வியாழன், 23 ஜூலை, 2020

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துண்டு: அதிமுகவினர் போராட்டம்!

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துண்டு: அதிமுகவினர் போராட்டம்!மின்னம்பலம் : எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் வில்லியனூர் சந்திப்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு ஆளுயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பகல் அவரது சிலைக்கு மர்ம நபர்கள் காவித் துண்டு அணிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். காவித் துண்டு அணிவிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி அதிமுகவினர், எம்.எல்.ஏ அன்பழகன், வையாபுரி, மணிகண்டன் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், அங்கு கூடிய அதிமுகவினர் காவித் துண்டு அணிவித்த மர்ம நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்த வில்லியனூர் காவல் துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
இறுதியில் சிலையில் இருந்த காவித் துண்டு அகற்றப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது.
கந்த சஷ்டி கவச வரிகள் குறித்து வெளியிடப்பட்ட வீடியோவை இந்து அமைப்பினர் எதிர்த்த நிலையில், கோவையிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு காவி சாயம் ஊற்றப்பட்டு அவமதிக்கப்பட்டது. மேலும், பெரியார் சிலைக்கு காவி சாயம் பூச முயன்ற நபரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துண்டு அணிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே திருவண்ணாமலை அருகே கருங்காலிக்குப்பம் கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையின் சட்டைக்கு காவி நிற பெயின்ட் செய்யப்பட்டு சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
எழில்

கருத்துகள் இல்லை: