சனி, 25 ஜூலை, 2020

சகோதர போராளிகள் படுகொலை .. கலைஞர் உட்பட நாம் நம்பிக்கை இழந்தோம் ... ஒப்பந்தம் வந்த வரலாறு - 11


அமரர். திரு.அ.அமிர்தலிங்கம் : இந்த திட்டத்தை டெல்லி சென்று நேரில் கையளித்ததோடு பல மணித்தியாலங்கள் வெளிநாட்டு அமைச்சரின்
செயலாளரோடும் ஏனைய அதிகாரிகளோடும் உரையாற்றினோம்.
எமது முயற்சி விரும்பிய பயனைக் கொடுத்தது. இந்திய அரசின் போக்கில மீன்டும் எமக்குச் சார்பான மாற்றம் தோன்றியது.
"இலங்கை அரசின் திட்டத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி விரிவான ஆக்கப்பூர்வமான மாற்று திட்டத்தைக் கொடுத்திருக்கின்றது' - என்று பத்திரிகைகளுக்குக் கூறிய திரு ராஜீவ் காந்தி, டாகாவில் கூடிய தெற்காசிய பிராந்திய மகாநாட்டில் ஜனாதிபதி ஜயவர்த்தனாவிடம் அதை நேரில் கையளித்தார். எமது திட்டத்தை முற்றாக நிராகரித்து, ஜனவரி 30-ம் திகதி இலங்கை அரசு ஓர் விரிவான பதிலைக் கொடுத்தது.
இந்த பதில் பிரதமர் ராஜீவ் காந்திக்கு இலங்கை அரசின் உண்மையான போக்கைக் காட்டிக்கொடுத்தது. அவருக்கு மேலும் விளக்கம் கொடுக்கும் பொருட்டு ஓர் சந்திப்பை நாடினோம். திருவையாறு தியாகையர் உற்சவத்தோடு தென்பிராந்திய கலாச்சார நிலையத்தை அவர் திறந்து வைத்துத் திரும்பிச் செல்லும் போது நாமும் உடன் விமானத்தில் சென்று . விரிவாகப் பேச நேரம் கொடுத்தார்.
நானும் திரு சிவசிதம்பரம், திரு. சம்பந்தன் ஆகிய மூவரும் திருச்சி சென்று அங்கிருந்து டெல்லி வரை இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக அவரோடு விமானத்தில் உரையாடினோம். வடக்குக் கிழக்கு இணைப்பைப் பற்ற அவருக்குத் தவறான கருத்து தரப்பட்டிருந்தது. வட மகாணமும் கிழக்கு மாகாணமும் தொடரான நிலப் பரப்பல்ல என்று கூறப்பட்டிருந்தது. அந்தத் தப்பான கருத்தைத் தெளிவுபடுத்தினோம்.

எமது மக்கள் மீது இலங்கை அரசு நடத்தும் மிருகத்தனமான தாக்குதலின் தன்மை, தமிழ் போராளிகள் இலங்கை இராணுவத்தைத் தடுக்காவிட்டால் தமிழ் இனக் கொலை வேகமாக நடைபெறும் என்ற உண்மை,
இந்திய அரசு இனக்கொலையை நிறுத்தும் முயற்சிக்கு உதவி செய்ய வேண்டிய அவசியம்,

விமானத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறும் நிலை, இதற்கு ஈடுகொடுக்க, இதை நிறுத்த இந்தியா உதவ செய்யாவிட்டால் எமது மக்கள் அழிந்து விடுவார்கள் என்ற அபாயம் இவை எல்லாவற்றையும் விரிவாக விளக்கினோம்.
ஜனவரி 31-ந் திகதி இச் சந்திப்பு நிகழ்ந்தது.
3-ந் திகதி திரு ரொமேஷ் பண்டாரி கொழும்பு செல்வதாக இருந்தார். அந்த நேரத்தில் அங்கு சென்றால் 4-ந் திகதி சுதத்திரதினக் கொண்டாட்டங்களிலும்  கலந்து கொள்வாரென்றும், அது தமிழ் மக்களுக்கு விரோதமான செயலாக அமையும் என்றும் எடுத்துச் சொன்னோம். டெல்லி சென்றவுடன் திரு.ரொமேஷ் பண்டாரியின் பயணம் நிறுத்தப்பட்டது மாத்திரமன்றிப் போராளிகளின் நிலையையும் சரியாகப்  புரிந்து கொண்டு இந்திய அரசு செயல்பட ஆரம்பித்தது.
படுகொலை தொடர்கிறது - குண்டுவீச்சு

இந்திய அரசின் போக்கைத் தமக்குச் சார்பாகத் திரும்ப மேற்கொண்ட முயற்சி தோல்வி கண்ட சூழ்நிலையிலும் இலங்கை அரசு தமிழ் பகுதிகளில் மிருகத்தனமான தாக்குதலை மீண்டும் ஆரம்பித்தது. அம்பாறை மாவட்டத்தில் சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை, கல்முனை ஆகிய கிராமங்களில் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களைக் கொண்டே சவக்குழி தோண்டியபின் அவர்கள் சுட்டுப் புதைக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் மீது விமானங்கள் மூலம் குண்டு வீச்சு ஆரம்பிக்கப்பட்டது. இவற்றைப் பற்றிப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அடிக்கடி தகவல் தந்தி மூலம் கொடுத்துக்கொண்டிருந்தோம். இவ்வக்கிரமத்ததை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரினோம்.

நாம் சந்தித்து உரையாடிய போது திரு. ராஜீவ் காந்தி கேட்டுக் கொண்டபடி மார்ச் மாதம் 5ந் திகதி, 1985 மே 1-ல் இருந்து 1986 பிப்ரவரி 28 வரை தொடர்ச்சியாக எமது மக்கள் மீது சிங்கள ராணுவம் நடத்திய தாக்குதல்கள், படுகொலைக்காளான மக்களின் விபரங்கள் ஆகியவற்றைத் தொகுத்து 105 பக்கங்களைக் கொண்ட ஓர் அறிக்கையை பிரதமர் ராஜீவ்காந்திக்குக் கொடுத்தோம். இவ்வறிக்கை தயாரிக்கும் பொறுப்பை ஏற்று நிறைவேற்றியவர் திரு. சம்பந்தன் அவர்களே. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழுக் கூட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அங்கு இந்தியப் பிரதிநிதி இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை ஆதாரப்பூர்வமாக எடுத்துக் காட்டுவதற்கு உதவியாகவே இந்த அறிக்கையைப் பெற்றனர். இந்தியப் பிரதிநிதியும் வெளிப்படையாக இலங்கையின் மீது குற்றஞ்சாட்டிப் பேசினார்.
சிதம்பரம் தூது

இந்திய வெளிநாட்டமைச்சிலும் இக்காலத்தில் மாற்றமேற்பட்டது. திரு. வெங்கடேஸ்வரன் செயலாளர் ஆனார். மீண்டும் இலங்கை அரசோடு எமது பிரச்சனைப் பற்றிப் பேச்சுவார்த்தை தொடங்கும் நிலை எழுந்தது. ஏப்ரல் 22 ந் திகதி எம்மை டெல்லிக்கு அழைத்தனர். வெளிநாட்டமைச்சு உத்தியோகத்தர்களையும் 24ந் திகதி பிரதமர் ராஜீவ் காந்தியையும் சந்தித்து உரையாடினோம். இலங்கைக்குப் பேச்சுவார்த்தைக்காகச் செல்லும் குழுவில் திரு. சிதம்பரம், திரு. ரொமேஷ் பண்டாரி ஆகியோர் இடம்பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் சந்தித்து நாம் வலியுறுத்தியது வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு விஷயத்தில் உறுதியாக நிற்கவேண்டும என்பதே. திரு.சிதம்பரம் தலைமையில் தூதுக்குழு கொழும்பு சென்ற அதே நேரத்தில் மதுரையில் திரு. கலைஞர் அவர்கள் தலைமையில் இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லோரும் கலந்து கொண்ட மாபெரும் மகாநாடு தமிழ்ஈழ ஆதரவாளர் இயக்கத்தினால்(TESO) கூட்டப் பெற்றது.

பல இலட்சம் மக்கள் அலைகடலெனத் திரண்டனர். திருவாளர்கள், வாஜ்பாய், பகுகுணா, ராமராவ், ஆகியோரும் கர்நாடக அமைச்சர் ரகுபதி, அகாலிதளம், காஷ்மீர் மக்கள் மகாநாட்டுக்கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். எல்லாத்திசையிலும் எமக்கு ஆதரவு திரண்டு வந்த நேரத்தில்

யாழ்ப்பாணத்திலிருந்து வேதனை தரும் செய்தியும் வந்தது. தமிழ்ஈழ விடுதலை இயக்க உறுப்பினர்கள் மீது தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் தாக்குதலை ஆரம்பித்து திரு. சிறீ சபாரத்தினம் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர். தலைவர் கலைஞர் உட்பட எமது ஆதரவாளர் பலர் நம்பிக்கை இழந்தனர். கொழும்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த திரு. சிதம்பரம் தூதுக்குழுவினருக்கும் இச்செய்தி பெரும் சிக்கலான, பலவீனமான நிலையைத் தோற்றுவித்தது. எனினும் முந்திய டெல்லி உடன்பாட்டின் தவறுகள் பலவற்றைத் தவிர்த்து ஒரு புதிய திட்டம் உருவானது.
ஆனால் மாநிலத்தின் பொலீஸ் அதிகாரம் பற்றிய விடயத்தில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து விளக்கம் பெறவேண்டி இருந்தது. போராளிகளிடையே ஏற்பட்ட மோதலினால் உற்சாகம் அடைந்த இலங்கை அரசு விளக்கம் அளிப்பதை ஒரு மாத்திற்குமேல் தாமதப்படுத்தியது. இறுதியில் ஜுன் மாதம் நடுப்பகுதியில் அவர்கள் விளக்கம் கிடைத்தவுடன் நாம் டெல்லிக்கு மீண்டும் அழைக்கப்பட்டோம்.
சிதம்பரம் திட்டம்!
ஜுன் 17, 18, 19, தேதிகளில் வெளிநாட்டு அமைச்சர் சிவசங்கர், செயலாளர் வெங்கடேஸ்வரன், திரு. பார்த்தசாரதி, திரு. ரொமேஷ் பண்டாரி முதலிய பலருடன் கலந்துரையாடினோம். நாம் உடன் எப்பதிலும் கொடுக்காது அரசியல் குழுவுடன் ஆலோசித்து வருவதாகக்கூறி சென்னைத் திரும்பினோம். மீண்டும் 25ந் திகதி டெல்லிச் சென்று அமைச்சர்கள் சிவசங்கர், சிதம்பரம், பூட்டாசிங் மற்றும் உத்தியோகஸ்த்தர்கள் எல்லோருடனும் ஆலோசனை நடத்தினோம். - 26ந் திகதி திரு. சிதம்பரம் கொழும்பில் நடந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக உருவான திட்டம் எமக்கு கையளிக்கப்பட்டது.

அத்திட்டத்துடன் சென்னை திரும்பித் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உட்பட அவர்களுடைய குழுவினர் திரு. நெடுமாறன், திரு. கருணாநிதி ஆகிய எல்லோருடனும் தமிழ் ஈழ தேசிய விடுதலை முன்னணியினர் ஆகியோருடனும், இரண்டாவது முறையாகத் திரு. கருணாநிதி, தமிழக முதல்வர், மின் துறை அமைச்சர் திரு. எஸ். ராமச்சந்திரன் ஆகியோருடன் விரிவாக ஆராய்ந்து அவர்கள் எல்லோருடைய கருத்துக்களையும் பெற்றபின், ஜூலை மாதம் 12த் திகதி இந்திய அரசு கேட்டுக்கொண்டபடி இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தகொழும்பு சென்றோம்.  ( தொடரும்)



ஒப்பந்த வரலாறு .. 1
 ஒப்பந்த வரலாறு 2  
 ஒப்பந்த வரலாறு 3
 ஒப்பந்த வரலாறு 4 

ஒப்பந்த வரலாறு 5

ஒப்பந்த வரலாறு 6
ஒப்பந்த வரலாறு 7
ஒப்பந்த வரலாறு 8

ஒப்பந்த வரலாறு 9
ஒப்பந்த வரலாறு 10

பத்மநாபா கொலை.. புலிகளை தண்டித்திருந்தால் ராஜீவ் காந்தி கொலை தவிர்க்கப்பட்டிருக்கும்?

ராஜீவ் காந்தியின் இந்திய-இலங்கை உடன்பாடு தன்னிகரில்லாதது;.. சுமந்திரன் எம்பி

கருத்துகள் இல்லை: