புதன், 22 ஜூலை, 2020

கூட்டு குடும்பத்திற்குள் கொரோனா: 18 பேருக்கு பாதிப்பு - 9 நாட்களில் சகோதரர்கள் 3 பேர் உயிரிழப்பு

கூட்டுக்குடும்பத்திற்குள் புகுந்த கொரோனா: 18 பேருக்கு பாதிப்பு - 9 நாட்களில் சகோதரர்கள் 3 பேர் பலிமாலைமலர் : கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்த 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் 9 நாட்களில் வைரஸ் தாக்குதலுக்கு அடுத்தடுத்து 3 சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பிரிம்பிஹான் கிராமத்தை சேர்ந்தவர்கள் போபட்ராவ் கலப்யூர் (66), டைனேஸ்வர் கலப்யூர் (63) திலீப்ராவ் கலப்யூர் (61). 
சகோதரர்களான இவர்கள் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். மனைவி, மகன்கள், மகள்கள் என இவர்களின் கூட்டுக்குடும்ப உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 18 பேர் ஆகும். இந்தியாவையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கலப்யூரின் கூட்டுக்குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை. கலப்யூரின் குடும்ப உறுப்பினர்களில் முதல் நபராக வாலிபர் ஒருவருக்கு கடந்த ஜூலை 5 ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.


இதைத்தொடர்ந்து கலப்யூர் சகோதரர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில்
எஞ்சிய குடும்ப உறுப்பினர்கள் 17 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனால் ஒட்டுமொத்தமாக குடும்ப உறுப்பினர்கள் 18 பேரும் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் கலப்யூர் சகோதர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

சகோதரர்களில் முதல் நபராக திலீப்ராவ் கலப்யூர் (61) ஜூலை 10 ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு அடுத்தபடியாக ஜூலை 15 ஆம் தேதி 
டைனேஸ்வர் கலப்யூர் (63) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
மற்றொரு சகோதரரான போபட்ராவ் கலப்யூரும் (66) சிகிச்சை பலனின்றி ஜூலை 18 வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தார்.

சகோதரர்கள் மூன்று பேரின் மரணங்களும் ஜூலை 10 முதல் ஜூலை 18 வரையிலான 9 நாட்கள் இடைவெளியில் நடந்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு கூட்டுக்குடும்பத்தின் தலைவர்களான போபட்ராவ் கலப்யூர் (66), டைனேஸ்வர் கலப்யூர்(63), திலீப்ராவ் கலப்யூர்(61)சகோதரகளின் மரணம் குடும்ப உறுப்பினர்களுக்கு பெரும் இழப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு சகோதரர்கள் 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: