
சென்னை,மே 11 (டி.என்.எஸ்) சென்னை எழும்பூரில் 67 வயதுடைய பெண் டாக்டர் ரோகிணி, அவரது வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகளின் நேரடி விசாரணையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், இதுவரை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட டாக்டர் ரோகினியின் ஒரே மகளான ரேஷ்மியிடம் நடத்திய விசாரணை மூலம் கிடைத்த தகவல்களால் இந்த கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கொலையுண்ட டாக்டர் ரோகிணியின் மகள் ரேஷ்மியிடம் நடத்திய விசாரணையில் உருப்படியான சில தகவல்கள் கிடைத்துள்ளது. ரேஷ்மி, அமெரிக்காவில் படித்த என்ஜினீயர் ஒருவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார்.
ஆனால் ரேஷ்மியின் காதலை, டாக்டர் ரோகிணி ஏற்கவில்லை. இதனால் தாயார் ரோகிணியுடன், ரேஷ்மி கருத்து வேறுபாடு கொண்டுள்ளார். தனது விருப்பப்படி தான் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் டாக்டர் ரோகிணி உறுதியாக இருந்துள்ளார். தனது விருப்பத்தை மீறி காதலரை கைப்பிடித்தால், தனது சொத்துக்கள் எதுவும், உனக்கு கிடைக்காது, என்று ரேஷ்மியை, டாக்டர் ரோகிணி எச்சரித்ததாக தெரிய வந்துள்ளது. இந்த காதல் பிரச்சினை பற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது. ரேஷ்மியின் காதலரிடமும் விசாரணை நடத்தப்படும்.
தனது தாயாருக்கு, சொத்துப்பிரச்சினை இருந்ததாகவும், கொலைக்கு அதுதான் காரணமாக இருக்க வேண்டும், என்றும் ரேஷ்மி தெரிவித்தார். ஆனால் யாரிடம் தகராறு இருந்தது, என்று உறுதியாக அவரால் கூற முடியவில்லை. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கொலையாளி பிடிபடுவான்” என்று தெரிவித்தார். /tamil.chennaionline.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக