சனி, 5 ஆகஸ்ட், 2017

2,000 அடி பள்ளத்தில் விழுந்து 2 இளைஞர்கள் பலி.. போதை? தற்கொலை? மகாராஷ்டிரா


மும்பை: மஹாராஷ்டிராவில், அம்போலி மலைப் பாதையில், 2,000 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து, இரு வாலிபர்கள் இறந்தனர்.
மஹாராஷ்டிராவில், கோல்காப்பூரில் உள்ள, கோழிப் பண்ணை ஒன்றில் பணியாற்றும் ஏழு வாலிபர்கள், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, அம்போலி காட், மலை வாசஸ்தலத்துக்கு சென்றனர். அப்போது, இரு வாலிபர்கள் மட்டும், மேற்கு தொடர்ச்சி மலையில் ஏறினர். மற்றவர்கள், வேண்டாம் என, தடுத்தும் கேட்காமல் ஏறினர்.உச்சிப்பகுதிக்கு சென்ற அவர்கள், கீழேயிருந்த தன் நண்பர்களுக்கு உற்சாகமாக, 'சாகசம்' செய்து காட்டினர். அதை சிலர், மொபைல் போனில் பதிவு செய்தனர். அப்போது, இரு வாலிபர்களில் ஒருவர் கால் தடுமாறினார். இதையடுத்து, மற்றொருவரை அவர் பிடிக்கவே, இருவரும், 2,000 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தனர்.
பதறிய நண்பர்கள், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, தங்கள் நண்பர்கள் பள்ளத்தில் விழுந்து விட்டதை தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார், மலையேறும் குழுவினர் மூலம், இருவரின் உடல்களை தேட முயற்சித்தனர். பலத்த மழை பெய்ததால், உடல்களை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டது. மழை நின்ற பின், இருவரின் உடல்களை கண்டுபிடித்தனர். அதை மீட்க,போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையே, 2,000 அடி ஆழ பள்ளத்தில், வாலிபர்கள் விழும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியானதால், மஹாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. dinamalar

கருத்துகள் இல்லை: