திங்கள், 20 ஜூலை, 2020

மனுஷ்ய புத்திரன் : கொரோனா வார்டில் ஏராளமான பற்றாக்குறை .

கொரோனா வார்டில் பணியிலிருந்த இளம் மருத்துவன் ஒருவன் மனம் அழுத்தம் தாங்காமல் இன்று மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டான்
நான் இந்த கொரோனா வார்டிற்கு வந்ததிலிருந்து எனக்கு நிறைய அசெளகர்யங்கள் இருந்தன நிறைய போதாமைகள் இருந்தன மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் எல்லோரிடமும் புகார் சொல்லிக்கொண்டிருந்தேன் எல்லோரிடமும் விரோதம் கொண்டிருந்தேன் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் எரிந்துவிழுந்தேன்
ஒரு மருத்துவன் மூன்றாவது மாடியிலிருந்து தலைகுப்புற விழுகிறான் நான் இன்று காலையிலிருந்து எந்தப்புகார்களும் இல்லாமலாகிவிட்டேன் ' ஏதாவது அசெளகர்யம் இருக்கிறதா?' என மருத்துவர் கேட்கிறார்
' இல்லை' என்கிறேன்
' ஏதாவது வேண்டுமா?' என செவிலி கேட்கிறாள்
' இல்லை' என்கிறேன்
' ஏதாவது வாங்கிவரவா?' என வார்டு பாய் கேட்கிறான்
' இல்லை' என்கிறேன்

மேலும்
சக்கர நாற்காலியில் கழிவறைக்கு அழைத்துச் செல்ல எனக்கு உதவியாளர்வர தாமதமாகிக்கொண்டே இருந்தது நான் இரண்டாவது முறை அழைப்பு மணியை அழுத்தவே இல்லை

மெதுவாக கட்டிலிலிருந்து இறங்கி தவழ்ந்து சென்றுவிட்டு தவழ்ந்து வந்து
கட்டிலில் ஏறிப் படுத்துக்கொண்டேன் எனக்கு எந்தப்புகாரும் இல்லை என்னால் இந்த உலகத்திற்கு உதவக்கூடியது அது மட்டுமே
ஒரு மருத்துவன்
மன அழுத்தம் தாங்காமல் மூன்றாம் மாடியிலிருந்து குதிக்கிறான் நான் யாரை நம்பி
இந்த ஐந்தாம் மாடியில் உட்கார்ந்திருக்கிறேன்?
20.7.2020
இரவு 7.01
மனுஷ்ய புத்திரன்

கருத்துகள் இல்லை: