செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

முட்டை ஊழலை அம்பலப்படுத்திய கமல் ரசிகர்கள்

முட்டை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினியும், ஊழல் மலிந்துவிட்டது என்று கமலும் சொல்லிவந்த நிலையில், கமலை உசுப்பேற்றும் வகையில் வெளிப்படையாக வசைபாடினார்கள் அ.தி.மு.க-வினர். அதற்கு கமல், அ.தி.மு.க-வினர் செய்யும் ஊழல்களை ஆதாரங்களுடன் வெளியிடுவேன் என்று பகிரங்கமாக பேட்டிக் கொடுத்தார். அதனை நிரூபிக்கும் வகையில் முட்டை ஊழல் அம்பலப்படுத்தியுள்ளார் கமல். இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்துக்கு பெருமையே. எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது" என்று பதிவிட்டுள்ளார். கமலின் இந்த அதிரடி பதிவு ஆளும் கட்சியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கமல் ரசிகர் நற்பணி மன்றத்தினர் தங்களின் அரசியல் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளனர். அதன் முன்னோட்டமாகத்தான் பெரம்பலூரில் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகளை கொடுத்ததை கையும் களவுமாக பிடித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி, ஆரம்பப் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கப்படுவதாக கமல் ரசிகர் மன்றத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பெயரில் கடந்த 22-ம் தேதி முதல் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
அதில் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை போன்ற பள்ளிகளில் ஆய்வு செய்தபோது அதில் குழந்தைகளுக்கு சத்துணவு சாப்பாட்டில் அழுகிய முட்டைகளை கொடுப்பதை பார்த்துள்ளனர்.
இந்த முட்டைகளை குழந்தைகள் சாப்பிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளதோடு, பள்ளி நிர்வாகத்திடம் பிரச்னை செய்துள்ளனர். அந்த முட்டைகளை புகைப்படம் எடுத்துக்கொண்டு, அதை முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் கலெக்டருக்கும் வாட்ஸ்அப்பில் அனுப்பிருக்கிறார்கள். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இதைக் கமல் ரசிகர் மன்றத்தினர், 'சத்துணவில் அழுகிய முட்டை வழங்கப்படுகிறது' என்று கமலுக்கு ஆதாரங்களுடன் அனுப்பியிருக்கிறார்கள். அவர் அந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு இன்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். கமலின் இந்த அதிரடி ட்விட் ஆளும் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளதோடு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. vikatan

கருத்துகள் இல்லை: