வியாழன், 12 மே, 2016

மக்கள் அனைவரும் கோபத்தில் இருக்கிறார்கள்.: தங்கம் தென்னரசு பேட்டி

தங்கம் தென்னரசு | கோப்புப் படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்திtamil.thehindu.comதங்கம் தென்னரசு | கோப்புப் படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி வேட்பாளருக்கு சில கேள்விகள் "ஆளுங்கட்சியின் அதிகார பலமும், பண பலமும் வெளிப்படையாகவே தெரிகிறது. அதை மீறி இம்முறை நிச்சயம் திமுக ஆட்சியைப் பிடிக்கும்; கருணாநிதி முதல்வராவார்" என்கிறார் திருச்சுழி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கம் தென்னரசு.
2006-ல் நடந்த தொகுதி மறுசீரமைப்பில் தனியாக பிரிக்கப்பட்டது விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி தொகுதி. இரண்டு முறை நடந்த தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு.
அவர் தி இந்து (தமிழ்) இணையதளத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி.
தொகுதி மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறது?
திமுக ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும், அதிமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. இதனால் மக்கள் அனைவரும் கோபத்தில் இருக்கிறார்கள். அரசு கலை அறிவியல் கல்லூரிக்கான அரசாணையைத் திமுக ஆட்சியில் பெற்றிருந்தோம். அது நிறுத்தப்பட்டு, வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படாததால், மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.
தொகுதிக்காக என்னென்ன திட்டங்களை முன்வைக்கிறீர்கள்?
எங்கள் மக்களின் முதல் தேவை கல்வி. நான் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது எங்கள் தொகுதியில், நிறைய பள்ளிகள் தொடங்கப்பட்டன. பள்ளிக்கல்வியை முடித்தவர்கள், கல்லூரி செல்லத் தயாராக இருந்தபோது கல்லூரிக்கான அனுமதி நிறுத்தப்பட்டதால், அவர்கள் கல்லூரிப்படிப்பை ஆரம்பிக்க முடியாமல் போனது. இரண்டாவதாக, வேலைவாய்ப்பு முக்கிய தேவை. அடுத்ததாக சாலை போக்குவரத்து, குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். கிடப்பில் கிடக்கும் நிலையூர்- கம்பக்குடி வாய்க்கால் திட்டம், சென்னம்பட்டி கால்வாய் திட்டமும் சீரமைக்கப்பட வேண்டும்.
உங்களின் வெற்றிவாய்ப்பு குறித்து?
மிகவும் தெளிவாய் இருக்கிறது. காரணம் கருணாநிதி ஆட்சியில் செய்த சாதனைகள்; கொண்டுவந்த திட்டங்கள். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக 2011-ல் இருந்து, அரசு எங்கள் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் நிதியைக்கொண்டு அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி உள்ளோம்.
தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடக்கிறதா?
பணப்பட்டுவாடா நடக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் ஆளுங்கட்சியின் அதிகார பலமும், பண பலமும் வெளிப்படையாகவே தெரிகிறது. அதே நேரம் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமா?
நிச்சயம் சாத்தியமே. கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தில் விவசாயக் கடன்களை ரத்து செய்தார். அதே போல இப்போதும் அவரின் முதல் கையெழுத்து மதுவிலக்காக இருக்கும் என்று கிராமப்புற பெண்கள் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?
நிச்சயம் திமுக ஆட்சியைப் பிடிக்கும்; கருணாநிதி முதல்வராவார்.

கருத்துகள் இல்லை: