வியாழன், 12 மே, 2016

சென்னை கிஷ்கிந்தா பூங்காவில் விபத்து ஒருவர் மரணம் 24 பேர் படுகாயம்

பூந்தமல்லி தாம்பரம் அருகே பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் உடைந்து விழுந்து ஒருவர் இறந்தார். 24 பேர் படுகாயம் அடைந்தனர்.
‘டிஸ்கோ’ ராட்டினம் தாம்பரம் அருகே கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இங்கு நீச்சல் குளம், ராட்டினம் உள்ளிட்ட ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இந்த பூங்காவுக்கு தினமும் சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவிகளை குஷிபடுத்த பூங்கா நிர்வாகம் ‘டிஸ்கோ’ என்ற புதுவகை ராட்டினத்தை அமைத்தது. இந்த ராட்டினம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

உடைந்து விழுந்தது இந்த நிலையில் நேற்று மாலை பூங்கா நேரம் முடிவடைந்தவுடன் பூங்காவுக்கு வந்தவர்கள் வெளியேறினர். இதையடுத்து ‘டிஸ்கோ’ ராட்டினத்தை இயக்கிப் பார்க்க ஊழியர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி மாலை 6 மணிக்கு ஊழியர்கள் 25 பேர் பூங்காவில் அமர்ந்து ராட்டினத்தை இயக்கினர். திடீரென பாரம் தாங்காமல் அந்த ராட்டினம் 3 பகுதிகளாக உடைந்து விழுந்தது.
ஒருவர் சாவு இதில் ராட்டினத்தில் அமர்ந்து இருந்த 25 ஊழியர்களும் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் மீட்கப்பட்ட அனைவரும் உடனடியாக தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும் அவர்களில் சோமங்கலத்தை அடுத்த நல்லூர் புதுநகரை சேர்ந்த மணி (வயது 19) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற 24 பேரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்  தினத்தந்தி.com

கருத்துகள் இல்லை: