திங்கள், 9 டிசம்பர், 2019

ரங்கராஜ் பாண்டே : நித்தியானந்தாவிடம் ஒரு ஆன்மீக சக்தி இருக்கிறது.....


சாவித்திரி கண்ணன் : ரஞ்சிதாவுடனான பாலியல் சித்து விளையாட்டையடுத்து அடுத்தடுத்து வெளியான லெனின் கருப்பன்,ஆர்த்திராவ் வாக்குமூலங்கள்,அதிர வைக்கும் உண்மைகள் பட்டவர்த்தனமாக தெரிய வந்த பிறகும்...,
பெங்களூரின் ராம் நகர் போலீசார் பிடதி ஆஸ்ரமத்தில்(?) சோதனை நடத்தி அங்கு கணக்கற்ற ஆணுறைகள்,மது பாட்டில்கள்,கஞ்சா போன்றவற்றை கைப்பற்றிய பிறகும்..,
நித்தியானந்தாவால் எப்படி சுதந்திரமாக,சர்வ வல்லமையுடன் இயங்க முடிந்தது?
ஆபாச விடியோ காட்சியில் ஆன்மீகவாதியாக தன்னை கூறிக் கொண்ட நித்தியானந்தா
அப்படி சிக்கிய போது, ’’எனக்கு 5 வயது குழந்தையின் உடல் தான் உள்ளது!என்னால் பாலியல் விஷயத்தை சிந்திக்கவும் முடியாது...என்று சொல்கிறார்.
அவருக்கு பரிசோதனை செய்து அவர் கூறியது பொய் என்றும், அந்த விடியோவையும் பரிசோதித்து, வீடியோவில் இருந்தது அவர் தான் என்றும் அறிவியல் பூர்வமான ஆய்வில் நிருபணமாகிறது!
உடனே அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டாமா?
அவரது ஆஸ்ரமத்தை இழுத்து மூடி,அங்கிருப்பவர்களை காப்பாற்றி இருக்க வேண்டாமா?

அதற்கு பிறகு அவர் நூற்றுக்கணக்கில் ஆள் சேர்க்க முடிகிறது!
இரண்டாயிரம் கோடி பணத்தை சேர்க்கமுடிகிறது. எல்லாவற்றையும் விட ஏழு,எட்டு வயது குழந்தைகள் தொடங்கி பருவ வயது பெண்கள் வரை பல நூறு பேரை குற்றுயிரும் குலை உயிருமாய் சிதைக்க முடிகிறது...!
’’நான் ஆணையிட்டேன்..என் கட்டளைக்கு சூரியனே கட்டுப்பட்டு அரை மணி நேரம் கடலில் மூழ்கி காத்திருந்தது’’என்று பேசி வீடியோ வெளியிடவும் முடிகிறது...!
எனில் இங்கே நீதிமன்றங்கள்,காவல் நிலையங்கள்,விஜிலென்ஸ், மனித உரிமை அமைப்புகள்,எல்லாவற்றுக்கும் மேல் அரசாங்கம் என்பவையெல்லாம் இருந்து தான் என்ன பயன்?
நித்தியானந்தா மேன்மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட முடிந்ததற்கு இந்த சமூகத்தின் அங்கமாக விளங்கும் நாம் அனைவருமே ஒரு வகையில் கிளர்ச்சி பண்ணி, நெருக்கடி செய்யாமல் அமைதி காத்த வகையில் பொறுப்பு ஏற்க வேண்டும்.
இவ்வளவு குற்றம் இழைத்த - அதி ஆபத்தான ஓருவரை தொடர்ந்து கண்காணிப்பில் வைக்காமல் எப்படி தப்பி ஓட அனுமதித்தனர்?
’’ஒருவர் ஞானியா? இல்லையா? என்று உணர்வதற்கே ஒரு ஞானம் வேண்டும்...அந்த ஞானம் எனக்கு இல்லை... நித்தியானந்தாவிடம் ஒரு ஆன்மீக சக்தி இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது...” என்று நித்தியானந்தாவிற்கு வக்காளத்து வாங்குகிறார் ரங்கராஜ் பாண்டே!
பாண்டே நம்புகிற ஆன்மீகம் என்ன என்று எனக்கு புரியவில்லை!
நான் புரிந்த வரையில்,எல்லா உயிர்களின் பாலும் கருணை காட்டுகிற, எந்தச் சிறிய உயிர்களுக்கும் கூட தீங்கு நினைக்காத.பணம்,புகழ்,அதிகார மயக்கம் அற்ற ஒருவரையே ஞானியாக கருதமுடியும்.
அப்படித் தன்னை ஞானி என்று அறிவிக்கவும் மறுத்து ,எளிமையிலும் எளிமையாக தன்னைத் தானே வருத்திக் கொண்டு,தன்னை நாடி வருவோரின் துயரங்கள் களைந்து,அதற்கு எந்த பிரதிபலனும் ஏற்காமல் கடந்து சென்றுவிடக்கூடிய அரிய யோகிகள் சிலரும் வாழ்ந்த, இன்னும் கூட வாழ்ந்து கொண்டிருக்கிற பூமிதான் இது!
இப்படிப்பட்ட ஞானிகளை உணர்வதற்கு பாண்டேவுக்கு ஞானம் இல்லை என்பதைக் கூட ஏற்கிறேன்.ஆனால், ஒரு ஊடகவியலாளனுக்கு ’’யார் பிராடு?’’ என்று உணர முடிவது தான் அடிப்படை தகுதியாகும்!

கருத்துகள் இல்லை: