வெள்ளி, 13 மே, 2016

தேர்தல் அதிகாரிகள் அதிமுகவின் ஏஜெண்டுகள் .....ஒப்புக்கொண்ட பிறகும் பணியில் தொடர்வது ஏன்?

கோவையை  குளிர்விக்கும் கோடை மழையைவிட, வாக்காளர்களைக் கரன்சி மழையில் நனைய வைக்கும் அ.தி.மு.க,  தி.மு.கவுக்கு எதிராகப் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள் பா.ஜ.க, மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்கள். கோவை வடக்கு, தெற்கு, தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பத்து தொகுதிகளிலும் பணப் பரிமாற்றம் வேகமாக நடந்து வருகிறது.
'வெள்ளிக்கிழமைக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் பணத்தைக் கொடுத்துவிட வேண்டும்' என்பதற்காக, ஆளுங்கட்சியும், தி.மு.கவும் செய்யும் வேலைகளால் கலங்கிப் போயிருக்கிறது மக்கள் நலக் கூட்டணி. ' நள்ளிரவு 1 மணி முதல் நான்கு மணிக்குள் பணப் பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது.
அதிகாலையில் போடப்படும் பால் பாக்கெட், நாளிதழ் விநியோகம் என கிடைக்கும் சந்து பொந்துகளில் எல்லாம் பணத்தைத் திணிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

இதைத் தடுப்பதற்காக தி.மு.க இளைஞர்கள் ஒருபுறம் ( அதிமுகவினரை குறிவைத்து), மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க தொண்டர்கள் மறுபுறம் என விடிய விடிய கோவையை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். பணம் கொடுக்கும் தகவல் கிடைத்ததும் நேரில் களத்திற்குப் போகிறார்கள். பறக்கும் படையினர் வருவதற்குள் கரன்ஸி விநியோகிப்பாளர்கள் மாயமாய் மறைந்துவிடுகிறார்கள். தொகுதிகளின் தன்மைக்கு ஏற்ப கரன்சி மழை கொட்டிக் கொண்டிருக்கிறது என வேதனைப்பட்டார் கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர்.

தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.கவின் கருமுத்து தியாகராஜன், கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிடம் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், " நான் போட்டியிடும் தொகுதியில் தேர்தல் அலுவலராக இருக்கும் மதுராந்தகி, ஆளுங்கட்சி புள்ளி ஒருவரின் உறவினர். அதனால் பணம் கொடுக்கும் தகவலைச் சொன்னாலும் கண்டு கொள்வதில்லை. இவரால் தேர்தல் நாள் அன்று சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவும் வாய்ப்பு அதிகம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதன்பின்னர் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், சி.பி.எம் வேட்பாளர் பத்மநாபன், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் கலெக்டர் அர்ச்சனாவை சந்தித்து, " தேர்தல் அலுவலர்களின் வாகனங்களில் பணம் கடத்தப்படுவதாக புகார் தெரிவித்தோம். அதன்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?" எனக் கேட்டனர். கலெக்டரும், " மதுராந்தகி மற்றும் காந்திமதி ஆகியோர் மீது கொடுக்கப்பட்ட புகார்களின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என விளக்கம் அளித்தார்.

"அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதே முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்கிறது. இன்னமும் இவ்விரு அதிகாரிகளும் தேர்தல் அலுவலர்களாக நீடிப்பது சரிதானா?" எனவும் கேள்வி எழுப்புகின்றனர் மக்கள் நலக் கூட்டணியினர்.
இத்தகைய சூழ்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் கோவை மாவட்டத்தின் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே வேட்பாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

- ஆ.விஜயானந்த் விகடன்.com

கருத்துகள் இல்லை: