வெள்ளி, 24 ஜூலை, 2020

ராஜஸ்தான் ரூ.900 கோடி மோசடி: மத்திய மந்திரி (BJP) ஷெகாவத்திடம் விசாரணை .. கூட்டுறவு சங்கத்தில்


தினத்தந்தி :  ராஜஸ்தான் கூட்டுறவு சங்கத்தில் நடந்த ரூ.900 கோடி மோசடி தொடர்பாக மத்திய மந்திரி ஷெகாவத்திடம் விசாரணை நடத்த போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஜெய்ப்பூர், ராஜஸ்தானை சேர்ந்த சஞ்சிவனி கடன் கூட்டுறவு சங்கத்தின் ஜெய்ப்பூர் கிளையில் ஆயிரக்கணக்கான மக்கள் பணம் சேமித்து வந்தனர். இந்த சங்கத்தில் ரூ.900 கோடி அளவுக்கு மோசடி நடந்தது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக ராஜஸ்தான் போலீஸ் சிறப்பு நடவடிக்கைக்குழுவினர் கடந்த ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மோசடியில் மத்திய மந்திரியும், ராஜஸ்தான்பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டினர்.
எனவே அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் சிறப்பு நடவடிக்கைக்குழுவினர் மந்திரி மற்றும் குடும்பத்தினரை இந்த வழக்கில் சேர்க்கவில்லை. இந்த மோசடி தொடர்பாக பின்னர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதிலும் ஷெகாவத் மற்றும் குடும்பத்தினர் பெயர் இல்லை.
எனவே மந்திரி மற்றும் குடும்பத்தினரை வழக்கில் சேர்க்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் சார்பில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை கோர்ட்டு நிராகரித்தது.

இதைத்தொடர்ந்து புகார்தாரர்களான குலாம் சிங் மற்றும் லபூ சிங் ஆகியோர் மாவட்ட கூடுதல் நீதிபதி கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். போலீஸ் சிறப்பு நடவடிக்கைக்குழுவினர் மந்திரியை பாதுகாப்பதற்காக வேண்டுமென்றே இந்த வழக்கில் அவர்களை சேர்க்கவில்லை என அதில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பவன்குமார், கூட்டுறவு சங்க மோசடி தொடர்பாக மந்திரி ஷெகாவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்துமாறு இந்த புகாரை போலீஸ் சிறப்பு நடவடிக்கைக்குழுவுக்கு அனுப்பி வைக்குமாறு கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு உத்தரவிட்டார்.

இதனால் மந்திரி ஷெகாவத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

ஏற்கனவே ராஜஸ்தான் அரசை கவிழ்க்க முயன்றதாக காங்கிரஸ் வெளியிட்ட ஆடியோ டேப் தொடர்பாக ஷெகாவத்துக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், தற்போது கடன் மோசடி வழக்கிலும் அவரிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: