“மத்திய அரசு சமையல் எரிவாயுக்கான மானியத்தை முற்றிலுமாக இன்னும் 8 மாதத்தில் கைவிடுவது என்றும், அதற்கு ஏதுவாக மாதந்தோறும் ரூ. 4/- அதிகப்படுத்துவது என்றும் முடிவு செய்துள்ளது. வறட்சி, வேலையின்மை, ஏழ்மை ஆகியவற்றால் துயருற்றிருக்கும் மக்கள் மீது மத்திய அரசு தொடுத்துள்ள நேரடியான இன்னும் ஒரு தாக்குதலாகும் இது.
கடந்த 2014ம் ஆண்டு தேர்தலின் போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மக்களை எச்சரித்தது. பாஜக ஆட்சிப்பொறுப்புக்கு வந்தால் அனைத்துவித மானியங்களையும் ரத்து செய்து விடும் என்று கூறியிருந்தது.
இப்போது மத்தியில் பாஜக அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்த இந்த மூன்றாண்டு காலத்தில் உரம் மானியத்தை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டது. அதேப்போன்று ரேசன் மானியத்தை முற்றிலுமாக குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு 50 சதவிகிதம் குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே இப்போது மானிய விலையில் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
சமையல் எரிவாயு மானியத்தை கைவிடுவது என்ற இந்த முடிவோடு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்குமான மானியத்தையும் இந்த அரசு கைவிட்டு விட்டது. அதே சமயம் கார்ப்பரேட்டுகளுக்கும், அந்நிய முதலீட்டாளர்களுக்கும் பல லட்சக்கணக்கான கோடி ரூபாயை ஆண்டு தோறும் ஊக்கத் தொகை, வாராக் கடன் வசூலிக்கப்படாத வரி, சொத்து வரி நீக்குதல், கார்ப்பரேட் வரியை குறைத்தல் என்று மிகப்பெரிய அளவிற்கு மானிய மழையையே பொழிந்து கொண்டிருக்கிறது. இந்த அரசு அந்நிய மூலதனத்திற்கு ஆதரவான, பெரு முதலாளிகளுக்கு ஆதரவான அரசு என்பதை தனது ஒவ்வொரு நடவடிக்கையின் மூலமாக உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
மத்திய அரசின் இந்த மானிய ரத்து அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக இந்த மானிய ரத்து அறிவிப்பை திரும்ப பெற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக