ஞாயிறு, 8 மே, 2016

விகடன்.காம்: 10 லட்சத்தை பிடித்துவிட்டு 10 கோடியை பறக்க விடுவார்கள்

தகுந்த ஆவணம் இல்லை என்று தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகளால்  இதுவரையில் பிடிபட்ட ரொக்கப் பணம் ரூ. 84 கோடி.  நேற்று  வருமான வரித்துறையினர் சோதனையில், அரியலூரில்  ரூ.23 லட்சம், திருவாரூரில்   ரூ.17 லட்சம் சிக்கியது. அதே போல் திண்டுக்கல்லில் ரூ.20 லட்சம் சிக்கியது. இதை பிடித்தது, பறக்கும் படையினர்.
கோட்டையில் இன்று (7.5.2016) நடந்த  பிரஸ் மீட்டில் பேசிய தேர்தல் அதிகாரி  ராஜேஷ் லக்கானி,  தேர்தல் ஆணையம் எத்தனை விழிப்புடனும், வேகத்துடனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துரைத்தார்.
 ''வாக்குப்பதிவுக்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்து  இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

தமிழகத்தில் பணம் நடமாட்டம் அதிகமுள்ளதாக கருதப்படும் 94 தொகுதிகளில் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் போன்றோர்கள்தான் இங்கு போட்டியிடுகின்றனர்.
சர்ச்சைக்குரிய இந்த 94 தொகுதிகளிலும் பறக்கும் படையின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பறக்கும் படைகளில்  துணை ராணுவ வீரர் ஒருவர் உடன் இருப்பார்.
செல்போன்களுக்கு ‘ஸ்கிராட்ச் கார்டு’ மூலமாகவும், இ.சி.எஸ். மூலமாகவும்  டாப்-அப் செய்யப்படுகிறது. ஆன்லைன் மூலமும் செல்களுக்கு டாப்-அப் செய்யப்படுகிறது. எந்த இடத்தில் அதிகபட்சமாக  ஆன்லைனில்  டாப்-அப் செய்கிறார்கள் என்று கண்காணித்து வருகிறோம்.
கடந்த 3 மாதங்களில் 50 லட்சம் பேர் வரை தமிழகத்தில் ஆன்லைன் மூலம் டாப்-அப் செய்துள்ளனர். அவர்களின் விவரங்களை செல்போன் நிறுவனங்களிடம் கேட்டுப் பெற்றுள்ளோம். அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.''  என்றார் ராஜேஷ் லக்கானி
ராஜேஷ் லக்கானியின் இத்தனை நீளமான விளக்கத்தையும் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள் சுக்கு நூறாக உடைத்துத் தள்ளுகிறது.
'' தேர்தல் ஆணையம் என்கிற பெயரில் வாகனங்களில் சிவில் உடையுடன் டோல்கேட்களில்  அதிகபட்ச சோதனை நடத்துவது ஊர்க்காவல் படையினர், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினர்தான். தேர்தல் ஆணைய அதிகாரிகளின் ரோல் இதில் மிகவும் குறைவுதான்.
லோக்கல் போலீஸ், சிவில் டிரஸ்சில் அந்த ஸ்பாட்டில் இருந்தால் குட்டு உடைந்து விடும் என்று கொஞ்ச தூரத்தில் நின்று கொண்டு அவர்களுக்கு போனிலேயே டைரக்‌ஷன் கொடுக்கிறார்கள்.
ஆளுங்கட்சி வாகனங்களாக இருந்தால் தூரத்தில் வரும்போதே போனில் கூப்பிட்டு அந்த வண்டியை விட்டு விடுங்கள் என்று சொல்லி விடுவார்கள். இதுதான்  ரெய்டு என்கிற பெயரில் அன்றாடம் நடக்கிற கதை.
இதுகுறித்து பல புகார்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்து விட்டோம். ஆனால்,  ஆணையத்தின் நடவடிக்கை என்ன என்பதுதான்  தெரியவில்லை.
இதுவரை நடத்தப்பட்ட ரெய்டுகளில் அதிகமாக கோடிகளில் பிடித்தது வருமான வரித்துறையினர்தான். தேர்தல் ஆணையத்தின்  நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் பறக்கும் படையினரிடம் சிக்கியது லட்சங்களில் தான்.  இதை வைத்தே  நடந்து கொண்டிருக்கும் ஒருதலைபட்ச செயல்பாடுகளுக்கு ஒரு வடிவம் கொடுத்து விட முடியும்.
இன்னும் சொல்வதென்றால், இவர்கள் ரெய்டுக்குப் போய் 10 லட்ச ரூபாயை பிடிக்கிற அதே வேளையில் அந்த இடத்துக்குப் பக்கத்தில் இருந்து 10 கோடியை இன்னொரு இடத்துக்கு நகர்த்த வழி செய்து கொடுக்கிறார்கள். இந்த ரெய்டுகளே 10 லட்சத்தைக் கொடுத்து பத்து கோடியை இடம் மாற்றுகிற ரெய்டுதான். இதை நாங்கள் போய் எடுத்துச்  சொன்னால் எங்கே கேட்கிறார்கள் ? '' என்று ஆவேசப்படுகிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லாத நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இன்னமும் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை  பெறாமல் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல!

-ந.பா.சேதுராமன்

கருத்துகள் இல்லை: