”விவசாயியை வாழ விடு” – மாநாட்டு தீர்மானங்கள், ஆகஸ்ட் 5, 2017, திருவள்ளுவர் திடல், தஞ்சாவூர்
‘விவசாயியை வாழவிடு’ என்பது அதன் பொருளிலேயே கெஞ்சல் அல்ல; அறைகூவல் என்பதை உணர்த்துகிறது. விவசாயியை வாழவிடு என்ற முழக்கம் பெரும்பாலான மக்களின் மத்தியிலிருந்து வருகிறது. விவசாயியை வாழ விடாமல் வதைக்கும் அழிவு சக்தியாக ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் இருக்கிறது. நம்மை வாழவிடக் கூடாது என்ற முனைப்போடு பன்முனைத் தாக்குதலை தொடுக்கும் அரசுக் கட்டமைப்பிடமே கெஞ்சிக் கொண்டிராமல் விவசாயிகள் தங்கள் சொந்த அதிகாரத்தை நிறுவுவதே தீர்வாக இருக்கும் என்று இந்த மாநாடு உறுதியாக நம்புகிறது.
‘விவசாயியை வாழவிடு’ என்பது அதன் பொருளிலேயே கெஞ்சல் அல்ல; அறைகூவல் என்பதை உணர்த்துகிறது. விவசாயியை வாழவிடு என்ற முழக்கம் பெரும்பாலான மக்களின் மத்தியிலிருந்து வருகிறது. விவசாயியை வாழ விடாமல் வதைக்கும் அழிவு சக்தியாக ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் இருக்கிறது. நம்மை வாழவிடக் கூடாது என்ற முனைப்போடு பன்முனைத் தாக்குதலை தொடுக்கும் அரசுக் கட்டமைப்பிடமே கெஞ்சிக் கொண்டிராமல் விவசாயிகள் தங்கள் சொந்த அதிகாரத்தை நிறுவுவதே தீர்வாக இருக்கும் என்று இந்த மாநாடு உறுதியாக நம்புகிறது.
- விவசாயிகளின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் பிரச்சினைகளாக விவசாயக் கடன் பிரச்சினை, விளைபொருட்களின் விலை வீழ்ச்சி, பாசனமின்மை, விவசாயிகள் தற்கொலை ஆகியவை உள்ளன. விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களைப் பறித்துவிட்டு அவர்களை உள்நாட்டு அகதிகளாக்கி, விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் அரசின் கொள்கைதான் இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் காரணமாகும். விவசாயிகளை வேரறுக்கும் கொள்கையை திட்டமிட்டு அமல்படுத்தும் அரசிடமே விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும்படி கோருவதும் கெஞ்சுவதும் தீர்வாகாது. இவ்வாறு செய்யும் அரசியல் கட்சிகளின், விவசாயச் சங்கங்களின் தீர்வுகளை ஏற்க முடியாது என்று இந்த மாநாடு கருதுகிறது.
- அரசின் விவசாயக்கொள்கை என்பது விவசாயிகளின் உழைப்பை சுரண்டுவதுடன், உற்பத்தி உபரியை கார்ப்பரேட்கள் கொள்ளையடிப்பதாக இருக்கிறது. தற்போது வழங்கப்படும் குறைந்த பட்ச விலை விவசாயிகளின் கல்வி, மருத்துவம், சுகாதாரம், விலைவாசி உயர்வு, ஆகியவற்றை ஈடு செய்வதாக இருக்க வேண்டும். இவை மானியமாகவோ, இலவசமாகவோ அரசின் கருணையினாலோ பெறவேண்டியவை என்று கருத வேண்டியதில்லை. அது விவசாயிகளின் உரிமை. விவசாய விளைபொருள்களுக்கு அதனை விளைவிக்க செலவான இடுபொருள்களின் விலையோடு 50% கூடுதலாகத் தரவேண்டும் என எம் எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரைத்ததை அமல்படுத்தும்படி பல விவசாய சங்கங்கள் கோருகின்றன.அப்படியே அது அமல்படுத்தப்பட்டாலும் அதுவும் நியாயமான சரியான விலை நிர்ணயமாகாது. மாறாக, நில வாடகையையும், இடுபொருட்களுக்கான செலவையும், சாகுபடிக்கான உழைப்பையும், விவசாயியின் குடும்பம் நுகரும் கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கான செலவினையும் சேர்த்துக் கணக்கிட்டு அதனுடன் உரிய லாபமும் வைத்துதான் விளைபொருட்களுக்கான விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறோம். இந்த விலையை உறுதியாக அமல்படுத்த வேண்டுமாயின் அதற்காக விவசாயிகளும் பங்கேற்கும் உரிமையுடன் கூடிய கூட்டமைப்பை ஏற்படுத்தி, அதன் கீழ் அரசே கொள்முதல் செய்வது அவசியம் எனக் கருதுகிறோம்.
- விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வாங்கியுள்ள வங்கிக்கடன்கள், கந்து வட்டிக் கடன்கள், மைக்ரோபைனான்ஸ் கடன்கள் அனைத்தும் முழுவதுமாகத் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். இதில் குறிப்பாக வட்டி வசூலிக்க வரும் கந்து வட்டி, மைக்ரோபைனான்ஸ் கடும் வட்டியாளர்கள், கடன் வாங்கியுள்ள விவசாயிகளின் வீட்டுப் பெண்களை அவமானப்படுத்தி வருகின்றனர். இவர்களின் மிரட்டலும் துன்புறுத்தலும் விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளுகிறது. இந்த வக்கிர செயல்கள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்..
- விவசாய பல்கலைக் கழகங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் களப்பணியாளர்களுக்கான பயிற்சி நிறுவனங்களும், விவசாய வேளாண்மையில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்வதாக இருக்கின்றன. மாறாக இவை விவசாயிகளுக்கு நேரடியாக சேவை செய்பவைகளாக மாற்றப்பட வேண்டும்.
- விவசாயிகளின் கடன் தள்ளுபடி, பயிர் காப்பீட்டுத் தொகை, கரும்பு நிலுவைத்தொகை, நூறுநாள் வேலை கூலி, ஆதார நெல் கொள்முதல் விலை, இலவச தடையற்ற மும்முனை மின்சாரம், நீர்ப்பாசன வசதி, காவிரி நதி நீர் உரிமை, ஆகிய கோரிக்கைகளுக்காக பரந்த அளவில் கூட்டமைப்பை ஏற்படுத்தி அரசை நிர்பந்திக்கும் போராட்டங்களை நடத்துவதை மக்கள் அதிகாரம் அவசிய கடமையாக கருதுகிறது. இத்தகைய போராட்டங்களில் மக்கள் தங்களை தயங்காமல் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என இம்மாநாடு அழைக்கிறது.
- உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரியில் நியாயமாய் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய பங்கினை மறுக்கும் விதமாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மோடி அரசு மறுத்து வருகிறது. அது மட்டுமின்றி எல்லா நதிநீர் பிரச்சினைகளுக்கும் ஒரே வாரியம் அமைக்கவும், ஏற்கெனவே போராடிப் பெற்ற உரிமைகளைப் பறித்திடும் வகையில் தமிழகத்துக்குப் பாதகமான வகையில் புதிய தீர்வுகளை முன்வைத்து அவற்றை சட்டமாக்கவும் முயல்கிறது பாஜக அரசு. இந்த வஞ்சகச் செயல்களை எதிர்த்து முறியடித்து காவிரி உள்ளிட்ட தமிழக ஆறுகளில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போராட முன்வரும்படி மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
- ஏற்கெனவே உள்ள நீர்நிலைகளில் மணல் கொள்ளை, ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கொட்டுதல் போன்ற அழிவு வேலைகள் அரசு மற்றும் ஆளும் கட்சிகளின் உடந்தையுடன் நடைபெறுகின்றன. அவற்றைத் தடுத்து நிறுத்தி மறுகட்டுமானம் செய்யும் பணிகள் விவசாயிகளின் பங்கேற்புடன் கூடிய அதிகார அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
- கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட ஊர்களில் மக்கள் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராகப் போராடும் மாணவர்கள் இளைஞர்கள் மீது அரசு அடக்குமுறை ஏவிவிடப்படுகின்றது. இப்போராட்டத்துக்காக ஆதரவு தெரிவித்து பிரசுரம் கொடுத்தமைக்காக மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டுள்ளது. அதே சமயம் 47 ஊர்களை பெட்ரோலிய மண்டலமாக மோடி அரசு அறிவித்துள்ளது. மூவேந்தர்களின் காலத்துக்கு முன்னரே விவசாயம் செய்யப்பட்டு வந்த காவிரி டெல்டாவை குப்பை கூளத்தை அகற்றுவதுபோல வீசி எறிந்துவிட்டு அதனை பெட்ரோலிய மண்டலம் என அறிவிக்கிறது மத்திய அரசு.பன்னாட்டு கார்ப்பரேட் கொள்ளையர்கள் தங்குதடையின்றி நமது இயற்கைவளங்களைக் கொள்ளையிடுவதற்கான அரசின் கொள்கையின் ஒரு அங்கமே இது. எவ்வாறு போஸ்கோவுக்காக பழங்குடி மக்கள் ஆயிரக்கணக்கானோரை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து துரத்தப்பட்டனரோ அதைப் போலவே டெல்டா விவசாயிகளும் துரத்தப்படவுள்ளனர். ஓ.என்.ஜி.சி துரப்பணமிட்ட கிருஷ்ணா கோதாவரி படுகையானது 5 அடி கீழே அமிழ்ந்துள்ளதென ஆய்வுகள் சொல்கின்றன. ஹைட்ரோகார்பன், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களை உறிஞ்சப்போகும் நிறுவனங்களால் காவிரி டெல்டாவும் சில அடிகள் அமிழ்ந்துவிடும். இதனைப் போராடி முறியடிப்போம்.
- நிலமற்ற விவசாயிகள் முதல் வசதியான பெரிய விவசாயிகள் வரை அனைவரும் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய தருணத்தில் நம்மைப் பிளவுபடுத்தும் சாதிய மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும்.
- மாடு விற்கத் தடை என்ற மோடியின் சட்டம்,
- விவசாயிகளை பால்விற்பனை தொழிலிருந்து வெளியேற்றி, அத்தொழிலைக் கார்ப்பரேட் மயமாக்க உதவுகிறது;
- விவசாயம் நொடித்திருக்கும் இந்த நேரத்தில் கால்நடை வளர்ப்புதான் துணைத்தொழிலாக விளங்குகிறது. இத்தொழிலையும் ஒழித்து விவசாயிகளை கிராமத்தை விட்டே துரத்துகிறது.
- இறைச்சி, தோல் தொழிலில் இருக்கும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் இது பாதிக்கிறது.
- கோடிக்கணக்கானோரின் உணவு உரிமையை பறித்து இந்துத்துவ செயல்திட்டத்தை புகுத்துகிறது.
- விவசாய உற்பத்தியில் பெருமளவில் ஈடுபடும் பெண்கள், கூலி உழைப்பாளர்கள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோரின் உரிமைகள், தேவைகள் மறுக்கப்படுகின்றன. விவசாயப் பெண்கள் மீது தொடுக்கப்படும் சாதிய, ஆணாதிக்கத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட வேண்டும். மற்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் விடுப்புடன் கூடிய 6 மாத சம்பளம் போன்ற பேறுகால நலத்திட்டங்கள் விவசாயப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
- 140 ஆண்டுகளாக இல்லாத வறட்சி நிலவுவதாக தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு கூறியிருந்தது. ஆனால் ஒரு விவசாயிக்குக் கூட வறட்சி நிவாரணம் தரப்படவில்லை. வழங்கப்பட்டிருப்பதோ அடுத்த பயிருக்கான உள்ளீட்டு விலைதான். அதிமுக அரசின் இந்த வஞ்சகச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
- விவசாயிகளை விவசாயத்திலிருந்து துரத்தி விடுவதும், விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதும்தான் அரசின் கொள்கையாக உள்ளது. தன்னிறைவு, சுயசார்புக்கு எதிரான வகையில் 100 % அந்நிய முதலீட்டை உணவுப்பொருள் ஏற்றுமதி, இறக்குமதியில் அனுமதிக்கப் போகின்றது. விவசாயிகளின் பிரச்சினைகள் எதனையும் இந்த அரசு அமைப்புக்குள் தீர்த்துவிட முடியாது. என்ற புரிதலோடுதான் சில கோரிக்கைகளுக்காகப் போராடுகிறோம். விவசாயிகளின் பிரச்சினை மட்டுமின்றி எந்தப் பிரச்சினையையும் தீர்க்க இந்த அமைப்புக்கு வெளியே தீர்வைத் தேடும்படி மக்களைக் கோருகிறோம்.
- கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர், உணவு, என்ற அடிப்படை உரிமைகளைக் கூட அனைத்து மக்களுக்கும் செய்ய முடியாமல் தோற்று நிற்கிறது இந்த அரசு. மேலும் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் வாழ்வாதாரங்களை பறிப்பதுடன், மக்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாமல், ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் ஊழல்மயமாக கிரிமினல்மயமாக மாறி அனைத்துப்பிரிவு மக்களுக்கும் எதிராக மாறிவிட்டது. தேசப்பற்று, மக்கள் பற்று இல்லாமல், பன்னாட்டு கம்பெனிகளின் காலை நக்கி நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க துணை நிற்கும் இந்த துரோகிகளிடம், எதிரிகளிடம், வாழவிடு என கோரிக்கை வைக்காமல், இந்த அரசு கட்டமைப்பை அகற்றப் போராட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக