புதன், 2 ஆகஸ்ட், 2017

கோவை தொடர்குண்டு ...கோட்டை மேடு இப்போ எப்படியிருக்கு?

கா.சு.வேலாயுதன் கோட்டை மேடு: உள்ளூரில் மட்டுமல்ல, இந்தியாவில் எந்த மூலையில் மத மோதல் நடந்தாலும் சட்டென்று மத மோதல் நெருப்புப் புள்ளி படர்ந்து பற்றிக் கொள்ளும் கோவை நகரப் பகுதி கோட்டை மேடு. கோவை தொடர் குண்டுவெடிப்பின் போது மத அடிப்படை வாதிகள் இங்கேதான் புகலிடம் புகுந்தார்கள். இதன் சுற்றுப்புற பகுதிகளில்தான் குண்டுகளை பதுக்கியிருந்தார்கள் என்றெல்லாம் தொடர்ந்து பேசப்பட்ட பகுதி.
கடந்த ஆண்டு இந்துத்துவாவை சேர்ந்த சசிக்குமார் கொலை, அதைத் தொடர்ந்து நடந்த சவ ஊர்வலத்தின் போதும் கூட நீடித்தது. ஆனால் உண்மையில் கோட்டை மேட்டை சுற்றி வந்தால் நமக்குள் மூளும் அச்சம் தேவையற்றது; இங்கு வசிக்கும் மக்களில் பலரும் அனுதாபத்திற்குரியவர்கள்தான் என்ற எண்ணம் அழுத்தமாகப் பதிந்து விடுகிறது.

கோட்டை மேட்டில் அதில் எல்லா பகுதிகளிலுமே நெரிசலில் சிக்கித் தவிக்கும் கடைகளும், வீடுகளுமே நிறைந்து கிடக்கின்றன. இதில் தெற்குப்பகுதியில் குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள் முன்னர் தூர்ந்து போய் கிடந்தது. அதில் ஒன்று 10 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்து, 13 பேர் இறந்து பெரும் பதட்டம் சூழ்ந்தது. பிறகு அந்த பழைய அடுக்குமாடி வீடுகளை எல்லாம் இடித்து விட்டு புதிதாக 352 அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் கட்டிக் கொடுத்து அதில் அதே குடும்பங்களை குடியேற்றம் செய்துள்ளது அரசு.
திப்பு சுல்தானின் கோட்டை கொத்தளங்கள் இங்கே இருந்தன. அந்நியர் படையெடுப்பில் கோட்டை இடிக்கப்பட்டு தரைமட்டமானது. இதன் மீது எழுந்த ஊரே கோட்டை மேடு என்ற பெயரைப் பெற்றுள்ளது.
தற்போது இது கோவை மாநகராட்சியின் 82 வது வார்டுக்குள் வருகிறது. வின்சென்ட் ரோடு, பி.கே.செட்டி வீதி, சாமா வீதி, ஈஸ்வரன்கோயில் வீதி, துர்க்கலால் வீதி, இப்ராஹிம் ஹாஜியார் வீதி, ஹெச்.எம்.பி.ஆர்., வீதி, எல்.எம்.ஆர் வீதி, இப்ராஹிம் ஹாஜியார் வீதி, எஸ்.எஸ்.கே வீதி, சாமியார் புதுவீதி எண் 1 மற்றும் எண் 2, பழைய மார்க்கெட் வீதி, வென்னல் நாயுடு வீதி எண் 1 மற்றும் எண் 2, நாஸ்தியேட்டர் ரோடு, பாஸ்கரன் லைன், கோட்டை புதுவீதி என நீளும் தெருக்களில் சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இதில் இஸ்லாமியர்கள் 80 சதவீதம் பேர், இந்துக்கள் 15 சதவீதம், கிறிஸ்துவர்கள் 5 சதவீதம் வசிக்கிறார்கள்.
பெரும்பான்மையாய் இஸ்லாமியர் வாழ்வதால் எங்கே மதப் பிரச்சனை எழுந்தாலும் இங்கே பதட்டம் சூழ்ந்து விடுவதும், அப்படியொரு சூழலை உருவாக்குவதும், போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்துவதும், சரமாரியாக ரோந்து வாகனங்கள் சுற்றி வருவதும் வாடிக்கையான ஒன்றாகவே ஆகியிருந்தது.
”ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அப்படி எந்த சூழலும் இங்கே இல்லை. சொல்லப் போனால் இங்கே போலீஸாரின் ரோந்து வாகனத்தை கூட காண முடிவதில்லை. முன்னர் கோட்டை மேடு தெருக்கள், பிரதான சாலைகளை சந்திக்கும் இடங்களில் எல்லாம் போலீஸாரின் புறச் சோதனைச் சாவடிகள் இருந்தன. அவை சுத்தமாக இப்போதெல்லாம் இயங்குவதில்லை. இருபதுக்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் சுற்றிக் கொண்டே இருக்கும். அதுவும் இப்போது அறவே இல்லை!” என்கிறார் இங்கே வசிக்கும் முபாரக்.

கோட்டை தங்கப்பா, முபாரக்
கோட்டை மேட்டுக்குள் ஹிதயத்துல் இஸ்லாம் ஜாபியா ஜமாத், ஹரிகத்துல் இஸ்லாம் ஜாபியா ஜமாத், கேரளா முஸ்லீம் ஜமாத், ஜம்மியுத்துல் இப்ராஜ் வல்ஹாஜிஸ் என நான்கு மசூதிகளும், கோட்டை ஈஸ்வரன் கோயில், சுப்பிரமணியர்சுவாமி கோயில், கரிவரதராஜ பெருமாள்கோயில், விநாயகர் கோயில், கோனியம்மன் கோயில், முத்துமாரியம்மன் கோயில், விளையாட்டு மாரியம்மன் கோயில், மதுரை வீரன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில் என இந்துக்களின் வழிபாட்டு தலங்களும் உள்ளன. துர்கலால் வீதியில் கிறித்துவ ஜெபவீடு ஒன்றும் உள்ளது.
தவிர, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, நல்லாயன் உயர்நிலைப்பள்ளி, மன்ப உலூம் உயர்நிலைப்பள்ளி, மன்ப உலூம் மெட்ரிகுலேசன் பள்ளி, அல்அசார் மெட்ரிக்குலேசன் பள்ளி, புனித ஆக்ஞைசன் நடுநிலைப்பள்ளி, மகளிர் கல்வியியல் கல்லூரி என கல்வி நிலையங்கள் உள்ளன. இவற்றில் அவரவர் சமயம் சார்ந்து மக்கள் வழிபாடுகள் நடத்துவதை காண முடிந்தது. கல்வி நிலையங்களிலும் குழந்தைகள் முழுமையாக நிறைந்து இருப்பதை கவனிக்க முடிந்தது.
முன்பெல்லாம் கோட்டை மேட்டை சுற்றியுள்ள ஐந்து சோதனைச் சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் காவல் காப்பர். இப்போது அந்த சோதனைச் சாவடிகள் பூட்டப்பட்டு அதற்குள் தட்டுமுட்டுச் சாமான்கள் போடப்பட்டு குப்பை அண்டி காட்சியளித்தது.
”கலவர, குண்டு வெடிப்பு சூழல் நிலவியபோது இங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் பி1 காவல் நிலையம்தான் செல்ல வேண்டும். இப்போது கோட்டை மேட்டை ஒட்டி இருக்கும் உக்கடம் வெளியூர் பேருந்து நிலையத்தை ஒட்டியே பி 2 போலீஸ் ஸ்டேஷன் வந்து விட்டது. மக்கள் எல்லாம் பழைய விஷயங்களை மறந்தே விட்டதால் அவரவர் வேலையில் ஈடுபடுகிறார்கள். இந்த போலீஸ் செக்போஸ்டுகள் மட்டும் ஏன் இப்படி கிடக்கிறது என்றுதான் புரியவில்லை. ஒன்று இதை அகற்ற வேண்டும். இல்லை போலீஸாரை வைச்சு செயல்படுத்த வேண்டும்!” என தெரிவித்தார் முன்னாள் சிறுபான்மை அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவரான கோட்டை தங்கப்பா.
இங்குள்ள முத்து ராவுத்தர் பிரியாணி ரொம்ப ஃபேமஸ். நகரில் 60 சதவீதம் இந்து சமயம் சார்ந்த மக்கள் அங்கேதான் வந்து சாப்பிடுகிறார்கள். பிரியாணியை வீட்டுக்கும் வாங்கிச் செல்கிறார்கள். இங்கே எங்கள் வீடுகளில் திருமண விசேஷம் என்றால் அசைவ உணவோடு, சைவ உணவும் சமைப்பது வழக்கம். ஏனென்றால் அந்த அளவுக்கு சைவத்தை கடைபிடிக்கும் இந்து சமய பெருமக்களும் எங்கள் இல்ல விசேஷங்களுக்கு வருகிறார்கள் என குறிப்பிட்டார் கோட்டை தங்கப்பா.

கோட்டை மேட்டில் சாக்கடை தேங்கும் பகுதி
கோட்டை மேட்டில் அதில் எல்லா பகுதிகளிலுமே நெரிசலில் சிக்கித் தவிக்கும் கடைகளும், வீடுகளுமே நிறைந்து கிடக்கின்றன. இதில் தெற்குப்பகுதியில் குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள் முன்னர் தூர்ந்து போய் கிடந்தது. அதில் ஒன்று 10 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்து, 13 பேர் இறந்து பெரும் பதட்டம் சூழ்ந்தது. பிறகு அந்த பழைய அடுக்குமாடி வீடுகளை எல்லாம் இடித்து விட்டு புதிதாக 352 அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் கட்டிக் கொடுத்து அதில் அதே குடும்பங்களை குடியேற்றம் செய்துள்ளது அரசு.இதற்கு கீழ்ப்புறத்தில் வாலாங்குளம் உள்ளது. இந்த குளத்தை ஒட்டி புறம்போக்கில் குடியிருந்த சுமார் 550 குடும்பங்களுக்கு பிள்ளையார்புரம் என்ற பகுதியில் மாற்று வீடுகளை கட்டிக் கொடுத்து இடம் மாற்றி விட்டனர். அதே குளக்கரை பகுதியில் வக்ப் போர்டு இடத்தில் 171 வீடுகள் உள்ளன. இதில் வெறும் எட்டுக்கு பத்து அடி இரு அறைகளில் நான்கைந்து தலைமுறைகளாக இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களின் கூரை வீடுகளை பார்த்தால் நெஞ்சு நோகிறது. எந்த நேரத்திலும் இடிந்துவிழும் நிலையில் குட்டிச்சுவர்களாக கிடக்கும் வீடுகளில் பெரும்பாலானவற்றுக்கு பாத்ரூம் இல்லை. சாக்கடை வீட்டு முன்பு தேங்கி விடுகிறது. மழை வந்தால் கால் வைக்கவே முடியாது. சிறு வீடுகளுக்கு இடையே சின்ன சந்து போல் இருக்கும் பகுதியை தெரு என்று சொல்லி இம்மக்கள் அதிர்ச்சியூட்டுகிறார்கள்.
”என்னய்யா செய்றது. நாங்க நில வாடகைதான் கொடுக்கிறோம். புதுசா கட்டினா வாடகை அதிகப்படுத்திடுவாங்க. அதை கட்டுறதுக்கும் வசதியில்லை. எல்லோரும் மூட்டை தூக்கற வேலை, கூலி வேலைன்னு போறவங்க. எங்கேயும் போக வழியில்லை. எங்க கொழுந்தன், கொழுந்தன் சம்சாரம் எல்லாம் மெளத் ஆயிட்டாங்க. நாங்க இந்த சின்ன வீட்டுல மகள், மருமகன், பேரன், பேத்தின்னு 6 குடும்பங்கள் குடியிருக்கிறோம். ஒருத்தர் உள்ளே வந்தா இன்னொருத்தர் வெளியே போயிக்கணும்!” என்று வேதனையுடன் தெரிவித்தார் ஷாபியம்மா.
இந்த ஷாபியம்மாவை போல் அங்கே பலர் துயரத்தை பகிர்ந்து கொண்டனர். பல வீடுகளில் கழுத்தளவு குட்டிச்சுவர். மேற்கூரை இல்லை. அதன் மீது தகரத்தகட்டை வைத்து மறைத்துக் கொண்டுதான் பெண்கள் கூட குளிக்க வேண்டிய நிலை உள்ளதை காண்பித்தனர் இங்கே வசிப்பவர்கள்.

கோட்டைமேடு
‘இதற்கு அரசுதான் ஏதாவது செய்ய வேண்டும்!’ என்று இதற்கு கருத்து தெரிவித்த கோட்டை தங்கப்பா, ”இங்கே முந்தியெல்லாம் நினைச்ச நேரம் போலீஸ் வரும். சந்தேகத்துல பசங்களை கூட்டிட்டு போகும். அதுவெல்லாம் 10 வருஷமா இல்லை. சமீபத்தில் சசிக்குமார் கொலையின்போது மட்டும்தான் பதட்டம் சூழ்ந்தது. அதுகூட ஊர்வலமாக போனவங்க சில நூறுபேர் கோட்டை மேட்டுக்குள்ளே நுழைய முயற்சி பண்ணினாங்க. அன்னைக்கு வெள்ளிக்கிழமை. இங்குள்ள நாலு பள்ளிகள்ல தொழுகை முடிச்சிட்டு சுமார் பதினஞ்சாயிரம் பேர் வெளியே வந்த நேரம். நல்லவேளை எல்லோரும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திட்டு இருந்தாங்க. போலீஸூம் சமயோசிதமாக செயல்பட்டு அவங்களை உள்ளே விடலை. இல்லேன்னா மறுபடியும் ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டு தேவையில்லாம சிலர் அரசியல் லாபம் அடைஞ்சிருப்பாங்க!” என்றார்.
இதே கோட்டை மேட்டுப்பகுதியில் குண்டுவெடிப்பில் சிறை சென்று 10 ஆண்டு தண்டனை முடித்து வெளியில் வந்த கைதியை சந்திக்க நேர்ந்தது. ”அன்னைக்கு சந்தர்ப்ப சூழ்நிலையில் வழக்கில் மாட்டிக்கிட்டேன். இப்ப யாரோட தொடர்பும் இல்லை. சொந்தமா தொழில் செய்ய அதிகாரிகள் சில உதவிகள் எல்லாம் செஞ்சாங்க. அதுவெல்லாம் பெரிசா எங்க குடும்பத்துக்கு பயன்படலை. அதனால இப்ப கூலி வேலைக்குத்தான் போறேன்!” என்றவர் தன் பெயரை சொல்ல மறுத்துவிட்டார்  tamilthehindu

கருத்துகள் இல்லை: