புதன், 11 டிசம்பர், 2019

நித்தியின் ஆன்லைன் ஆசீர்வாத வசூல் வேட்டை ,,,,

நித்தியின் ஆன்லைன் ஆசீர்வாத வசூல்!மின்னம்பலம் : நித்யானந்தாவின் பாதபூஜை பிசினஸ் பற்றி பாதி பார்த்தோம், மீதி பார்ப்போம்.
பாத பூஜை என்பது குருவுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் என ஆரம்பித்து நித்தி அளிக்கும் விளக்கங்களில் மயங்கி, உலகம் முழுவதிலிருந்தும் தினந்தோறும் காலை நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் நித்யானந்தாவுக்கு பாத பூஜை செய்து வருகிறார்கள்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி சீடர்கள் எங்கிருந்தாலும் நித்தியின் போட்டோவை முன்வைத்து அதற்கு பாத பூஜை செய்யும் அபரிமிதமான பக்தி அவர்களுக்குள் இருக்கிறது.
எத்தனை நாளைக்குத்தான் எங்கோ இருக்கும் நித்திக்கு இங்கே அமர்ந்து நான் பாத பூஜை செய்வது? அவருக்கு நேருக்குநேர் பாத பூஜை செய்ய என்னால் முடியாதா? எனக்கு வாய்ப்பு இல்லையா? என்று கேட்பவர்களுக்காகவே நித்தியானந்தா அறிமுகப்படுத்தி இருக்கும் பாதபூஜை பெயர்தான் பிரத்யக்ஷ பாத பூஜை. அதாவது நேரில் சென்று செய்யும் பாதபூஜை.இதற்காக பக்தர்கள் தங்களது கிரெடிட் கார்ட் மூலம் ஆன்லைனில் புக்கிங் செய்து கொள்ளவேண்டும். ரெட் பஸ் போன்ற செயலிகளில் பேருந்துக்கு எப்படி முன்பதிவு செய்கிறீர்களோ, இந்திய ரயில்வேயின் ஆன்லைன் பக்கத்தில் எப்படி ரயில் இருக்கைகளுக்கு முன்பதிவு செய்கிறீர்களோ... அப்படித்தான் நித்தியின் பாதங்களுக்கு பூஜை செய்யவும் நீங்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.

கிரெடிட் கார்ட் மூலம் முன்பதிவு கிடைக்கவில்லையென்றால் வெல்கம் சென்டர் என நித்தி பக்தர்களுக்காகவே அமைக்கப்பட்டிருக்கும் ஆன்லைன் தளத்தில் சென்று முன்பதிவு செய்யலாம்.நித்தியின் இரண்டே இரண்டு பாதங்களுக்கு... ஒரு லட்சத்தில் ஆரம்பித்து இரண்டு லட்சம், மூன்று லட்சம், 5 லட்சம் ரூபாய் என்று விதவிதமான வகைகளில் பாத பூஜைகள் இருக்கின்றன. நீங்கள் கட்டும் பணத்துக்கு ஏற்ப சில பொருள்கள் கூட குறைவாக இருக்கும் என்பதைத் தவிர மற்ற எந்த வித்தியாசமும் இந்த பாத பூஜையில் பிரிவுகளுக்குள் இல்லை. லட்சங்கள் கூடக் கூட மந்திரங்கள் அதிகமாகும், நேரமும் கூடுதலாகும்.
பாத பூஜை முடிந்ததும் உங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பதிலாக , ஒரு சில ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டு வஸ்திரம் அல்லது சின்னச்சின்ன சிலைகளை நித்தி தன் ஆசீர்வாதம் பொருளாக பக்தர்களுக்கு அளிப்பார்.
ஒருமுறை நேரில் சென்று நித்திக்கு பாதபூஜை செய்து விட்டீர்கள் என்றால் உங்களுடைய குடும்பத்தினரின் ராசி, நட்சத்திரம், பிறந்தநாள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஆசிரமத்தில் பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்படும். உங்களது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் முன்கூட்டியே நித்தியின் ஆசிரமத்திலிருந்து தகவல் வரும். இந்த பிறந்த நாளில் நீங்கள் நித்தியின் பாதபூஜை செய்து ஆசீர்வாதம் பெற தயாராக இருக்கிறீர்களா முந்துங்கள் என்ற தகவல் உங்களுக்கு வரும்.இப்படியாக ஒரு முறை வந்தவர்கள், அந்த நாளில், அந்த மாதத்தில் ஒவ்வொரு வருடமும் நித்தி ஆசிரமத்துக்கு நேரிலேயே அல்லது ஆன்லைனிலேயே பாதபூஜை செய்ய முடிவெடுத்து விடுவார்கள்.

அதென்ன ஆன்லைன் பாதபூஜை?
உங்களால் நேரில் வர இயலவில்லை என்றால் பணத்தைக் கட்டி தேதியை முன்பதிவு செய்துவிட்டால் போதும். நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து பூஜைகளையும் உங்களுக்காக நித்தி ஆசிரமத்தில் அமர்ந்து அவரது முக்கிய சீடர்கள் செய்வார்கள். அந்தக் காட்சி உங்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒளிபரப்பாகும். இந்த ஆன்லைன் பாதபூஜை பார்த்து ஆன்லைன் ஆசிர்வாதம் பெற்று நீங்கள் உய்யலாம்.
இப்போது இந்த பரபரப்பான சூழலில் நித்தியின் பாதங்கள் எந்த நாட்டில் உலவிக் கொண்டிருக்கின்றன என்று நீதிமன்றங்களும் அரசாங்கங்களும் தேடிக் கொண்டிருக்கின்றன. உண்மையிலேயே அவருக்கு பாதபூஜை செய்ய புலனாய்வு அமைப்புகளும் காத்துக்கொண்டிருக்கின்றன.
ஆனால் இன்னமும் கூட ஆன்லைன் பாதபூஜை மூலம் அபரிமிதமான வசூலித்து ஆன்லைனிலேயே ஆசீர்வாதம் வழங்கி ஆன்லைனிலேயே உரையாடிக் கொண்டிருக்கிறார் நித்தி.
பாத பூஜை முடித்து அன்றைய நாளில் என்னென்ன செய்வார் நித்தி? நித்தியின் நித்ய நடவடிக்கைகள் என்ன?
(நித்தி சர்ச்சைகள் நீளும்)

கருத்துகள் இல்லை: