புதன், 11 மே, 2016

தேர்தல் அதிகாரிகள் மதுராந்தகி, காந்திமதி ஜீப்பிலேயே அதிமுக பணப் பரிமாற்றம்? -அதிர வைத்த தேர்தல் அலுவலர்கள்

விகடன்.com :'தேர்தல் நடத்தும் அலுவலர்களின் வாகனத்திலேயே பணப்பரிமாற்றம் நடப்பதாக' வந்த புகாரையடுத்து, 'அவர்களின் வாகனங்களை ஒப்படைக்குமாறு' உத்தரவிட்டிருக்கிறார் கோவை கலெக்டர். கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளில் அ.தி.மு.க போட்டியிடுகிறது. " தேர்தல் நடத்தும் அலுவலர்களில் பெரும்பாலானோர் அ.தி.மு.க முக்கியப் புள்ளியின் உறவினர்கள். அதிலும், தொண்டாமுத்தூர் தேர்தல் அதிகாரியான மதுராந்தகி, ஆளுங்கட்சி புள்ளியின் வீட்டிலேயே பெரும்பாலும் இருக்கிறார். தெற்கு தொகுதி அலுவலர் காந்திமதியும், ஆளுங்கட்சிப் புள்ளிக்கு வேண்டியவராக இருக்கிறார். இவர்களை மாற்ற வேண்டும்"  என தி.மு.க மற்றும் மக்கள் நலக் கூட்டணியின் வேட்பாளர்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாற்றிய ஆணையம், கோவை மாவட்டத்தில் அதிரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 'மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்' என அதிரடி புகார்கள் வலம் வந்தன. இந்நிலையில், தொண்டாமுத்தூர் ஆர்.டி.ஓ மதுராந்தகி மற்றும் தெற்குத் தொகுதி தேர்தல் அலுவலரும் மாநகராட்சி துணை ஆணையருமான காந்திமதி ஆகிய இருவர் மீதும் நேற்று அதிரடியான குற்றச்சாட்டுகள் கிளம்பின.

தேர்தல் பணிகளுக்காக, தேர்தல் அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு வாகனங்களை அரசு கொடுத்திருக்கிறது. இந்த வாகனங்களை மதுராந்தகியும், காந்திமதியும் பணப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்துவதாக, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க  உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், கலெக்டர் அர்ச்சனா கவனத்திற்குப் புகாராக கொண்டு சென்றுள்ளனர். 'பணப் பரிமாற்றத்தைத் தடுக்கும் வேலையில் பறக்கும்படை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதிகாரிகளின் வாகனங்களிலேயே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பணப் பரிமாற்றம் நடக்கிறது' எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மதுராந்தகி மற்றும் காந்திமதி ஆகியோரின் வாகனங்களை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்.

அர்ச்சனாவின் இந்த அதிரடியை ஆளுங்கட்சி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 'ஆளுங்கட்சி புள்ளியின் உறவினர்கள் நாங்கள் ' எனத் தொகுதிக்குள் வலம் இந்த அதிகாரிகள், இப்போது மவுனமாகிவிட்டார்கள்.
'அதிகாரிகள் உண்மையிலேயே பணப் பரிமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தால், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆணையத்தின் கைகளில்தான் இருக்கிறது. இதையாவது செய்வார்களா?' எனக் கேள்வி எழுப்புகிறார்கள் கோவை மாவட்ட வேட்பாளர்கள்.

- ஆ.விஜயானந்த்
 

கருத்துகள் இல்லை: