செவ்வாய், 10 டிசம்பர், 2019

ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை கிடையாது: மத்திய அமைச்சர்

ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை கிடையாது: மத்திய அமைச்சர்மின்னம்பலம் : இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படுமா என்பது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட போரின் காரணமாக உயிரைக் காத்துக்கொள்வதற்காக எந்தவித பாதுகாப்பும் இல்லாத மீன்பிடிப் படகுகளில் இலங்கை தமிழர்கள் அகதிகளாகத் தமிழகத்தை நோக்கிவந்தனர். இவர்கள் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டனர். பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் இவர்கள் வசித்துவரும் போதிலும் இதுவரை குடியுரிமை வழங்கப்படவில்லை.
இதனிடையே வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இஸ்லாமியர் அல்லாத அகதிகள் இந்திய குடியுரிமை பெற வழிவகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நேற்று உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். ஆனால், இதில் இலங்கைத் தமிழர்கள் இடம்பெறாததற்கு திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் மக்களவையில் நேற்று (டிசம்பர் 9) விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் எழுந்து, “கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படுமா? அளிக்கப்படும் என்றால் அதன் விவரங்களைத் தெரிவிக்கவும். வழங்கப்படாதெனில் அதற்குரிய காரணங்களைக் கூறவும்” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், “இந்தியக் குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்தச் சட்டத்தின் பிரிவு 5இன்படி பதிவு செய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்தியக் குடியுரிமை பெற முடியும். அந்தச் சட்டத்தின் பிரிவு 6இன்படி இயல்புரிமை (naturalisation ) அடிப்படையில் குடியுரிமையைப் பெற முடியும். சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதத்திலும் இந்தியக் குடியுரிமையைப் பெற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
அதாவது இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என அமைச்சர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: