சனி, 14 மே, 2016

தேர்தல் ஆணையமா அம்மா ஆணையமா ?

EC_1சட்டம், விதிமுறைகள், மரபுகள் ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படாதது மட்டு மல்ல, மான, ரோசம் அனைத்தையும் உதிர்த்து விட்டு நிற்கிறது தேர்தல் ஆணையம்.
vinavu :அரசியல் சாசனம் தொடங்கி நீதிமன்றங்கள் ஈறாக முதலாளித்துவ அறிவுஜீவிகளால் புனிதமானதாக விதந்தோதப்படுகின்ற நிறுவனங்களின் டவுசரைக் கழட்டுவதில் புர்ரட்ச்சித்தலைவிக்கு ஈடு இணையாக வேறொருவரைக் குறிப்பிடவே முடியாது. ஜெயா, தனது முதல் ஆட்சிக் காலத்தில், சட்டமன்ற நாற்காலிகளிலேயே பெரும் புனிதமாகக் கூறப்படும் சபாநாயகர் இருக்கையில் தான் அமர்ந்தும், சட்டமன்ற உறுப்பினராகக்கூட இல்லாத தனது தோழி சசிகலாவைத் துணை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தும், பீற்றிக் கொள்ளப்பட்ட சட்டமன்றத்தின் மாண்பு, நெறிகளை உடைத்துப் போட்டார்.
2001-இல் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தகுதியைக்கூட இழந்து நின்ற அவர், அத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, அப்பொழுது ஆளுநராக இருந்த உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி பாத்திமாபிவியைச் சரிக்கட்டி, ஊழல் கிரிமினல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் முதலமைச்சராகப் பதவியேற்க முடியும் என்ற சரித்திர சாதனையை நிகழ்த்திக் காட்டி, இந்திய அரசியல் சாசனத்தையே ஆட்டங்கான வைத்தார்.
அ.தி.மு.க. தலைமையால் பல கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்ட கரூர்-அன்புநாதன் குடோன்

பிறகு, இவ்விசயத்தில் உச்சநீதி மன்றம் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் மானத்தைக் காப்பாற்ற நேர்ந்தது. அதே உச்சநீதி மன்றம் டான்சி வழக்கின் தீர்ப்பை எழுதும் போது, அவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஜெயாவிடம் டான்சி நிலத்தைத் திருப்பிக் கொடுத்துப் பரிகாரம் தேடிக் கொள்ளுமாறு, அவரது மனச்சான்றுக்கு வேண்டுகோள்வைத்தது. சொத்துக் குவிப்பு வழக்கிலோ, தண்டிக்கப்பட்ட அவருக்குச் சட்டத்தை மீறி பிணை வழங்கியது மட்டுமின்றி, அவருக்குச் சாதகமாக அந்த வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடித்துக் கொடுக்கும் ஏஜெண்டாகவும் செயல்பட்டது.
இந்த வரிசையில், அரசியல் சாசனத்திற்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்ட, சுதந்திரமான நிறுவனமாகக் கூறப்படும் தேர்தல் ஆணையம் கடந்த ஐந்தாண்டுகளாக அம்மா ஆணையமாகச் செயல்பட்டு வருவதைப் பார்க்கிறோம். டி.என்.சேஷன் தேர்தல் ஆணையத்தைக் கறாரான, கடமை தவறாத, நடுநிலையான அமைப்பாக மாற்றிவிட்டதாக நடத்தப்படும் “டெரரான” பிரச்சாரமெல்லாம் வெறும் காமெடி என்று தமிழகத் தேர்தல் ஆணையர்களாக இருந்த பிரவீண் குமாரும், சந்தீப் சக்சேனாவும், தற்போதயை ஆணையர் ராஜேஷ் லக்கானியும் தமது அ.தி.மு.க. சார்பு நடவடிக்கைகள் மூலம் காட்டி விட்டார்கள்.
ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் சட்டமன் றத் தேர்தல்களில் ஏறத்தாழ 50,000 கோடி ரூபாய் அளவிற்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்கிறார், ரிசர்வ் வங்கி யின் கவர்னர் ரகுராம் ராஜன். சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவுள்ள மாநிலங்களிலேயே, தமிழகத்தில்தான் பணப் பட்டுவாடா அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதைத் தேர்தல் ஆணையமும் ஒத்துக்கொண்டு, அறிக்கை அளித்திருக்கிறது. இதன்பொருள் இந்த 60,000 கோடி ரூபாயில் பெரும்பகுதி தமிழகத்தில் புழங்க விருக்துக்றது என்பதுதான்.
ஒவ்வொரு தொகுதிக்கும் 10 கோடி ரூபாய் வீதம் 2,340 கோடி ரூபாயை அ.தி.மு.க. வாரியிறைக்க உள்ளதாகத் தமிழகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. மேலும், பணப்பட்டுவாடாவில் அ.தி.மு.க.வோடு, தி.மு.க. உள்ளிட்ட எந்தவொரு கட்சியும் போட்டிபோட முடியாது என்பதும் நாளுக்கு நாள் நிரூபணமாகி வருகிறது. ஜெயா-சசி கும்பலின் கையில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் மட்டுமின்றி, அதிகாரமும் இருப்பது பணப்பட்டுவாடாவை எளிதாக்கிவிட்டது.
EC_2
சென்னை எழும்பூர் பகுதியிலுள்ள தஞ்சாவூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் துணைச் செயலர் விஜயகுமாரின் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு.
108 ஆம்புலன்ஸ் வேன்கள், ஆம்புலன்ஸ் பைக்குகள், பால் வண்டிகள், தண்ணீர் லாரிகள், போலிக அதிகாரிகளின் சைரன் வைத்த வாகனங்கள், பிண ஊர்திகள் எனப் பல்வேறு வழிகளில் தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அ.தி.மு.க.வால் பணம் எடுத்துச் செல்லப்படுவது அம்பலமான பிறகும், தேர்தல் ஆணையம் அமைத்துள்ள பறக்கும் படை அதில் ஒரு நயாபைசாவைக்கூடச் சோதனையிட்டுப் பிடிக்கவில்லை. மாறாக, சிறு வியாபாரிகள் கையில் எடுத்துச் செல்லும் பணம் தான் பெருமளவில் சோதனைச் சாவடிகளில் பறிமுதல் செய்யப்படுகிறது.
ஜெயா-சசி கும்பலுக்குச் சொந்தமான சிறுதாவூர் பங்களா அ.தி.மு.க. வின் பணப் பதுக்கல் மற்றும் பட்டுவாடாவின் மையமாக இருந்து வருவது சில நாட்களுக்கு முன்பு புகைப்பட ஆதாரங்களோடு அம்பலமானது. ஆனால், சிறுதாவூரில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உறுதி செய்யப்படவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்துவிட்டதாகக் கூறி. ஜெயா-சசி கும்பலைத் தப்பவைத்தது தேர்தல் ஆணையம்.
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகே கல்குறிச்சியில் இரண்டு மூட்டைகள் நிறைய பணம் கைப்பற்றப்பட்ட விசயத்திலோ, அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை; எல்லாமே வதந்தி என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணா மூர்த்தி அறிக்கை அளித்திருப்பதாகக் கூறித் தேர்தல் ஆணையம் அதனை அமுக்கிவிட்டது. சொத்துகுவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயா மீண்டும் முதல்வர் ஆவதற்காக கொல்ல்லிமலை பையில்நாடு தன்னிமாத்தியில் உள்ள ரதி-மன்மதன் கோயிலில் நடத்தப்பட்ட யாகத்தில் அமைச்சர் தங்கமணியோடு கலந்து கொண்டவர்தான் இந்த தட்சிணாமூர்த்தி.
கரூரில் அன்புநாதன் வீட்டிலும், குடோனிலும் சோதனைகள் நடந்துகொண்டிருந்தபோதே, அங்கு பத்து இலட்சரூபாய் கைப்பற்றப்பட்டதாக அறிக்கைவிட்டார், ராஜேஷ் லக்கானி. இந்த தம்மாத்துண்டு ரூபாயைப் பிடிப்பதற்காகவா இரண்டு நாட்கள் சோதனை நடந்தது, அன்புநாதனின் வீட்டில் 12 பணம் எண்ணும் இயந்திரங்கள் இருந்தன என எதிர்க்கட்சிகள் போட்டு வாங்கிய பிறகு, அன்புநாதனிடமிருந்து நாலு கோடியே சொச்சமும் சில ரப்பர் பேண்டுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கணக்குக் காட்டியது, தேர்தல் ஆணையம். இது நீதிபதி குமாரசாமியின் கணக்கைவிட மோசடியானது என்பது ஊருக்கே தெரியும். அன்புநாதனின் நண்பர் மணிமாறனின் வீடு, தோட்டம், குடோனிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம் 100 கோடி ரூபாயைத் தாண்டும் எனக் கூறப்பட்டாலும், அது குறித்து வாயைத் திறக்க மறுக்கிறது, தேர்தல் ஆணையம்.
EC_5a
தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி
அன்புநாதன் அ.தி.மு.க.வன் ஐவரணியைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு நெருக்கமானவர் என்பதும், சென்னை எழும்பூர் அடுக்குமாடிக் குடியிருப்பில் 4 கோடியே 93 இலட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டதில் தொடர்புடைய விஜயகுமார் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் துணைச் செயலர் என்பதும் தமிழகமே அறிந்த உண்மை. இந்த சந்தர்ப்ப சாட்சியங்களைக் கொண்டு இந்தப் பணம் பதுக்கல், கடத்தல் விவகாரத்தில் அ.தி.மு.க. தலைமையைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்க முடியும். ஆனால் தேர்தல் ஆணையமோ மத்திய அரசின் முத்திரையைத் தவறாகப் பயன்படுத்தியதாக உப்புக்குச் சப்பாணி வழக்கை அன்புநாதன்மீதுபோட்டு விட்டு, மெளனமாகிவிட்டது.
பணப்பட்டுவாடாவைத் தடுக்க 10 தொகுதிக்கும் ஒரு பறக்கும் படை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஐ.ஆர்.எஸ். அதிகாரி தலைமையில் 9 பேர் கொண்ட வருமான வரித்துறையின் படை, பறக்கும் படைகளைக் கண்கா ணிக்க மாவட்டத்துக்கு 2 அல்லது 3 எஸ்.பி.க்கள் அடங்கிய குழு,  மொத்தமாக 118 பயிற்சி எஸ்.பி.க் கள் மாவட்டங்களைத் தங்களுக் குள் பிரித்துக் கொண்டு பறக்கும் படையைக் கண்காணிக்க ஏற்பாடு. இந்த அதிகார வர்க்க கூட்டத்துக்கு அப்பால், கட்சி சாராத இளைஞர் களைக் கொண்ட 21,300 குழுக்கள் என அடுக்கிக் கொண்டே போகிறது தேர்தல் ஆணையம். ஆனால், இவை எல்லாம் அ.தி.மு.க.வின் கூலிப்படையாக, அக்கட்சியின் பணக் கடத்தலைப் பாதுகாக்கும் ஐந்தாம் படையாகத்தான் செயல்படும். அவ்வாறுதான் செயல்பட முடியும்.
சில மாவட்ட ஆட்சியர்களையும், போலிக அதிகாரிகளையும் இடமாறுதல் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தாலும், அது வெல்லாம் தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதை என்பது தமிழகத்திற்கே தெரியும். அதேசமயம், டி.ஜி.பி. அசோக் குமார், உளவுத்துறைத் தலைவர் சத்தியமூர்த்தி, வடக்கு மண்டல ஐ.ஜி. தாமரைக்கண்ணன், நாமக்கல் ஆட்சியர் தட்சிணாமூர்த்தி, திருப்பூர் ஆட்சியர் ஜெயந்தி, திருச்சி ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி, தூத்துக்குடி ஆட்சியர் ரவிக்குமார், திருச்சி போலீசு கமிசனர் சஞ்சய் மாத்துார், மதுரை கமிசனர் சைலேஷ் யாதவ், மதுரை புறநகர் மாவட்ட எஸ்.பி. விஜயேந்திராபிடாரி உள்ளிட்ட ஒரு பெரும் ஜெயாவின் விசுவாசக் கூட்டமே இன்னமும் தேர்தலை நடத்தும் பொறுப்புகளில், பணக்கடத்தலைத்தடுக்கும் பொறுப்புகளில் தேர்தல் ஆணை யத்தின் ஆசியோடு அமர்ந்திருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையமே போயசு தோட்டத்தின் செல்லப் பிராணி தானே! கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, அ.தி.மு.க.வின் பணப் பட்டுவாடாவிற்குச் சாதகமாக 144 தடையுத்தரவை அமல்படுத்தியது; சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயா வைச் சட்டமன்ற உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்குவதை வேண்டுமென்றே தாமதப்படுத்தியது: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர் தலில் வேட்புமனுத்தாக்கல் செய்யவந்த ஜெயாவிற்காக, அந்த அலுவலகத்தையே பச்சை பெயிண்ட் அடித்து மாற்றியமைத்தது; அந்த இடைத்தேர்தலின் பொழுது ஒரு வாக்குச்சாவடியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஒரு வாக்கு அதிகமாகப் பதிவான கள்ள ஒட்டு கூத்தைக் கண்டு கொள்ளாமல் நழுவிக் கொண்டது.  அன்புநாதனைக் கைது செய்யாமல் வேண்டுமென்றே தப்பிக்க வைத்தது எனத் தேர்தல் ஆணையத்தின் ஜெயா விசுவாசத்திற்கான ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
EC_5c
பிரவீண் குமார்
ஜெயாவின் பொதுக்கூட்டங்கள் ஒவ்வொன்றும் சொல்லிக் கொள்ளப்படும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறித்தான் நடத்தப்ப டுகின்றன. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நோட்டீசு கொடுத்த தேர்தல் ஆணையம், ஜெயாவின் பொதுக் கூட்டத்தில் ஐந்து பிணங்கள் விழுந்த பிறகும் அவருக்கு எதிராகச் சுண்டுவிரலைக் கூட அசைக்க மறுக்கிறது.
போலி வாக்காளர்கள், ஒட்டுக்குப் பணம், அதிகாரவர்க்க கூலிப்படை என்ற மூன்றையும் பயன்படுத்தி, இத்தேர்தலிலும் வென்று ஆட்சியைப் பிடித்துவிடும் திட்டத்தோடு காய்களை நகர்த்தி வருகிறது, ஜெயா-சசி கும்பல். இதற்கு ஒத்துழைத்து வருகிறது தேர்தல் ஆணையம்.
ஜனநாயகப்பூர்வமான தேர்தலை நடத்தும் பொருட்டு, அரசமைப்பு சட்டத்தின்படி சுயேச்சையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அமைப்பான தேர்தல் ஆணையம், அந்த நோக்கத்துக்கு எதிராக ஜனநாயகத் தேர்தல் என்பதையே குழிதோண்டிப் புதைக்கின்ற கோடரிக்காம்பாகச் செயல்படுகிறது என்று எல்லா எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றனர், ஆதாரங்களை அடுக்குகின்றனர். குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் தேர்தல் ஆணையமோ, ஆணையர் லக்கானியோ இது பற்றிக் கடுகளவும் கவலைப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டைப் பொருட்படுத்தவுமில்லை.
ஒரு மரத்தடிப் பஞ்சாயத்தில் கூட நாட்டாமையைப் பார்த்து உன் மீது நம்பிக்கை இல்லை என்று வழக்காடி சொல்லிவிட்டால், அந்த நாட்டாமை ரோசப்பட்டு விலகிக் கொள்ளக்கூடும். சட்டம், விதிமுறைகள், மரபுகள் ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படாதது மட்டு மல்ல, மான, ரோசம் அனைத்தையும் உதிர்த்து விட்டு நிற்கிறது தேர்தல் ஆணையம். ஆணையம் தனது நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று கெஞ்சு வதற்கு மேல் எதுவும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள் எதிர்க்கட்சிகள். அன்புநாதன் விவகாரத்தின் மர்மங்களை வெளிக்கொண்டு வர வேண்டுமானால், சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிறார் கருணாநிதி.
நடைபெறும் நிகழ்வுகள் நமக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நினைவுபடுத்துகின்றன. குமாரசாமியின் வரலாற்றுப் புகழ் மிக்க தீர்ப்புக்குப் பின்னர், அந்தத் தீர்ப்புக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத தரத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றியைப் பெறவேண்டும் என்ற முடிவுடன் ஆர்.கே.நகரில் களம் இறங்கினார் ஜெயலலிதா. அன்று தேர்தல் ஆணையராக இருந்த சந்தீப் சக்சேனாவிடமோ, தேர்தல் ஆணையத்திடமோ புகார் கொடுத்துப் பயனில்லை என்று தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் அந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்தன. இந்தப் புறக்கணிப்பு தேர்தல் ஆணையத்தை மட்டுமின்றி, ஜெயலலிதாவையும் அசிங்கப்படுத்தி விடும் என்ற காரணத்தினால், அ.தி. மு.க.வின் ஐந்தாம்படையான வலது கம்யூனிஸ்டு கட்சி அம்மாவின் ஆசியுடன், அம்மாவை எதிர்த்துப் போட்டியிட்டு, அம்மாவின் மானத்தைக் காப்பாற்றியது. அம்மாவோ நூறு விழுக்காட்டுக்கு மேல் வாக்குப்பதிவு செய்து ஜனநாயகத்தின் மானத்தை வாங்கினார்.
EC_4
ஜெயாவின் திருச்சி பொதுக்கூட்டத்தில் நடந்த பணப் பட்டுவாடா.
இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் செய்யும் தில்லுமுல்லுகளை தமிழகம் முழுவதும் செய்ய இயலாது என்று அன்றைக்கு இடைத் தேர்தலைப் புறக்கணித்த கட்சிகளும், அறிஞர் பெருமக்களும் கருதினர். தமிழகம் முழுவதையும் ஆர்.கே. நகராக மாற்ற இயலாது என்று நம்பினர். அந்த நம்பிக்கை பொய்த்து விட்டதை இன்று எதிர்க்கட்சிகளே ஒப்புக்கொள்கிறார்கள்.
பண விநியோகத்தைத் தடுத்து நியாயமான தேர்தல் நடத்த இராணுவத்தை வரவழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றார்கள். எல்லை தாண்டிய பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக காஷ்மீரில் போராடிக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் இராணுவத்தை, அ.தி.மு.க.விடமிருந்து நாட்டைக் காப்பாற்றும் பொருட்டு தமிழகத்துக்கு வரவழைக்க வேண்டுமென்றால், அ.தி.மு.க.வைப் பயங்கரவாதக் கும்பல் என்றல்லவோ கருத வேண்டியிருக்கும்?
எதிர்க்கட்சிகளின் கருத்துப்படி இன்று ஜெயா-சசி கும்பல் தமிழகத்தையே ஆர்.கே.நகர் ஆக்கிவிட்டது. அவர்களது அளவுகோல்களின்படி இந்தப் பொதுத் தேர்தலையும் அவர்கள் புறக்கணித்திருக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு ஒரு முடிவை எடுத்தால், ஜெயலலிதா அரசு என்றழைக்கப்படும் கிரிமினல் கும்பலையும், அதன் கூட்டாளியான தேர்தல் ஆணையத்தையும் ஒரளவேனும் அம்பலப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அத்தகைய போராட்ட முறைகளெல்லாம் ஒட்டுக்கட்சிகளைப் பொருத்தவரை வரம்பு மீறிய நடவடிக்கைகள்.
தேர்தல்களை நியாயமாக நடத்துகிறோம் என்ற நாடகத்தைக்கூட நடத்த முடியாத தற்போதைய இழிந்த நிலை என்பது இந்த அரசுக்கட்டமைவின் தோல்விக்குத் துலக்கமானதொரு சான்று. இந்தக் கட் டமைப்புக்கு உள்ளேதான் தீர்வைத் தேட வேண்டும் என்பது அரசியல் பிழைப்புவாதிகளுக்கான வரம்பு. ஆனால், மக்கள் அந்த வரம்புக்குள் நிற்கவேண்டிய அவசியமில்லை. அவ்வாறு நிற்பது அறிவுக்குகந்ததுமில்லை. மக்கள் அதிகாரத்தை உத்திரவாதப்படுத்துகின்ற புதியதொரு கட்டமைப்பை உருவாக்க முயற்சிப்பது தான் மாற்றம் வேண்டும் என்று விரும்புவோர்
செய்ய வேண்டிய பணி.
– ரஹீம்

கருத்துகள் இல்லை: