புதன், 11 டிசம்பர், 2019

ஆபிரஹாம் பண்டிதர் ! இன்றைய ராகங்களை பண்களில் இருந்து நிருபித்த ஒரிஜினல் சங்கீத பிதா மகர்

Sundar P‎  : ஆபிரகாம் பண்டிதர். ஆகஸ்ட்டு 2, 1859 – ஆகஸ்ட்டு 31, 1919 )
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் மங்கியிருந்த தமிழ் மரபிசையை,
இலக்கியச் செறிவுடன் புதுப்பொலிவு பெறச் செய்தவர் ஆபிரகாம் பண்டிதர்.
ஆபிரகாம் பண்டிதர் அவர்கள், 1859ஆம் ஆண்டு ஆகஸ்டு 2 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை என்ற சிற்றூரில், முத்துசாமி நாடார் - அன்னம்மை அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
தனது ஆரம்ப கல்வியை பங்களாச் சுரண்டையில் முடித்தவர், திண்டுக்கல் நகரில் உள்ள CVES ஆசிரியர் பயிற்சி பள்ளியில் தன்னை தமிழ் ஆசிரியராகத் தகுதிப்படுத்திக் கொண்டார்.
ஆபிரகாம் பண்டிதரின் பாட்டனார் தமிழ் மருத்துவராக இருந்தமையால், தமிழாசிரியராக இருந்த பண்டிதர் மருத்துவ இலக்கியத்தில் இயற்கையாகவே ஆர்வம் கொண்டார். ஆபிரகாமும் அவரது துணைவியாரும் தஞ்சாவூரில் குடியேறினர்.
1886 முதல் 1890 வரை பாதிரியார் பிளேக் துரை, ஆபிரகாம் பண்டிதரையும் அவர்தம் மனைவியாரையும் சீமாட்டி நேப்பியர் பெண்கள் பாடசாலையில் முறையே தமிழ்ப் பண்டிதராகவும் தலைமை ஆசிரியையாகவும் நியமித்தார். பண்டிதர் அவர்களின் கல்விமுறை அனைவராலும் பாராட்டப்பட்டது.
தஞ்சையில் வாழ்ந்ததால் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் எனப் பெயர்பெற்றார்.
இந்திய இசை, இலக்கிய ஆராய்ச்சியின் வழியாக, தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிறபகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்த முன்னோடி ஆய்வாளர் ஆபிரகாம் பண்டிதர் ஆவார்.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைகுறித்த செய்திகள் இன்றைய கருநாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதை பண்டிதர் ஆராய்ந்து நிரூபித்தார்..
இன்றைய ராகங்கள் தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வு மூலம் நிரூபித்தார்.
இராகங்களை உண்டு பண்ணும் முறை, பாடும் முறை ஆகியவற்றை பழந்தமிழ் இசையிலக்கணத்தில் இருந்து ஆய்வு செய்து அறிந்து விளக்கிக் காட்டினார்.
அவையே இன்றும் இசையில் அடிப்படைகளாக உள்ளன
பல ஆண்டுகளாக தான் செய்த தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917இல் 'கருணாமிர்த சாகரம்' என்ற பெரும் இசை நூலாகக் வெளியிட்டார்.
1395 பக்கங்கள் உடையது இந்நூல்.
இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது

கருத்துகள் இல்லை: