜ்பீல்ட் என்ற தொகுதியும் பறிபோனது தொழிற்கட்சியினரான எங்களைத் துன்பப்படுத்தியது.கொன்சர்வேட்டிவ் கட்சியின் மகத்தான வெற்றி. தொழிற்கட்சி 59 தொகுதிகளைக் கொனசர்வேட்டிவ் கட்சியிடம் பறிகொடுத்த படுதோல்வி இந்தத் தேர்தலில் வெளிப்படுகிறது.

இதற்கெல்லாம் தலையாய காரணம் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரித்தானியா விலகவேண்டும் என்று பிரித்தானியாவின் பெரும்பான்மையான ஆங்கிலேயர்கள் விரும்புவதாகும். அந்த விரும்பத்தைத் தொழிற்கட்சி பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பது பொது மக்களின் ஆத்திரமுமாகும்.ஏகாதிபத்திய ஆளுமையாக இருந்த இங்கிலாந்தில், ஐரோப்பிய ஒன்றியம் என்ற பெயரில்,பொருளாதார வசதியற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்கள் லண்டன் நகரிற் குவிந்தது அவர்களால்ச் சகிக்க முடியாமலிருந்தது. வெளிநாட்டாரின் வருகையால்ஆங்கிலேய இளம் தலைமுறையினர் தங்களுக்கு ஒரு வீடு; வாங்கமுடியாத அளவுக்கு வீடுகளின் விலை ஆகாயத்தைத் தொட்டன.அத்துடன் ஆங்கிலேயர் கேட்கும் சம்பளத்தை விட மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யப் பல்லாயிரம் ஐரோப்பிய இளைஞர்கள் லண்டனை நிறைத்தார்கள்.பணக்கார நாடான இங்கிலாந்துக்கு வந்து களவு செய்யவும், விபச்சாரத்திற்காக ஏழைப் பெண்களைக் கிழக்கு ஐரொப்பாவிலிருந்து கொண்டு வரவும் நூற்றுக்கணக்கான கிரிமினற் குழுக்கள் கிழக்கு ஐரொப்பாவிலிருந்து லண்டனுக்குள் மிகவும் இலகுவாக நுழைந்தன,பிரித்தானியாவின் பெயருக்கும், சாதாரண மக்களின் பாதுகாப்புக்கும் தலையிடியைக் கொடுத்தார்கள்.
2004ம் ஆண்டு,ரோனி பிளேயர், ஐரோப்பிய ஒன்றிணையத்தின் மக்கள் அத்தனைபேரினதும் சுதந்திர நடமாட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்தார்.அதைத் தொடர்ந்து, தங்களின பிரித்தானியத் தனித்துவக் கலாச்சாரம்,ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்தவராக இருப்பதால் அழிந்து தொலைவதாகப் பிரித்தானியர் பலர் குமுறினர். 44 வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியத்துடனிருந்த தொடர்பைத் துண்டிக்க முடிவெடுத்தார்கள்.ஐரோப்பாவிலிருந்து வெளியேற 2016ம் ஆண்டு வாக்களித்தார்கள். தொழிற்கட்சி, லிபரல் டெமோக்கிரசிக் கட்சி, ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சிகளின் இழுபறியால் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது பற்றிய விவாதம் நேற்றுவரை தொடர்ந்தது.
அவற்றிற்கு ஒட்டு மொத்த முற்றுப் புள்ளியும் வைக்கப் பிரித்தானிய மக்கள் வர்க்க சார்பிலிருந்து வெளிவந்து 'பிரக்ஷிட் போரிஸைத்'; தெரிவு செய்திருக்கிறார்கள்.
பணத்தின் ஆளுமையில் அமைந்த கொன்சர்வேட்டிவ் கட்சி,தொழிலாளர்களுக்குப் பெரிய நன்மை செய்யாத கட்சி.முதலாளிகளின் நன்மையை முன்னெடுப்பவை.ஆனாலும்,தொழிற்கட்சி சார்ந்த பெரும்பாலான மக்கள் 'ப்ரக்ஷிட்'காரணமாகக் கொனசர்வேட்டிவ் கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
மார்க்கரட் தச்சரைவிடக்கூடிய அளவில் போரிஸ்ஜோன்ஸன் பிரித்தானிய மக்களின் வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.
தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பினின் தலைமையிலுள்ள தொழிற்கட்சி இரண்டாம் தடவையும் 'ப்ரக்ஷிட்' சார்ந்த கொள்கைகளைச் சரியாக முன்னெடுக்காமல்;த் தேர்தலில்த் தோல்வியைத் தழுவியிருக்கிறது. பிரித்தானியா, முதலாளித்துவத்தின் பிறப்பிடம். 53 நாடுகளைக் காலனித்துவம் என்ற பெயரில் கொள்ளையடித்து மாடமாளிகைகள் கட்டிக் கொண்டவர்கள்.இன்னும் அரசகுடும்பத்தைப் போற்றும் பழமைவாதம் கொண்ட கலாச்சாரத்தைக் கொண்டவர்கள்.உலகத்திலுள்ள பணக்காரர்கள் பிரித்தானியாவுக்கு வந்து முதலிடச் சுதந்திரம் கொடுப்பவர்கள்.
ஆனாலும்,பிரித்தானிய மக்களிற் பெரும்பான்மையினர் சமத்துவத்தை விரும்புவர்கள். காலனித்துவத்திற்கு எதிராகப் போராடியவர்கள்.அதிலும் பிரித்தானிய தொழிற் கட்சி 'மனித நேயத்தைப்' போற்றும் தத்துவத்தைக் கொண்ட கட்சி. இந்தியா மட்டு மல்லாது, ஒட்டு மொத்த காலனித்துவ நாடுகளுக்கும் சுதந்திரம் கொடுத்த கட்சி.பெண்களுக்குச் சமத்துவம் என்று வாய்ப்பேச்சில் சவாலடித்துக் கொண்டிருக்காமல் 25 விகிதமாவது பெண்களின் பிரதிநதித்துவத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தவர்கள். உலகமே வியக்கும் சுகாதார சேவை இலவசமாக வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தவர்கள்.
தொழிலாளர்கின் நலன்களுக்காகப் பல அரும்பெரும் திட்டங்களைக் கொண்டு வந்தவர்கள்.ஆனாலும், மிகவும் இடதுசாரியான ஜெரமி கோர்பின், பணக்காரர்களுக்கு எதிராகக் கொண்டு வந்த சில தேர்தல் விஞ்ஞாபனங்கள் பலரை முகம் சுழிக்க வைத்தது.'ப்ரக்ஷிட்' விடயத்தில் ஜெரமியின் தெளிவற்ற நிலைப்பாடு, அவருக்குக் கிடைத்த தோல்விக்குத் துணையாக இருந்தது. தொழிலாளர் வர்க்கத்தின் கணிசமானவர்களை அவரிடமிருந்து விலக்கியது. அந்த இடங்களைக் கொனசர்வேட்டிவ் கட்சி வெற்றி கொண்டிருக்கிறது.
ஜெரமியின் தோல்விக்கான பல காரணங்களில், பிரித்தானிய ஊடகங்கள் அவரின் இடதுசாரிக் கொள்கைகளை வெறுத்தது மிகவும் முக்கிய காரணமாகும்.இடைவிடாமல் பெரும்பாலான- பிரித்தானிய ஊடகங்கள் ஜெரமிக்கு எதிராகச் செயற்பட்டன.
ஜெரமியின் தொழிற்கட்சி மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகமாட்டோம் என்று அடம்பிடித்த லிபரல் டெமோக்கிரசிக் கட்சியும்; பெரிதாக முன்னேறவில்லை. அந்தக் கட்சியின்; தலைவி,ஜோ வின்ஸன் படுதோல்வியடைந்திருக்கிறார்.
இனி என்ன நடக்கும்?
போரிஸ் ஜோன்ஸன் தனது தேர்தல் பிரசாரத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி, ஜனவரி 31ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும். அதற்கு முதல்,ஐரோப்பிய ஒன்றியத்துடனான பன்முகத் தொடர்புகளை எப்படி அறுத்துக் கொள்வது, அல்லது ஏதோ ஒரு வித்தில் தொடர்வது என்ற கேள்விகளுக்கு இருபகுதியினரும் வழிகள் தேடவேண்டும்.
-நேட்டோ ஒப்பந்தம் சார்ந்த விடயங்கள் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புக்குப்; பொதுவானவை. அந்த அமைப்பின் ஆரம்ப அமைப்பாளர்களில் பிரித்தானியா முன்னிலை வகிக்கிறது.அந்த அமைப்பில் பிரித்தானியாவின் இடம் தெளிவு படுத்தப்படவேண்டும்
-விஞ்ஞான,விண்ணுலகஆய்வுகள் சம்பந்தமான ஐரோப்பா ஒருமித்த திட்டங்களின் எதிர்காலமென்ன?
-கிழக்கு ஐரோப்பிய அடிமட்டத் தொழிலாளர்களின் வரவு தடைப்பட்டால் அவர்களை நம்பியிருக்கும் பிரித்தானிய விவசாயத்தின் நிலைஎன்ன?
-டொனால்ட் ட்ரம்பின் அன்புக்கும் ஆதரவுக்கும் தன்னை இணைத்துக்கொண்ட 'பிரித்தானிய ட்ரம்ப் போரிஸ் ஜோன்ஸன்'அமெரிக்காவின் வாலாக இயங்குவாரா என்ற கேள்வி பலருக்குண்டு.
-போரிஸ் பிரமாண்டமாக வெற்றி பெற்றிருக்கிறார்,அனால் பொய்களைத் தாராளமாக வாரியிறைப்பவர் என்ற பெயரையும் கொண்டவர்.'ப்ரக்ஷிட்' விடயத்தில் எதிர்வரும் பேச்சுவார்த்தைகளில் என்னமாதிரி நடந்து கொள்வார், அதனால் பிரித்தானியாவின் பொருhதார விருத்திக்கு,பாதுகாப்புக்கு,ஐரோப்புடானனான நல்லுறவுக்கு என்ன நடக்கும் என்பவை பலரின் கேள்விகளாகும்.

கருத்துகள் இல்லை: