வியாழன், 12 மே, 2016

சரவணா ஸ்டோர்ஸ்... இந்த ரொம்ப நல்ல மனுசனோட இன்னொரு முகம் தெரியுமா?

மு.ரா. பேரறிவாளன்'s photo.இந்த ரொம்ப நல்ல மனுசனோட இன்னொரு முகம் தெரியுமா?
ஏகப்பட்ட மனித உரிமை மீறல்கள் அறங்கேறும் சரவணா ஸ்டோர் கடையில் வேலை பார்க்கும் பெண்ணிடம் ஒருவர் உரையாடி ஏற்கனவே இணையத்தில் எழுதப்பட்ட செய்திதான் இது..
கேள்வி: ‘‘எந்த ஊர் நீங்க?’’
பதில்: ‘‘திருவண்ணாமலை பக்கம்..’’ ‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல..’’ ‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’
கேள்வி: ‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’
பதில் ‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’
கேள்வி:‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் உண்டா?’’
பதில்:‘‘ஷிப்டா... அதெல்லாம் தெரியாதுண்ணேன். காலையில வரணும். நைட் போகனும். அவ்வளவுதான்..’’  நமக்கு வந்த காரசாரமான ஒரு செய்திதான் இது... அங்காடி தெருவை விட மோசமாக இருக்கும் போல

கேள்வி: ‘‘சாப்பாடு?’’
பதில்:‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்ச, கொஞ்ச பேரா போய் சாப்பிட்டு வருவோம்.’’
கேள்வி: ‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க?’’
பதில்: ‘‘12 மணி, 1 மணி ஆகும். காலையில எழுந்ததும் வந்திருவோம்’’
கேள்வி:‘‘தங்குற இடம், சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குமா?’’
பதில்:‘‘அது பரவாயில்லண்ணேன். நாள் முழுக்க நின்னுகிட்டே இருக்குறோமா... அதுதான் உடம்பு எல்லாம் வலிக்கும்.’’
கேள்வி: ‘‘உட்காரவே கூடாதா?’’
பதில்: ‘‘ம்ஹூம்.. உட்காரக் கூடாது. வேலையில சேர்க்கும்போதே அதை எல்லாம் சொல்லித்தான் சேர்ப்பாங்க. மீறி உட்கார்ந்தா கேமராவுல பார்த்துட்டு சூப்பரவைசர் வந்திடுவார்’’ - (யாரோ ஒரு வாடிக்கையாளருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதையும் சூப்ரவைஸர் கேமராவில் பார்க்கக்கூடும். அதனால் அந்தப் பெண் இங்கும் அங்குமாக துணிகளை எடுத்து வைத்தபடியேப் பேசுகிறார்.)
கேள்வி: ‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’
பதில்: ‘‘5,500 ரூபாய்.’’
கேள்வி: ‘‘வெறும் 5500 ரூபாய்தானா? வேற ஏதாவது முன்பணம், கல்யாணம் ஆகும்போது பணம் தர்றது... அதெல்லாம் உண்டா?’’
பதில்:‘‘இல்லண்ணே... அது எதுவும் கிடையாது. இதான் மொத்த சம்பளம்.’’ ‘‘இதை வெச்சு என்ன பண்ணுவீங்க?’’ ‘‘தங்குறது, சாப்பாடு ஃப்ரீ. எனக்கு ஒண்ணும் செலவு இல்லை. சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம் அனுப்புவேன். மீதி பேங்க் அக்கவுண்டுல போட்டுருவேன்’’
கேள்வி: ‘‘எத்தனை வருஷமா இங்கே வேலைப் பார்க்குறீங்க?’’
பதில்:‘‘அஞ்சு வருஷம் முடியப் போகுது. அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான். இன்னும் ஏத்தலை..’’
கேள்வி::‘‘வேலைக்கு சேர்ந்த முதல் மாசத்துலேர்ந்து மாசம் 5500 ரூபாய்தான் சம்பளமா?’’
பதில்:‘‘ஆமாம்.’’
கேள்வி: ‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்களா?’’
பதில்: ‘‘சூப்ரவைசருங்க வாங்குவாங்க. அதுவும் பத்து வருஷம் வேலை பார்த்திருந்தாதான். இல்லேன்னா ஏழாயிரம், எட்டாயிரம்தான்.’’
கேள்வி: ‘‘லீவு எல்லாம் உண்டா?’’
பதில்: ‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு. அதுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளத்துலப் பிடிச்சுக்குவாங்க.’’
கேள்வி: ‘‘பிடிச்சுக்குவாங்களா? அப்படின்னா லீவே கிடையாதா?’’
கேள்வி: ''நீங்க ட்ரெஸ் லாம் எங்கே எடுப்பீங்க?"
பதில்: ''பாண்டி பஜார் ல எடுப்போம்னே.. இங்க விக்கிற விலைக்கு வாங்க முடியுமா?"
''கேள்வி: ‘‘உங்களுக்கு இங்கே விலை குறைச்சு தரமாட்டாங்களா?’’
பதில்: ‘‘ம்ஹூம்... அதெல்லாம் தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன விலையோ, அதான் எங்களுக்கும்’’
கேள்வி: ‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’’
பதில்: ‘‘தெரியலை..’’
கேள்வி: ‘‘ஊர்ல என்ன பண்றாங்க..’’
பதில்: ‘‘நெல் விவசாயம்..’’
கேள்வி: ‘‘எவ்வளவு நிலம் இருக்கு?’’
பதில்:‘‘தெரியலை.. ஆனால் கம்மியாதான் இருக்கு’’
கேள்வி: ‘‘இங்கே இப்படி கஷ்டப்பட்டு வேலைப் பார்க்குறதுக்குப் பதிலா ‘சரவணா ஸ்டோர்ஸ்ல வேலைப் பார்த்தேன்’னு சொல்லி திருவண்ணாமலையிலேயே ஒரு துணிக்கடையில வேலை வாங்க முடியாதா?’’
பதில்: ‘‘வாங்கலாம். ஆனா இதைவிட கம்மியா சம்பளம் கொடுப்பாங்க. இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும் சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ. சம்பளக் காசு மிச்சம். அங்கே அப்படி இல்லையே..’’
கேள்வி: ‘‘இங்கே எவ்வளவு பேரு வேலைப் பார்ப்பீங்க?’’
பதில்: ‘‘இந்த ஒரு கடையில மட்டும் பொம்பளைப் பிள்ளைங்க மட்டும் 800 பேர் இருக்கோம்.’’
‪#‎இது‬ சரவணா ஸ்டோரில் வேலை பார்க்கிற ஊழியர்களின் நிலை. சரவணா ஸ்டோருக்கு வரும் வாடிக்கையாளர்கள் நடத்தப்படும் விதம் எப்படியென்று தெரியவேண்டுமா? மேலே படியுங்கள்#
சரவணா ஸ்டோரில் வாடிக்கையாளர்கள் தாக்கப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். இதை மாம்பலம் காவல் நிலையம் கண்டுகொள்வதே இல்லை என கூறப்படுகிறது.
சரவணா ஸ்டோர் ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கொஞ்ச காலத்திற்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது.
சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களால் தாக்கப்பட்ட அந்த இலங்கைத் தமிழரின் பெயர் இளஞ்செழியன். கடந்த பத்தாண்டுகளாக லண்டனில் குடும்பத்துடன் வசிக்கும் இவர், ‘விடுமுறையில் சென்னைக்கு வந்த இடத்தில்தான் இப்படியரு விபரீதம்.
மருத்துவமனையில் இளஞ்செழியனை சந்தித்துப் பேசிய செய்தியாளர்களிடம் அவர் சொன்ன தகவல்...
‘‘நான் இலங்கைத் தமிழன். தமிழ்நாடு மீதும் தமிழர்கள் மீதும் கொண்ட பற்று காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்து செட்டிலானேன். நந்தனம் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றேன்.
லண்டனில் கடந்த பத்து ஆண்டுகளாகக் குடும்பத்துடன் தங்கியிருந்து வியாபாரம் செய்து வருகிறேன். விடுமுறையைக் கழிக்க கடந்த ஜூன் மாதம் 25_ம் தேதி மனைவி சுதர்ஷினி, மகள்கள் நளாயினி, சிந்து ஆகியோருடன் சென்னை வந்தேன். கடந்த 21_ம் தேதி (சனிக்கிழமை) மீண்டும் லண்டன் கிளம்ப ஆயத்தமானோம். விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த நிலையில் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்க 20_ம் தேதியன்று, இரவு ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ்க்கு சென்றோம்.
குழந்தைகளுக்கு பொம்மை, துணிமணிகள் உள்பட பத்தாயிரம் ரூபாய் வரை பொருட்கள் வாங்கினோம். அப்போது என் மூன்று வயது மகள் நளாயினி கடையில் இருந்த ஒரு பந்தைக் காட்டி அதைக் கேட்டாள். அங்கிருந்த ஊழியர் என் மகள் கையில் பந்தைக் கொடுத்தார்.
அந்தப் பந்துக்கான பத்து ரூபாயைச் செலுத்தி ரசீதையும் என் மனைவி வாங்கிக் கொண்டாள். பின்னர் அங்கிருந்து நகர்ந்து கீழ்த்தளத்துக்கு வந்தோம்.
அப்போது என் மகளை நான் தூக்கி வைத்திருந்தேன். அவள் கையில் இருந்த பந்தைப் பார்த்து ஓர் ஊழியர் எங்களை வழிமறித்து ‘குழந்தையின் கையில் இருக்கும் பந்துக்குப் பணம் செலுத்தி விட்டீர்களா?’ என்று கேட்டார். என் மனைவி பணம் செலுத்தி விட்டதைக் கூறி கையில் இருந்த ரசீதையும் காட்டினாள். அப்போது திடீரென அங்கு வந்த மற்றொரு ஊழியர் என் மகளிடம் இருந்த பந்தை வெடுக்கென பிடுங்கிக் கொண்டு போய் விட்டார்.பந்து பறிபோனதால் என் மகள் சத்தமிட்டு அழுதாள். உடனே ‘‘ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? குழந்தையிடம் பந்தை திருப்பிக் கொடுங்கள்!’’ என்று நான் சத்தம் போட்டேன்.
மறுநிமிடம் என் பின்னால் இருந்து ஓர் ஊழியர் என்னை ‘மடேர்’ என்று தலையில் அடித்து விட்டார். நான் மகளை கீழே இறக்கி விட்டுத் திரும்ப முயன்றேன். அதற்குள் மற்றொரு ஊழியர் என்னைக் கீழே தள்ளினார். நான் எழுந்திருக்க முயல்வதற்குள் பத்துப்பேர் கும்பலாகச் சேர்ந்து என்னை நையப் புடைத்தார்கள். கையில் கிடைத்த எவர்சில்வர் பாத்திரங்களை எடுத்து என் கை, முதுகு, கழுத்து என அடிக்க ஆரம்பித்தனர். நான் தாக்கப்படுவதைப் பார்த்து என் மகள் நளாயினி பயத்தில் வாந்தியெடுத்து விட்டாள்.என் மேல் விழுந்த அடிகளைத் தடுக்க முயன்ற என் தந்தையும், மருத்துவருமான சண்முகநாதனை வயதானவர் என்று கூடப் பார்க்காமல் தள்ளி விட்டனர். அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்து எங்களை மீட்டனர்.
கடைக்கு வெளியே என்னை அவர்கள் அழைத்து வந்தனர். முதுகில் கடுமையான வலி இருந்ததால் சட்டையைக் கழற்றிப் பார்த்தேன். ரத்தக்கட்டுகளும், காயங்களும் இருந்தன. அதைப் பார்த்து சக வாடிக்கையாளர்கள் கொதித்துப் போய்விட்டனர். என் மனைவி ஏறத்தாழ மயக்கம் போட்டுவிழும் நிலைக்கு வந்துவிட்டாள். உடனே நான் செல்போன் மூலம் போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் சொன்னேன். சற்று நேரத்தில் மாம்பலம் போலீஸார் அங்கே வந்து என்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் என் காயங்களைப் பார்த்த போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அதற்குள்ளாக போலீஸாருக்கு எங்கிருந்தோ போன் வந்துவிட ‘இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இப்படியே விட்டுவிடுங்கள்’ என்று போலீஸார் என்னிடம் காம்ப்ரமைஸ் செய்ய முயன்றார்கள்.
அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. ‘இனிமேல் தமிழ்நாட்டில் யாருக்கும் இப்படியரு சம்பவம் நடக்கக்கூடாது. வழக்குப்பதிவு செய்யுங்கள்’ என்று கண்டிப்பாகக் கூறினேன். அதன் பிறகுதான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தார்கள்.இந்தச் சம்பவம் மீடியாக்களில் வெளிவந்த பிறகு ஏராளமானோர் என்னைத் தொடர்பு கொண்டு ‘நாங்களும் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களால் இப்படி பாதிக்கப்பட்டுள்ளோம்’. ஆனால் நீங்கள்தான் தைரியமாக போலீஸ்வரை போய் புகார் கொடுத்திருக்கிறீர்கள்’’ என்று எனக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.
பத்தாயிரம் ரூபாய்க்குப் பொருள் வாங்கும் நான், பத்து ரூபாய் கொடுத்து பந்து வாங்க மாட்டேனா? என்னைப் பார்த்தால் பந்து திருடுபவன் மாதிரியா இருக்கிறது? அப்படியே இருந்தாலும் எடுத்த எடுப்பில் ஒருவர் மீது கை வைக்கலாமா? லண்டனில் ஒரு போலீஸ்காரர் கூட சாதாரண ஆளை இப்படிப் போட்டு துவைத்து விட முடியாது. அப்படித் தாக்கினால் நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழும்’’ என்றார் அவர் வேதனையுடன்.
(இது லண்டன் இல்லப்பா.. பெரு முதலாளிகளின் சொர்க்க பூமியான இந்தியா)
இப்படி நிறைய சம்பவங்கள்... இஸ்லாமிய பெண்ணை பர்தா நீக்கி சோதனை செய்ய முயன்றதாக ஒரு சம்பவம். விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடம் என ஒட்டுமொத்த சுரண்டலின், அத்துமீறலின், ஒழுக்கக்கேட்டின், அயோக்கியத்தனங்களின் அடையாளமாகதான் சரவணா ஸ்டோர் உயர்ந்து நிற்கிறது.
ஆக சரவணா ஸ்டோர் உரிமையாளர் விளம்பரத்தில் நடித்தது இணையத்தில் பலராலும் கேலிக்குள்ளாகும் இந்நேரத்தில் இந்த செய்தியை நான் பகிர காரணம்...
இவர்களை சாதாரனமாக கேலி செய்தால் போதுமா? இந்த கேடுகெட்ட கேரக்டரை ஊடுகட்டி அடித்தாலும் தப்பே இல்லை...

கருத்துகள் இல்லை: