புதன், 2 ஆகஸ்ட், 2017

கக்கூசுக்கு இரட்டைவேடம் போடும் சுவச் பாரத் !


தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமானதாக்க வேண்டுமென்கிற கடமை உணர்ச்சியில் ஏற்கனவே இருந்த கழிவறைகளையும் தூய்மை இந்தியா திட்டத்தினுள் கடத்தி வந்துள்ளனர் அதிகாரிகள்.
கிராமத் தலைவர் எங்கள் வீட்டில் இருக்கும் சிதைந்து போன கழிவறையை சரிப் படுத்தச் சொல்லியிருக்கிறார். ஆனால், நான் முடியாதென்று சொல்லி விட்டேன். ஏன் நான் செய்ய வேண்டும்? ஏன் அவரே செய்யக் கூடாது? அப்புறம் சில என்.ஜி.ஓ பணியாளர்கள் வந்தனர். வெளியே மலம் கழிப்பவர்கள், அவர்கள் கழிக்கும் பீயை அவர்களே தின்ன வேண்டும் எனச் சொன்னார்கள். யார் பீயை தின்ன வேண்டும்? நானா நீங்களா என்று கிராமத் தலைவரைப் பார்த்துக் கேட்டு விட்டேன். யார் நேர்மையின்றி இருப்பது, நானா நீங்களா? நான் வெளிப்படையாகவே கேட்டு விட்டேன்” என்கிறார் ராஜ்ராணி.
அது மத்னா கேடா கிராமம். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம் தான் மத்னா கேடா. பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் “திறந்தவெளி கழிப்பிட ஒழிப்பு” (Open Defecation Free – ODF) நடவடிக்கையின் கீழ் மத்னா கேடா திறந்தவெளிக் கழிப்பிடங்கள் ஒழிக்கப்பட்ட கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் திட்டங்கள் எவ்வாறு தீட்டப்படுகின்றது, தீட்டப்பட்ட திட்டங்கள் எவ்வாறு அதிகார வர்க்கத்தால் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. மக்கள் திட்டங்களின் மூலம் எந்தளவுக்குப் பயனடைகின்றனர். என்பதையெல்லாம் புரிந்து கொள்ள தூய்மை இந்தியா திட்டம் ஒரு துலக்கமான உதாரணம். நாம் மத்னா கேடா கிராமத்தைச் சேர்ந்த ராஜ்ராணியின் கதைக்கே மீண்டும் திரும்புவோம்.
ராஜ்ராணிக்குத் திருமணம் ஆன சமயத்திலேயே அவரது புகுந்த வீட்டில் கழிவறை ஒன்று இருந்துள்ளது. இப்போது அவரது மகனுக்கு 16 வயது. “நீங்களே எங்கள் வீட்டில் இருக்கும் கழிவறையைப் பாருங்கள்; இதை யாராவது பயன்படுத்த முடியும் நிலையில் இருக்கிறதா? எனது கணவர் வெளியே வேலை செய்கிறார். இங்கே எல்லோரும் திறந்தவெளிகளில் தான் மலம் கழிக்கின்றனர். அந்த சமயத்தில் யாராவது கடந்து போனால் சேலையால் முகத்தை மறைத்துக் கொள்வோம்” என்கிறார் ராஜ்ராணி.

ஏழை மக்களின் பொருளாதார சூழல் வாழ்வதற்கான போராட்டத்தை எதிர்கொள்ளவே போதுமான ஆற்றலை அவர்களுக்கு வழங்குகின்றது. சொந்த வீடு வைத்துக் கொள்வதே ஆடம்பரமானதாக உள்ள நிலையில் அதில் கழிவறை கட்டுவதற்கு சில பத்து ஆயிரங்கள் செலவு செய்யும் வாய்ப்பு மக்களுக்கு அமைவதில்லை. தூய்மை இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக கழிவறைகள் கட்டப்படுகின்றன. 991 வாக்காளர்களைக் கொண்ட மத்னா கேடா கிராமத்தில், 188 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக காகிதங்கள் தெரிவிக்கின்றன.
உண்மையில் என்ன நடந்துள்ளது என்றால், தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமானதாக்க வேண்டுமென்கிற கடமை உணர்ச்சியில் ஏற்கனவே இருந்த கழிவறைகளையும் தூய்மை இந்தியா திட்டத்தினுள் கடத்தி வந்துள்ளனர் அதிகாரிகள். இதில் வேடிக்கை என்னவென்றால், ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன் சொந்தமாக கட்டிய கழிவறையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் – அதே கழிவறையை மாறுவேடமிட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழும் கணக்கு எடுத்துக் கொள்வார்கள்.
“கக்கூசுகளின் உலக வரலாற்றில் இரட்டை வேடங்களில் தோன்றும் மோடியின் தூய்மை இந்தியா கக்கூசு” என இந்த சாதனைக்கு சொந்தம் கொண்டாட எல்லாத் தகுதியும் மத்திய பாரதிய ஜனதாவுக்கு உள்ளது. நல்ல வேளையாக மத்னா கேடா கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளிலும் கழிவறை இல்லாத காரணத்தால் மொத்த கழிவறையின் எண்ணிக்கை அந்த ஊரின் மக்கள் தொகையை விட அதிகமாகும் கோமாளிக் கூத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
மத்னா கேடா கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர், அங்கே இருபது சதவீதம் பேருக்கும் மேல் திறந்தவெளியில் தான் மலம் கழிப்பதாகச் சொல்கிறார். எனினும், மேலதிகாரிகளின் அறிவுறுத்தலின் படியே “கக்கூசுகள் ஆள்மாறாட்டம்” செய்யப்பட்டு தனது கிராமம் “திறந்த வெளிக் கழிப்பிடங்கள் ஒழிக்கப்பட்ட” கிராமமாக தெரிவு செய்யப்பட்டது என்பதை அந்த கிராமத் தலைவர் ரமேஷ் பாபு ஒப்புக் கொள்கிறார்.
நாட்டின் தூய்மை திறந்தவெளிக் கழிப்பிடங்களால் தான் நாறிப் போனதா?
நமது பெருநகரங்களில் மேகமாய்க் கவிந்துள்ளது வாகனப் புகைமூட்டம். நமது ஆறுகளில் கொட்டப்படுகின்றன தொழிற்சாலைக் கழிவுகள். கதிராமங்கலம் போல் நாடெங்கும் இயற்கை வளங்களைச் சூறையாட நிலத்தடி நீர் மாடுபடுத்தப்படுகின்றது. நமது கடல்களில் கொட்டப்படுகின்றன அணுக் கழிவுகள். நமது குளங்களில் கலக்கின்றன சாயக் கழிவுகள். இன்னும் நாடெங்கும் தோண்டப்படும் சுரங்கங்களாலும், அழிக்கப்படும் காடுகளாலும், கிரானைட் கற்களுக்காக மலைகளும், முகடுகளும் வெட்டித் தரைமட்டமாக்கப்படுவதாலும் சீரழிந்து போயுள்ளது நமது சுற்றுச்சூழல்; அழிந்து போயுள்ளது பல்லுயிர்ச்சூழல்.
இவற்றுக்கெல்லாம் யார் காரணம்? திறந்தவெளிகளில் மலம் கழிக்கும் மக்களா, இயற்கையை கபளீகரம் செய்யும் முதலாளிகளா?
திறந்தவெளியில் கழிக்கப்பட்ட மலம் ஓரிருநாளி மட்கிப் போய், பின் உரமாக மண்ணோடு மண்ணாகி விடுகிறது. வைகுண்டராஜனால் திருடப்பட்ட கனிமங்களோ, ரெட்டி சகோதரர்களாலும், பி.ஆர்.பியாலும் மொட்டையடிக்கப்பட்ட மலைகளும், படிக்காசு ஆறுமுகம் போன்றவர்களால் கொள்ளையடிக்கப்பட்ட ஆற்று மணலும் மீண்டும் இயற்கைக்குத் திரும்புமா?
இந்த முதலாளிகளுக்கான ஆட்சியைத் தான் மோடி நடத்திக் கொண்டிருக்கிறார். பன்னாட்டு முதலாளிகளும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளும் நமது இயற்கையையும் சுற்றுச்சூழலையும் கூட்டு வல்லுறவு கொண்ட போது தெரித்து விழுந்த இரத்தத் துளிகளைத் தான் பங்குச் சந்தை குறியீட்டென்களில் அளந்து கொண்டிருக்கின்றனர் முதலாளியப் பொருளாதார நிபுணர்கள்.
எனினும், ஏழைகள் கக்கூசு கட்டாமல் விட்டதால் தான் இந்தியாவின் தூய்மை பரிபோய் விட்டதென அங்கலாய்த்து முக்கும் போது தான் தூய்மை இந்தியா போன்ற கூமுட்டைகள் பிறக்கின்றன. இந்தக் கூமுட்டைகளை அதிகாரிகள் தலையில் சுமந்து போய் அவித்துத் தின்றபின் விட்ட குசு எப்படி நாறும் என்பதைத் தான் மத்னா கேடா போன்ற கிராமங்கள் பறைசாற்றிக் கொண்டுள்ளன.

கருத்துகள் இல்லை: