புதன், 11 டிசம்பர், 2019

இந்திய அரசு இலங்கை இந்துக்களை இந்துக்களாக அங்கீகரிக்கவில்லை!

Dhinakaran Chelliah : பாவம் புண்ணியம் இவற்றை நம்பாவிட்டாலும், உலகில்
பாவப்பட்ட ஜனங்கள் என உண்டு என்றால் அது 35 வருடங்களுக்கு மேல், தமிழகத்திலும் பிற இந்திய மாநிலங்களில் அணு அணுவாக செத்துக் கொண்டிருக்கும் இலங்கை அகதிகள்தான். இவர்களைப் பற்றி தமிழகத்தில் உள்ளவர்களுக்கும் அக்கறை இருந்ததில்லை, புலம் பெயர்ந்த
ஈழத்தவர்களுக்கும் இருந்ததில்லை. வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த இந்திய ஒன்றியத்தின் மத்திய அரசுக்கு மட்டும் எப்படி அக்கறை இருக்கும்?!
இந்தியாவில் உள்ள இந்த அகதிகளில் சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்களே அதிகம்! சைவம் தழைத் தோங்கிய ஈழத்தில் சனாதன மதம் என்பது ஒரு சில தனிநபர்களாலும், இராமகிருஷ்ண மடத்தாலும், சைவம் சமயம் என்பது இந்து மதமாக கட்டமைக்கப் பட்டு, அதுவே இந்து சமய கலாச்சாரத் திணைக்களம் (இப்படி ஒரு அமைச்சகம் இந்தியாவில் கூட இல்லை) வரை வளர்ந்து போனது.இலங்கைப் பள்ளிகளில் இந்து சமயம் ஒரு கட்டாயப் பாடமாகவும் உள்ளது.
இப்படி இருந்தும் வட இந்தியர்கள் ஆதிக்கமுள்ள மத்திய அரசாங்கம் இலங்கையில் உள்ள தமிழர்களை இந்து சனாதனவாதிகளாக என்றுமே கருதியதில்லை. இதன் தொடர்ச்சிதான், சில தினங்களுக்கு முன் Citizenship Amendment Bill 2019 ல் இலங்கையிலிருந்து அகதிளாக( trespassers),இந்தியாவில் தஞ்சமடைந்தவர்களை இந்துக்களாக அங்கீகரிக்காமல் போனது.இந்த bill லானது தங்களை இந்துக்களாக நினைந்து புலம் பெயர்ந்த நாடுகளில் பெரிய பெரிய கோயில்களை எழுப்பிய ஈழ மக்களுக்கு பெரிய விஷயமாகவே தெரியவில்லை.


இந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என வாழும் கலை ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் போன்றோர் குரல் கொடுத்தும் ஆளும் சனாதனவாதிகளுக்கு அது கேட்கவில்லை.
இரண்டு லட்சங்களுக்கு மேல் உள்ள இந்த ஜனங்களுக்கு கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலமும் எல்லாமே ஒன்றுதான். இருட்டாய் உள்ள இடத்தில் இரவென்ன பகலென்ன?

கருத்துகள் இல்லை: