சனி, 25 ஜூலை, 2020

தினகரன் -அழகிரி: அணிகளை மாற்றும் ஆரோவில் சந்திப்பு?

டிஜிட்டல் திண்ணை: தினகரன் -அழகிரி: அணிகளை மாற்றும் ஆரோவில் சந்திப்பு?மின்னம்பலம் : சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வந்துகொண்டிருப்பதை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் தங்கள் இப்போதைய வியூகங்களை மதிப்பீட்டு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளன. நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் நிர்வாகிகளோடு காணொலி காட்சியிலும், வாட்ஸ் அப் கால்களிலும் ஆலோசனைகள் நடந்துகொண்டே இருக்கின்றன ஒவ்வொரு கட்சியிலும்.
அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி முந்தைய தலைவர்கள் போல அல்லாமல் முக்கியமான நிர்வாகிகள், கட்சியின் சீனியர்கள், அபிமானிகள் ஆகியோரிடம் தினம் தினம் உரையாடி வருகிறார். கடந்த சில வாரங்களாக திமுகவின் துணையின்றி அதாவது காங்கிரஸ் தன் சொந்தக் காலிலேயே போராட்டங்கள் நடத்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அழகிரி. கூட்டணி என்பது ஒருபக்கம் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் வகையிலான போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்.
ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்ற வேண்டும் என்று பாஜகவினர் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸுக்கு டெல்லி காங்கிரஸ் ஒரு முக்கியமான செய்தியை பாஸ் செய்திருப்பதாக சொல்கிறார்கள் தமிழக காங்கிரஸ் சீனியர்கள்.
‘சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்போது திமுக கூட்டணியில் காங்கிரசை வைத்திருக்க மாட்டார்கள் என்றுதான் எங்களுக்குத் தோன்றுகிறது. பாஜக ஆட்சியில் இருந்து திமுகவுக்கு நம்மை வெளியேற்ற வேண்டும் என்று கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். முரசொலி அறக்கட்டளை உட்பட பல திமுக தரப்பில் இயங்கும் பல அறக்கட்டளைகள் பற்றிய வரவு செலவு, கணக்கு வழக்கு விவரங்களை மத்திய அரசு ஆராய்ந்து பட்டியல் போட்டு வைத்திருக்கிறது. அந்த அறக்கட்டளை விவகாரத்தில் திமுக மீது எந்த நேரத்திலும் மத்திய அரசின் பாய்ச்சல் இருக்கும் என்றும் தகவல்கள் வந்திருக்கின்றன. காங்கிரசை கூட்டணியில் இருந்து வெளியேற்றினால் இந்த அறக்கட்டளை விவகாரங்களை கண்டுகொள்ள மாட்டோம் என்றும் திமுகவோடு டீல் போட்டு வருகிறார்கள். அதனால் நம்மை (காங்கிரசை) திமுக எந்த நேரத்திலும் கழற்றிவிடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. நாம் அதிக தொகுதிகள் கேட்கிறோம் என்பதற்காகவோ வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவே திமுக நம்மை கூட்டணியில் இருந்து வெளியேற்ற அழுத்தங்கள் கொடுக்கலாம்.

இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக என்ற ஒற்றைத் திசையை மட்டும் நம்பியிராமல் வேறு திசைகளையும் ஆராய வேண்டும். ஏற்கனவே காங்கிரஸுடன் கூட்டணி வைக்க அமமுக பொதுச் செயலாளர் தினகரன் விரும்பியதாக கேள்விப்பட்டோம். தினகரனுடனும் டச்சில் இருங்கள்’ என்பதே டெல்லி காங்கிரஸ் தலைமை தமிழக காங்கிரஸுக்கு அனுப்பியிருக்கிற செய்தி.
இதையடுத்து ஊரடங்கு காலத்தில் சிதம்பரத்தில் தங்கியிருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, புதுச்சேரி அருகே ஆரோவில் பண்ணை வீட்டில் தங்கியிருக்கும் அமமுக பொதுச் செயலாளர் தினகரனை இருமுறை சென்று நேரடியாக சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்தப் பேச்சில் தற்போதைய அரசியல் சூழல்கள் உள்ளிட்ட பல அம்சங்களை அவர்கள் விவாதித்திருக்கிறார்கள். ஒரு வேளை திமுக காங்கிரஸ் கூட்டணி அமையாத பட்சத்தில் காங்கிரஸ் தினகரனுடன் கை கோர்க்கலாம். ஏற்கனவே திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் ஒரு நெருடலோடுதான் பயணித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஆர்.எஸ்.பாரதி, தயாநிதிமாறன் ஆகியோரின் வெளிப்படையான கருத்துகளுக்கு திருமாவளவனால் ஒரு அளவுக்கு மேல் பதில் சொல்ல முடியவில்லை. பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி திமுக தனித்தே நிற்கலாம் என்று முடிவெடுத்தால் கம்யூனிஸ்டுகளும் கூட அந்த கூட்டணியில் இருக்க வாய்ப்பில்லை.
இந்நிலையில்தான் பதுங்குக் குழிக்குள் இருப்பதாக அதிமுகவால் விமர்சிக்கப்படும் தினகரன் 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக ஒரு பெரிய கூட்டணி ஒன்றை கட்டுவதற்கான தீவிர முயற்சியில் இருக்கிறார். அக்கூட்டணியில் காங்கிரஸ், திருமாவளவன், கம்யூனிஸ்டுகள் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது. அழகிரி- தினகரன் சந்திப்பின் போது இதற்கான விதைகள் தூவப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் அரசியல் சூழலைப் பொறுத்து இந்த விதை முளைக்குமா, வளருமா அறுவடை கொடுக்குமா என்றெல்லாம் தெரியும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்

கருத்துகள் இல்லை: