ஞாயிறு, 8 மே, 2016

தபால் பதிவு ஒட்டு தொடங்கியது

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளிலும், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், நேற்று ஆர்வத்துடன் தபால் ஓட்டுக்களை பதிவு செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில், 11 ஆயிரத்து, 616 அலுவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில், 889 போலீசார் பணியாற்றுகின்றனர். மொத்தம், 12 ஆயிரத்து, 505 பேர், தபால் ஓட்டுப்பதிவு செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், அலுவலருக்கான, இரண்டாம்கட்ட பயிற்சி முகாம், அனைத்து தொகுதிகளிலும் நேற்று நடந்தது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஓட்டளிக்க ஏதுவாக, தபால் ஓட்டுப்பதிவு மையம் அமைக்கப்பட்டது.


வேட்பாளர்களின் ஏஜன்டுகள் முன்னிலையில், காலியான பெட்டி என்பதை உறதி செய்து, தபால் ஓட்டு பெட்டிக்கு "சீல்' வைக்கப்பட்டது. தொகுதியில் பணியாற்றும் அலுவலருக்கு, வெவ்வேறு தொகுதிகளில் ஓட்டு இருப்பதால், தபால் ஓட்டுப்பதிவு மையத்தில், எட்டு தொகுதிகளுக்கான தேர்தல் பிரிவு அதிகாரிகள் முகாமிட்டனர். அவர்கள், தங்களது தொகுதியை சேர்ந்த, ஓட்டுச்சாவடி அலுவலரின் தபால் ஓட்டுக்களுடன் காத்திருந்தனர். அலுவலர்கள், கையொப்பமிட்டு, தபால் ஓட்டுக்கான படிவத்தை பெற்றுக் கொண்டனர்.
அதில், தங்களது விவரத்தை பதிவு செய்து கையொப்பமிட்டு, உயரதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற்றனர். பின், தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு "டிக்' செய்து, கவரில் வைத்து, பசையால் ஒட்டி, ஓட்டுப்பெட்டியில் போட்டனர்.

தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அசோகன் கூறுகையில், ""தெற்கு தொகுதியில் பணியாற்றும் அலுவலர்கள், வெவ்வேறு தொகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதால், எட்டு தொகுதிகளின் தேர்தல் பிரிவினர், தபால் ஓட்டுப்பதிவு மையத்தில் உள்ளனர். ஓட்டுப்பதிவு முடிந்ததும், வேட்பாளர் பிரதிநிதிகள் முன்னிலையில், ஓட்டுப்பெட்டி திறக்கப்பட்டு, தபால் ஓட்டு, தொகுதி வாரியாக பிரிக்கப்படும். தனித்தனி கவர்களில் வைத்து, "சீல்' வைத்து, தேர்தல் அலுவலர் மூலமாக, அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பப்படும். அங்குள்ள, தேர்தல் நடத்தும் அலுவலர் அறைகளில் உள்ள, ஓட்டுப்பெட்டியில் செலுத்தப்படும். ஓட்டுப்பதிவு நாளில், ஓட்டுப்பெட்டிகள், எண்ணிக்கை மையத்துக்கு எடுத்துச் செல்லப்படும்,'' என்றார்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை: