திங்கள், 31 ஜூலை, 2017

பரோலில் வருகிறார் பேரறிவாளன்

பேரறிவாளனை பரோலில் விடுவிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். அவரை பரோலில் விடுவிக்கச் சட்டத்தில் இடம் உள்ளது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியிருக்கிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டு கடந்த 16 மாதங்களாகப் படுத்த படுக்கையாக உள்ள தனது தந்தையைப் பார்க்க 30 நாட்கள் பரோலில் விட வேண்டும் என்று சிறைத் துறையினரிடம் பேரறிவாளன் மனு அளித்து இருந்தார்.மேலும் பேரறிவாளனின் தாய் அற்புதத்தம்மாளும் உடல்நிலை குன்றியிருக்கிறார். எனவே தனது மனுவில் பெற்றோர்களை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத நிலையில், அவர்களின் மகனாகச் சிறிது காலம் பெற்றோரை கவனித்துக் கொள்ளும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு பேரறிவாளன் சிறை விடுப்பு கோரியிருந்தார். ஆனால் அவரது மனு இதுவரை ஏற்கப்படவில்லை.
மேலும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன.
நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத்தொடரின் போதும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்திருந்தார். இந்நிலையில் சட்டத் துறை அமைச்சர் சிவி சண்முகம் சென்னையில் இன்று(31.7.2017) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும். இது குறித்து நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பேரறிவாளன் பரோல் தொடர்பாக தமிழக உள்துறை செயலருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். பேரறிவாளனுக்கு பரோல் வழங்கச் சட்டத்தில் இடம் உள்ளது. நளினி பரோல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது” என்று சிவி சண்முகம் கூறினார்.

கருத்துகள் இல்லை: