செவ்வாய், 10 மே, 2016

மதுரவாயல் மே 5, 2016 டாஸ்மாக் முற்றுகை போர்க்களத்தில்………பாகம் 2


போலீசால் தலையில் தாக்கப்பட்ட சத்யா தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். பெண்கள் விடுதலை முன்னணியில் பணியாற்றும் அவர் பல போராட்டங்களை பார்த்தவர். மதுரவாயல் நொளம்பூர் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு அப்பகுதியில் பல நாட்கள் பிரச்சாரமும் செய்திருக்கிறார். அதில் டாஸ்மாக்கால் ஆண்களை பலி கொடுத்த பல குடும்பங்களின் கதைகள் அவரிடம் இருக்கின்றன.
போராட்டத்தன்று போலிசின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நேரில் கண்டவர் அடிபட்டது எப்படி? குழந்தைகளையும், பெண்களையும் தொடர்ந்து தாக்கிய போலிசை சத்யாவும் தொடர்ந்து எதிர்த்திருக்கிறார். ஆண் போலிசோடு போட்டி போட்டுக் கொண்டு பெண் போலிசும் பெண்களை கடுமையாக தாக்கியிருக்கிறது.
குறிப்பாக பெண்களின் உடைகளை பிடித்து இழுத்து அவமானப்படுத்தியிருக்கிறது. ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படி நடக்கலாமா என்று சத்யா, அப்பெண் போலிசைக் கேட்டதற்கு அவர்களோ தொடர்ந்து மக்களை திட்டியிருக்கிறார்கள்.
“யாருக்கு முந்தானை விரித்தாய்” என்று அவர்கள் சொன்னதை இப்படியெல்லாம் ஏன் இழிவு படுத்துகிறீர்கள், நீங்கள் அப்படித்தானா என்று திருப்பிக் கேட்ட சத்யாவை உடனே லத்தியால் நெற்றியில் அடித்திருக்கிறார்கள். ஒரு பெண் போலிசை அப்படி கேட்கும் போது வரும் கோபம் மக்களை அப்படி இழிவது படுத்தும் போதும் அதே மாதிரிதானே வரும்?
நெற்றியில் இரத்தம் கொட்டியதைப் பார்த்து சுற்றி நின்ற மக்கள் குறிப்பாக பெண்கள் போராட்டக் களத்திற்கு வருகிறார்கள். இவர்கள் வருவதைப் பார்த்த பெண் போலிசார் ஓடி விடுகின்றனர். தமது அடையாள அட்டையை மறைத்துக் கொள்கின்றனர்.
தான் அடிபட்டதை விட அதைப் பார்த்து சுற்றியிருந்த மக்கள் உடன் ஓடி போராட்டத்தில் கலந்து கொண்டார்களே அதுதான் மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் சத்யா!
தன் வலியைக் கூட பிறர் நலனுக்காக மறக்கும் இவர்கள்தான் மக்கள் அதிகாரத்தின் பலம்!

கருத்துகள் இல்லை: