ஞாயிறு, 8 மே, 2016

2021 இல் கூட்டணி ஆட்சியா? புள்ளி விபரம் அதைத்தான் சொல்கிறதா?

தினமலர் - நியூஸ் 7' நடத்திய கருத்துக்கணிப்பின் இறுதி முடிவுகளை, இன்று வெளியிடு கிறோம். இந்த முடிவுகள், ஒரு புதிய அரசியல் சூழல் நோக்கிய நகர்வை முன்னிலைப் படுத்துகின்றன.
அந்த நகர்வின் தாக்கம், இந்த தேர்தலில் ஓரளவிற்கு தெரியும் என்றாலும் இரு திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தையும் உடைக்கும் அளவிற்கான வேகத்தை பெறவில்லை. ஆனால், தமிழக கட்சிகளின் சுதந்திர போக்கு இன்னும் ஐந்தாண்டுகளுக்கு உழைப்போடு தொடருமானால், நிச்சயம் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.இந்த மாற்றத்திற்கான அறிகுறி, கருத்துக் கணிப்பு புள்ளி விவரங்களின் மூன்று அம்சங்களில் இருந்து வெளிப்படுகின்றன. அவை:

1. குறையும் கூட்டு ஓட்டு விகிதம்

2. ஏறுமுகத்தில் கூட்டணி கட்சிகளின் பங்கு

3. விடுபடும் ஆட்சி மாற்றத்திற்கான ஓட்டுகள்

கூட்டு ஓட்டு: இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் படி, தமிழக அளவில், தி.மு.க., - அ.தி.மு.க., அணிகளுக்கு இடையில் பெரிய ஓட்டு விகித வித்தியாசம் இல்லை.
தி.மு.க., அணி, 37.80 சதவீதமும், அ.தி.மு.க., அணி, 33.40 சதவீதமும் பெற்றுள்ளன. நோட்டா உட்பட மீதம் உள்ள கட்சிகளும், கூட்டணிகளும், 28.80 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளன.

இரு திராவிட கட்சி அணிகளின் ஓட்டு விகிதங்களை கூட்டினால், 71.20 சதவீதம் கிடைக்கிறது. கடந்த, 20 ஆண்டுகளில் இவ்வளவு குறைவான ஓட்டுகளை பெற்றிருப்பது இதுவே முதல் முறை. 1996ல் - 80.85 சதவீதம், 2001ல் - 88.76 சதவீதம்,2206-ல் 84.66 சதவீதம், 2011-ல் 91.46 சதவீதம் பெற்றிருந்தன.

கூட்டணிகளின் பங்கு: தமிழக தேர்தல் அரசியலில், திராவிட கட்சிகள், மெகா கூட்டணி அமைப்பது ஒரு வழக்கம். கடந்த, 20 ஆண்டுகளில் இதன் அதீதவெளிப்பாடு, 2001 தேர்தலில் இருந்தது. நண்டு -சிண்டு கட்சிகளில் தொடங்கி, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் வரை, அ.தி.மு.க., அணியில், 11 உறுப்பினர்களும், தி.மு.க., அணியில், 15 உறுப்பினர்களும்
இருந்தனர்.

திராவிட கட்சிகளின் கடந்த கால மாபெரும் ஓட்டு விகிதங்களில், கூட்டணி கட்சிகளின் பங்கு மிக முக்கியமாக இருந்துள்ளது. இரு பிரதான அணிகளிலும் இருந்த கூட்டணி கட்சிகளின் ஓட்டு விகிதங்களை கூட்டினால், 1996ல் - 17.31 சதவீதம், 2001ல் - 26.40 சதவீதம், 2006ல் - 25.56 சதவீதம், 2011ல் - 30.67 சதவீதம் என, அவற்றின் பங்கு ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

தற்போது, தி.மு.க., அணியில் உள்ள காங்கிரஸ் தவிர மற்ற வழக்கமான கூட்டணி கட்சிகள், திராவிட அணிகளுக்கு வெளியே உள்ளன. 2011ல் காங்கிரசுக்கு, 9.30 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. இதை மேற்கண்ட, 2011ன் இதர கட்சி பங்குகளில் இருந்து கழித்தால், 21.37 சதவீதம் கிடைக்கிறது. ஒப்பிடுகையில், இந்த முறைகருத்துக்கணிப்பின் படி, நோட்டா உட்பட இதர கட்சிகளின் பங்கு, 28.80 சதவீதமாக உள்ளது. இந்த, 7.43 சதவீத புள்ளி உயர்வு, திராவிட கட்சிகளின் ஓட்டு வங்கி சிதைவை குறிக்கிறது.

நோட்டா வாக்காளர்கள், நல்ல கட்சி அல்லது வேட்பாளர்களுக்காக காத்திருப்பவர்கள் என்பதால் அவர்களையும் இந்த கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டி உள்ளது. இந்த, 28.80 சதவீதத்தோடு, காங்கிரசின் பங்கையும் சேர்த்தால், 38.10 சதவீதம் கிடைக்கிறது. பெருவாரியான தொகுதிகளில் இத்தகைய ஓட்டு விகிதம் வெற்றியை தரக் கூடியது.

விடுபடும் ஓட்டுகள்:
ஒவ்வொரு தேர்தலிலும், ஆட்சியை இழக்க உள்ள திராவிட கட்சி இழக்கும் ஓட்டுகளில் பெரும் பகுதியை, எதிரணியில் உள்ள திராவிட கட்சி பிடித்துக் கொள்ளும். இப்படி பிடிக்கப்படாமல் விடுபடும் ஓட்டுகள், 1996ல் - 8.99 சதவீதம், 2001ல் - 7.91 சதவீதம், 2006ல் - 4.1 சதவீதம், 2011ல் - 6.8 சதவீதம் என, 10 சதவீதத்திற்குள் தான் இருந்தது. ஆனால் இந்த முறை, கருத்துக்கணிப்பின் படி விடுபடும் ஓட்டுகள், 20.26 சதவீதமாக உள்ளது.

அதாவது, அ.தி.மு.க., இழக்கும் ஓட்டுகளில் பெரும் பகுதி, தி.மு.க.,விற்கு கிடைக்கவில்லை. அதனால், இரு திராவிட அணிகளுமே, 2011ஐ ஒப்பிடுகையில் ஓட்டு விகிதத்தை

இழக்கின் றன. 2011ல் அ.தி.மு.க., அணி, 51.93 சதவீதமும், தி.மு.க., அணி,39.53 சதவீதமும் பெற்று இருந்தன. இது, கருத்துக்கணிப்பின் படி, முறையே, 33.4 மற்றும், 37.8 சதவீதமாக உள்ளது. அ.தி.மு.க., 18.53 சதவீத புள்ளிகளும், தி.மு.க., 1.73 சதவீத புள்ளிகளும் இழக்கின்றன.

இந்த தேர்தலுக்கு என்ன?: கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, 70 தொகுதிகளில் இழுபறி நிலை உள்ளது. அதாவது,
அந்த தொகுதிகளின் முதல் இரண்டு இடங்களில் உள்ள கட்சிகளுக்கு இடையில் உள்ள ஓட்டு விகித வித்தியாசம், 5 சதவீத புள்ளிகளுக்கு மேல் இல்லை. இந்த தொகுதிகளில் பலவற்றில் இழுபறிக்கு காரணமாக இருப்பது, ம.ந.கூ., - பா.ம.க., ஓட்டுகளும், நோட்டா அல்லது தேர்வை முடிவு செய்யாத வாக்காளர்களும் தான். இவற்றில், 10 சதவீதத்திற்கு மேல் உள்ள தொகுதிகளை பட்டியலிட்டு உள்ளோம் (பட்டியலை பார்க்கவும்). இந்த பட்டியலில், இதர வேட்பாளர்களுக்கான ஓட்டுகள், 5 சதவீதத் திற்கு மேல் எங்கெல்லாம் உள்ளது என்பதும் குறிப்பிடப்பட்டு உள்ளது. திராவிட கட்சிகள் இந்த தொகுதிகளில் ஜெயிக்க முனைந்தால், மற்ற கட்சிகளிடம் இருந்து ஓட்டுகளை எடுத்துக் கொண்டால் தான் முடியும்.

இதில், பா.ம.க., - பா.ஜ., மற்றும் இதர வேட்பாளர்களுக்கான ஓட்டுகள் மாறுவதற்கு வாய்ப்பு குறைவு. நோட்டா அல்லது தேர்வை முடிவு செய்யாத வாக்காளர்களின் ஓட்டுகளும், ம.ந.கூ.,வின் ஓட்டுகளும் தான் மாறக் கூடிய ஓட்டுகள்.

தமிழக அளவில், ம.ந.கூ., 10.60 சதவீதம் ஓட்டுகளை கருத்துக்கணிப்பில் பெற்றுள்ளது. இக்கூட்டணிக்கு வாக்களித்துள்ளவர்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு நபர், கூட்டணி ஆட்சியை விரும்பாதவர் என, கணிப்பில் குறிப்பிட்டுள்ளார். அதனால் இந்த சதவீதத்தில் ஒரு பகுதியினர், பெரிய திராவிட கட்சிகளில் ஏதேனும் ஒன்றின் பக்கம் சாயக் கூடும்.

அப்படி சாய்ந்தாலும், ஒரு பகுதி தேர்வை முடிவு செய்யாதவர்களின் ஓட்டுகள், 'வாங்க'ப்பட்டாலும், இரண்டு திராவிட கட்சிகளுமே தனிப்பெரும்பான்மை எடுப்பது சிரமம் என்ற சூழல் உள்ளது. மேலும் இரு திராவிட கட்சிகளுக்கு இடையிலான இடைவெளி, மிகவும் குறைவாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

அந்த சூழலில், ஓரிரு தொகுதிகளை கையில் வைத்துள்ள கட்சிகளுக்கு தான் கிராக்கி இருக்கும். ஆனால், வழக்கமாக கூட்டணியில் மட்டும் இருந்து கொண்டு ஆட்சியில் பங்கு கேட்காத அந்த கட்சிகள், இந்த முறை கூட்டணி ஆட்சி பற்றி உருவாகியுள்ள எதிர்பார்ப்பு மற்றும் தொங்கலான அரசியல் சூழலால் ஆட்சியில் பங்கு கேட்டால் ஆச்சரியப்படு வதற்கு இல்லை.

இந்த முறை, தாங்கள் ஓட்டளிக்கும் கட்சியின் வெற்றி - தோல்வியை பற்றி கண்டு கொள்ளாமல், வாக்காளர்கள் கருத்துக் கணிப்பில் தங்கள் தேர்வுகளை வெளிப் படுத்தியது போல் தேர்தலிலும் வெளிப் படுத்தினால், தமிழகத்தில் அரசியல் சூழல் மாறுவது நிச்சயமாகிவிடும்.

- நமது சிறப்பு நிருபர்


தினமலர்.கம
- நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை: