வியாழன், 18 ஜூன், 2020

டெல்லியில் உலகின் கவனத்தை தமிழர் பக்கம் திருப்பிய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் ..... இலங்கை - இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு - 5

அமரர் அப்பாபிள்ளை  அமிர்தலிங்கம்  ( இலங்கை முன்னாள் எதிர்கட்சி தலைவர்)
இந்த சூழ்நிலையில் இலங்கைக்குத் தன் வெளிநாட்டு அமைச்சர் திரு.
நரசிம்மராவ்   அவர்களை அனுப்பினார் பாரதப் பிரதமர் திருமதி இந்திரா
காந்தி. ஜூலை 29-ந் திகதி இந்திய அமைச்சரின் வருகைக்குப் பின் தான்
ஜனாதிபதி ஜயவர்த்தனா நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தார். இதைத் தொடர்ந்து இந்திரா அம்மையாரைத் திருப்திப் படுத்துவதற்காக       தன் சகோதரர் திரு. எச். டபிள்யூ. ஜயவர்த்தனாவை டெல்லிக்கு அனுப்பிவைத்தார். இச்சந்தர்ப் பத்தில் தான் பாரதப் பிரதமர் இலங்கையின் இனப்பிரச் சனையைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் நல்லெண்ணச் சேவையை நல்க, முன்வந்தார். ஜனாதிபதியோடு தொலை பேசியில் தொடர்பு கொண்டு
A.Amirthalingam - M.Sivasithambaram MP
பேசியபின் இலங்கை அரசு அச்சேவையை ஏற்றுக்கொள்வதாகத் திரு. எச். டபிள்யூ. ஜயவர்த்தனா அறிவித்தார். தமிழ் மக்களின் உண்மை நிலையைப் பாரதப் பிரதமருக்கு எடுத்து விளக்குவதற்காக  நான் டெல்லி செல்ல வேண்டுமென்று நமது மக்களில் பலர் கேட்டுக் கொண்டதன் பேரில் நான் மாறுவேடத்தில் கொழும்பு சென்று ஆகஸ்ட் 13-ந் திகதி தமிழ் நாடு வந்து சேர்ந்தேன்.
மக்கள் துன்பப்பட அவர்களைக் கைவிட்டு என்னைக் காத்துக் கொள்ள நான் இந்தியா வரவில்லை. இந்தியாவின் உதவியோடு ஏற்கனவே நாம் பாரதப் பிரதமரோடு சில ஆண்டுகளாக ஏற்படுத்திய தொடர்பைப் பயன்படுத்திக், காலத்திற்குக் காலம் பலிக்களத்தில் நிறுத்தப்படும் இலங்கை தமிழ் மக்களின் இன்னலுக்கு ஓர்  நிரந்தரத் தீர்வுகாண வேண்டுமென்னும் ஒரே உறுதியோடுதான் இந்தியா வந்தேன்.


தமிழ் நாட்டு முதலமைச்சர், ஏனைய அமைச்சர்கள், தி.மு.க. தலைவர்கள், ஏனைய எதிர்கட்சித் தலைவர்கள் எல்லோருடனும் இரவோடிரவாகப் பேசி அவர்கள் ஆலோசனைகளைப் பெற்று 14-ந் திகதி காலையே டெல்லி போனேன். அன்று பகல் 11 மணிக்கே பாரதப் பிரதமரைப் பார்த்து ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக எம்மக்கள் நிலைபற்றி எடுத்துக்கூறி, வங்கதேச மக்களைக் காத்தது போல ஈழத்தமிழ் மக்களையும் காக்க வேண்டுமென்று கோரினேன்.

 அணி சேரா நாடுகளின்  தலைவி !
திருமதி இந்திரா காந்தி அணிசேரா நாடுகளின் தலைவி யாகவும் விளங்கினார். இலங்கையும் ஓர் அணிசேரா நாடு. இலங்கையின் உள்நாட்டு விஷயத்தில் அணிசேரா நாடுகளின் தலைமை நாடான இந்தியா தலையிடுவதற்கு ஆட்சேபம் தெரிவித்து மலேசியா அவருக்குக் கடிதம் அனுப்பியிருந்தது. இலங்கையில் நடைபெறும் தமிழ் மக்களுக்கெதிரான இனக்கொலையை, மனித உரிமை மீறல்களை விளக்கி அணிசேரா நாடுகளுக்கெல்லாம் கடிதம் எழுதுமாறு பாரதப் பிரதமர் அவர்களே கேட்டுக் கொண்டார். அன்று டெல்லி வந்து சேர்ந்த  டாக்டர். நீலன் திருச்செல்வத்தின் உதவியோடு அன்று பிற்பகல் ஒரு விரிவான கடிதம் தயாரித்து அணிசேரா நாடுகளின் தலைவி என்ற முறையில் திருமதி  இந்திரா காந்தியின் கையில் கொடுத்து ஏனைய நாடுகளுக்கும் அனுப்பினோம

அடுத்த நாள் ஆகஸ்ட் 15-ந் திகதி இந்திய சுதந்திர தினம், அன்று மாலை இந்திய பாராளுமன்றக் கட்டிடத்தில் பாராளுமன்றத்துறை அமைச்சர் திரு. பூட்டாசிங் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லோரதும், கூட்டம் நடைபெற்றது. இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக அவர்கள் மத்தியில் உரையாற்றினேன். அக்கூட்டம் முடிந்து சுதந்திரதின வைபவத்திற்கு நான் சென்றபோது, திருமதி இந்திராகாந்தி கூறியது. என்னை நெகிழச் செய்தது. ''எதிர்கட்சித் தலைவர்களோடு உங்கள் சந்திப்பு மிக வெற்றிகரமாக அமைந்தது என்று அறிகின்றேன். இது என் பழுவை வெகுவாகக் குறைத்து விட்டது'' என்று கூறினார்.
எமது துன்பத்தைத் தீர்ப்பதில் எத்துணை அக்கறை அவர் கொண்டிருந்தார் என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு வேண்டுமா?
 சுதந்திரதின விழாவில் பிரதம விருந்தினராக வந்திருந்த சோவியத்துணைப் பிரதமரோடு என்னையும் அமரவைத்து, இலங்கைத் தமிழர் பிரச்சனையே இச்சுதந்திரதினத்தில் இந்தியாவின் தலையாய பிரச்சனையென்று அத்தனை விருந்தினரையும் உணரச் செய்தார்


ஒப்பந்த வரலாறு .. 1
 ஒப்பந்த வரலாறு 2  
 ஒப்பந்த வரலாறு 3
 ஒப்பந்த வரலாறு 4 
 
ஒப்பந்த வரலாறு 6
ஒப்பந்த வரலாறு 7
ஒப்பந்த வரலாறு 8

ஒப்பந்த வரலாறு 9
ஒப்பந்த வரலாறு 10

பத்மநாபா கொலை.. புலிகளை தண்டித்திருந்தால் ராஜீவ் காந்தி கொலை தவிர்க்கப்பட்டிருக்கும்?

ராஜீவ் காந்தியின் இந்திய-இலங்கை உடன்பாடு தன்னிகரில்லாதது;.. சுமந்திரன் எம்பி

கருத்துகள் இல்லை: