சனி, 14 மே, 2016

பிடிபட்ட கன்டெய்னர் 3; தப்பவிட்டது 5..! -அதிரும் 'ஐதராபாத் ரகசியம்'

விகடன்.com திருப்பூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பிடிபட்ட 'கன்டெய்னர் கரன்ஸிகள்' குறித்து சில அதிரடித் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. ' கோவையில் இருந்து ஐதராபாத்துக்கு கடத்தப்பட்ட எட்டு கன்டெய்னர்களில் மூன்று மட்டுமே பிடிபட்டது' என அதிர வைக்கின்றனர் அதிகாரிகள்.

நேற்று நள்ளிரவில் கோவையில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், நள்ளிரவு ஒரு மணியளவில் மூன்று கன்டெய்னர் லாரிகளும், சில இன்னோவா கார்களும் அடுத்தடுத்து வந்துள்ளன.
லாரிகளுக்குப் பாதுகாப்பாக வரும் இன்னோவா கார்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
'கோவை ஸ்டேட் வங்கியில் இருந்து விசாகப்பட்டினத்திற்குப் பணம் கொண்டு செல்லப்படுவதாகவும், முழுக்க ரிசர்வ் வங்கியின் பணம் என்றும்' தெரிவித்துள்ளனர். இன்னோவா கார்களில் மப்டி உடையில் ஆந்திர போலீஸார் இருந்தது, தேர்தல் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்டெய்னர் லாரிகளையும் பறிமுதல் செய்தனர். 'மொத்தம் 570 கோடி ரூபாய் பிடிபட்டிருப்பதாக' வெளியான தகவலால் அதிர்ந்து போனது அரசியல் கட்சிகள்.

அதிலும், மப்டியில் ஆந்திர போலீஸார் இருந்தது சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக, நம்மிடம் பேசிய வங்கி அதிகாரி ஒருவர், " பறக்கும் படை சோதனையில் மூன்று கன்டெய்னர்கள்தான் பிடிபட்டது. ஆனால், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஐந்து கன்டெய்னர்கள் ஐதராபாத் சென்றுவிட்டன. ஆந்திரா போலீஸார் ஏன் இருந்தார்கள்? ஐதராபாத்துக்கு பணத்தை அனுப்பச் சொன்ன அரசியல் புள்ளி யார் என்பதெல்லாம் மிகுந்த ரகசியம். அத்தனை பணமும் கோவையைச் சேர்ந்தது. கன்டெய்னர்களில் அனுப்பப்பட்ட பணத்திற்குப் பின்னால், தமிழகத்தின் மூத்த முக்கியப் புள்ளி ஒருவர் இருக்கிறார். அவரது உத்தரவின்பேரில்தான் இந்த வாகனங்கள் ஐதராபாத் சென்றன. தேர்தலுக்கு முன்பே இந்தப் பணம் அனுப்பப்பட வேண்டியது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, 'கன்டெய்னர்களை அனுப்ப முடியுமா?' என்ற சந்தேகத்தின்பேரில்தான், அவசர அவசரமாக பணத்தை அனுப்பியுள்ளனர். முறையான விசாரணை நடத்தப்பட்டால், கன்டெய்னர் ரகசியங்கள் அம்பலமாகும்" என அதிர வைத்தார்.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய ஸ்டேட் வங்கி அதிகாரி ஒருவர், " அலுவல்ரீதியான விளக்கத்தை மட்டுமே எங்களால் தர முடியும். கன்டெய்னர்களின் அனுப்பப்பட்ட பணம் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமானது. ஒவ்வொரு முறையும் ஸ்டேட் வங்கிகளில் கூடுதலாக பணம் இருந்தால், எந்த ஊரில் தேவை இருக்கிறதோ அங்கு அனுப்புவோம். அதன் அடிப்படையில் ஒரு வாரத்திற்கு முன்பே, 'ஐதராபாத்துக்கு பணம் அனுப்ப வேண்டும்' என ரிசர்வ் வங்கியில் இருந்து தகவல் வந்தது. 'தேர்தல் நடப்பதால் அனுப்ப முடியாது' எனத் தெரிவித்தோம். ஆனாலும், 'பணத்தை அனுப்பியே ஆக வேண்டும்' என அதிகாரிகள் கட்டாயப்படுத்தியால்தான், ஐதராபாத்துக்கு பணம் அனுப்பினோம்" என்றார்.

" கோவையில் இருந்து ஐதராபாத்துக்கு அவசரம் அவசரமாக கரன்ஸி குவியல்கள் ஏன் அனுப்பப்பட்டது என்பதற்கு முறையான விசாரணை நடத்தப்படுமா? அன்புநாதன் விவகாரம் போலவே அமுங்கிப் போகுமா? என்பதற்கெல்லாம் ஆணையம்தான் விளக்கமளிக்க வேண்டும்" என்கின்றன அரசியல் கட்சிகள். 

 ஆ.விஜயானந்த்
 

கருத்துகள் இல்லை: