வெள்ளி, 24 ஜூலை, 2020

நைஜீரியாவிலும் தீண்டாமை "ஓசு" எனும் நைஜீரிய பஞ்சமர்கள் !

Dhinakaran Chelliah : நைஜீரியாவிலும் தீண்டாமை ! "ஓசு" எனும் நைஜீரிய பஞ்சமர்கள் !!!
கிழக்கு நைஜீரியாவில் உள்ள இக்போ மக்களில் "ஒசு"(Osu) எனப்படுவோர் இன்றைய தேதியிலும் தீண்டத்தகாதவர்களாகவும் சபிக்கப்பட்டவர்களாகவும் ஒதுக்கிவைக்கப் பட்டுள்ளனர்.
இன்றைய தென்கிழக்கு நைஜீரியாவில் இக்போ எனும் ஒரு தனித்துவமான பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பேசும் மொழியை இந்தப் பிராந்தியத்தில் (Igboland) வேறு யாரும் பேசுவதில்லை. இக்போ மக்கள் இங்கு குடியேறியது எப்படி அல்லது எப்போது என்பதை சரித்திர ஆசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இன்னும் தெளிவாக கண்டுபிடிக்கவில்லை.
இக்போ சமூக அமைப்பில் இரு பகுதி உள்ளது, ஒன்று ஓசு; அதாவது ஆச்சாரிய சாதி அல்லது அவரிடமிருந்து வந்தவர்கள், மற்றொன்று "டயலா" ; இவர்கள் மண்ணின் மைந்தர்கள். பண்டைய காலத்தில், இவர்களுக்குள் முரண்பாடுகள் இருந்ததில்லை.

இக்போக்கள் பாரம்பரியம் மற்றும் மரபுகள் நிறைந்த மக்கள். அவர்களுடைய பாரம்பரியத்தின் மையம் அவர்களுடைய மதமாகும். இவர்கள் நம் ஊர் நாட்டார் தெய்வங்களைப் போல் உள்ள காவல் தெய்வங்கள் மற்றும் மூதாதையர்களை வழிபட்டனர். ஆரம்பத்தில் இவர்களுள் அரசன் இல்லாத சமத்துவ ஆட்சிமுறை இருந்ததாக நம்பப்படுகிறது. கிராமங்களுக்கென தனியாக சதுக்கங்களும் சமுதாயத்திற்கென சதுக்கங்களும் இருந்திருக்கின்றன, இவைகள்தான் பின்னாளில் ஆட்சி மற்றும் அதிகார மையங்களாக மாறியிருக்கின்றன.இரண்டு பேர் அல்லது கிராமங்களுக்கிடையே கருத்து வேறுபாடு, கடவுள்களிடமிருந்து செய்தி, கிழங்கு பண்டிகை(Yam) அல்லது மல்யுத்த போட்டி, போர் அல்லது பேரழிவு போன்ற பாதுகாப்பு பிரச்சினைகள் போன்றவை சதுக்கத்தில் உள்ளவர்களால் கவனித்துக்கொள்ளப்பட்டது.

நாள்தோறும் மற்றும் ஒவ்வொரு விழாவிலும் பிரத்யோக நிகழ்ச்சியிலும் மனித நரபலியிடப்பட்டது. ஒரு கிராமம் அல்லது சமூகம் உருவானபோது, சக்தி வாய்ந்த தெய்வங்களின் ஆச்சாரியார்கள், கிராமத்தையோ அல்லது சமூகத்தையோ உருவாக்கம் செய்வதற்கு அழைக்கப்பட்டனர். கடுமையான சடங்குகள் மற்றும் விழாவிற்குப் பிறகு, தெய்வம் நிலைநிறுத்தப்பட்டது. இக்போ மக்களின் ஒவ்வொரு நகர்விலும் தெய்வங்களின் பங்களிப்பு இருந்தது.(சில இனக்குழு மக்கள் இன்றும் மலைப்பாம்புகளை தங்கள் தெய்வங்களுக்கு ஒப்பாக புனிதமானதாக கருதுகின்றனர்.தப்பித்தவறி அது கொல்லப்பட்டுவிட்டால் மனிதர்களுக்கு செய்யும் இறுதிச்சடங்குகள் போன்று செய்யப்பட வேண்டும், தவிர தங்களையும் தங்கள் இனத்தையும் தூய்மைப்படுத்த வித விதமான சடங்குகளையும் செய்ய வேண்டும்).

சமகாலத்திய கலாச்சாரங்கள் போல, ஒவ்வொரு தெய்வமும் தனது ஆச்சாரியாரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும். ஆச்சாரியார் இறந்த போது, தெய்வம் இறந்த ஆச்சாரியார் அல்லது கிராமத்தில் அல்லது சமுதாயத்தில் உள்ள மற்றவர்களுடைய பிள்ளைகளை தெரிவுசெய்கிறது. வயது முதிர்ந்த அர்ச்சகர் அல்லது ஆச்சாரியார் தலைமை பூசாரியாக அல்லது அதிகாரமிக்க மதகுருவாக மாறுகிறார். அவரை மீறி யாரும் எந்த முடிவும் எடுப்பதில்லை.
செவிவழிச் செய்தி ஒன்று, "ஓசு" எனும் ஆச்சரியார் தெய்வங்களுக்கென்றே பிரதிஷ்டை பண்ணப்படுகிறார் அல்லது ஒப்புக்கொடுக்கப்படுகிறார் எனக் கூறுகிறது(நம்மூரில் கடவுளுக்கு நேர்ந்துவிடுவது,காளை மாடுகள் இன்றும் கோயில்களில் நேர்ந்துவிடப்படுவது நாம் அறிந்ததே). தெய்வங்களுக்கு கட்டப்பட்டுள்ள புனித இடங்களுக்கு அருகிலேயே தெய்வங்களின் அம்சமாகவும் உருவகமாகவும் இந்த "ஓசு" பாவிக்கப்படுகிறார்.

 இவரின் அன்றாட பணிகள் முழுதும் தலைமை மதகுருவின் பணிகளுக்கு ஒப்பானது(தெய்வத்தின் மறுஉருவகமாக பாவிக்கப்பட்டது ஒன்றைத்தவிர). மக்களால் ஓசு மிகுந்த மரியாதையுடன் மதிக்கப்பட்டார். அவருக்கு தீங்கு செய்வோர் அவர் பிரதிபலிக்கும் தெய்வீகத்தால் தண்டிக்கப்பட்டார்கள். கிராமத்து மக்கள் அவருக்கு மனையாளை கொடுத்து அவருடைய பண்ணையில் அவருக்கு உதவினார்கள்.சாதி அந்தஸ்து இல்லாமல் ஒரு ராஜாவைப் போலவே ஓசு வாழ்ந்தார். காலப்போக்கில், துன்புறுத்தப்பட்டவர்கள் தண்டனைக்குள்ளானவர்கள் தங்களை தெய்வங்களுக்கு ஒப்புக்கொடுத்ததன் மூலம் ஒரே குழுவாக சேருகிறார்கள்.

இவர்களே பின்நாளில் ஓசு சாதியாக அறியப்படுகிறார்கள். ஒருமுறை தூய்மைப்படுத்தப்பட்டு தெய்வத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவர்களை யாரும் துன்புறுத்துவதில்லை.. இவர்களும் இவர்களது சந்ததிகளும் பின்னாளில் "ஓசு" பெயரில் ஒரு சாதியாகவே உருவெடுக்கிறார்கள்.
இக்போ நிலத்தில், "ஓசு" சாதியினரின் செல்வாக்கு நாளுக்கு நாள் பெருகத்தொடங்கியது. பிரதான மதகுரு போலன்றி, ஓசு சாதி பரம்பரையை சார்ந்ததாக இருந்தது, எனவே அவர்களது எண்ணிக்கை அதிகரித்து வந்தபோது, அவர்களுக்கான நிலமும் அதிகம் தேவைப்பட்டது. இந்த சமயத்தில் ஓசு சாதியில் பலர் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை தவறாக பயன்படுத்தி நிலங்களை அபகரிக்க ஆரம்பித்தனர்.

"ஓசு" சாதிக்காரர் நிலத்தை அபகரித்தால் கடவுளே நிலத்தை எடுத்துக்கொண்டமாதிரி, எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாது. அபகரிக்கவேண்டிய நிலத்தைச் சுற்றிலும் பனை ஓலைகளை நிரப்பினால் அந்த நிலம் ஒசுவுக்கு சொந்தமாகிவிடும்.பின்னாளில் இந்தமுறை 'இக்பாயிட்டி'('Igbaiti') என்று அறியப்பட்டது. இதை எதிர்த்து முறையிட்டால் எதிர்ப்போரின் வாழ்க்கை பாழானதுதான் மிச்சம்.இது மக்கள் மத்தியில் விரோதத்தை கட்டியெழுப்பப் போதுமானதாய் இருந்தது.
இதற்கிடையில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் நைஜிரியா முழுதும் பரவுகிறது.
காலனித்துவமும் கிறித்துவமும் நைஜிரியாவில் பழைய ஒழுங்கை உடைத்தபோது ஒரு தளர்ச்சியுடனான விரோதப் போக்கு தொடர்ந்தது. கிறித்தவ மிஷினரிகள் நேருக்கு நேர் பிரச்சனைகளை எதிர்கொண்டனர், இக்போ மக்களை கொஞ்சம் கொஞ்சமாய் கிறித்தவத்திற்குள் ஐக்கியப்படுத்தினர். விரைவில் காலனிய ஆதிக்கத்தின் சட்டத்திற்கு முன் எல்லோரும் சமமாய் நிறுத்தப்பட்டனர்.

ஓசுவின் பல சந்ததியினர் பாரம்பரிய மருத்துவ கலைகளில் மிகவும் திறமையானவர்கள்,இது மற்ற மக்களுக்கு ஓசு சாதியினர் மீதிருந்த பயத்தை அதிகரிக்கவே செய்தது. மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் மதம் இக்போலாந்தில் ஊடுருவும் வரை இந்த நிலை நீடித்தது.பாரம்பரியமான முறைகள் அனைத்தையும் புறம்தள்ளி அதனை பின்பற்றுவோரை புறமதத்தவர் என ஒதுக்கினர் கிறித்தவ மிஷினரிகள்.அவர்கள் பழமையான இசைக்கருவிகளைக்கூட விட்டுவைக்கவில்லை.இளைஞர்கள் யுவதிகள் இதை எதிர்த்து கேள்வியெழுப்ப ஆரம்பித்தனர்.இன்றைய தேதியில் இக்போ மக்கள் முழுவதும் கிறித்தவத்தை தழுவியிருந்தாலும், கிறித்தவதால் ஓசு சாதிமுறையை அடியோடு ஒழிக்கமுடியவில்லை என்பதுதான் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு.

ஓசு பாரம்பரியம் சமுதாயத்தில் சபிக்கப்பட்டதா? இதற்கு பதில், "இல்லை" என்பதுதான்.ஆனால் அவர்கள் இந்த தெய்வங்களுக்கு புனிதமானவர்களாக இருந்தனர். ஆனால் கிறித்தவ சபை "பூசாரிகளே நீங்கள் சபிக்கப்பட்டிருக்கிறீர்கள்'' என்று கூறுகிறது.
இன்றைய தேதியில் ஓசு மக்களின் நிலை பரிதாபகரமானது.அவர்களுக்குள்ளேயேதான் திருமண உறவு வைத்துக்கொள்ளவேண்டும், "டயலா" என்னும் மண்ணின் மைந்தர்களுடனோ வேறு ஏதாவது பிரிவினருடன் சம்பந்தம் கொள்ளவோ முடியாது. மக்கள் இப்போது 'ஓசு' என்ற தலைப்பில் யாரையும் பார்க்கவோ அல்லது தொடர்பு கொள்ளவோ விரும்புவதில்லை.

1956 ஆம் ஆண்டில், கிழக்கு பிராந்திய நாடாளுமன்றம் ஓசு சாதி முறையை ஒழித்துரைக்கும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதுடன், ஓசு சாதியினருக்கு தீங்கு இழைப்பவர்கள் மீது தண்டனையை அறிமுகப்படுத்தியது. ஆனால் இதுவரை ஒரு வழக்கும் பதிவு பண்ணப்படவில்லை.
ஓசுவின் இறந்த உடலைப் புதைப்பதற்கு பிசாசுகளின் புதைவிடத்திற்குத்தான் எடுத்துச் செல்ல வேண்டும்.
காலை நேரங்களில் ஓசுவை நேருக்கு நேர் சந்திப்பதை மற்றவர்கள் தவிர்த்தனர், அதற்காகவே ஓசு சாதியினர் மதியவேளைக்குப் பின் வீட்டைவிட்டு கிளம்பவேண்டும் எனும் வழக்கம் பின்பற்றப்பட்டது.
ஓசு சாதியினரை அடையாளம் கண்டுகொள்வது எளிது, அவர்களுக்கு முடி அதிகமாய் இருக்கும், ஏனெனில் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப் பட்டவர்கள் முடியை வெட்டுதல் கூடாது, மீறி இவர்களுக்கு முடிவெட்டப்பட்டால் வெட்டியவர் உடனே இறந்துவிடுவார் என நம்பப்பட்டது.

ஓசுவின் காதின் ஒருபகுதி வெட்டப்பட்டிருக்கும். ஓசுவின் மீது வித்தியாசமான வாடை வீசும் என்றும் நம்புகின்றனர்.ஓசுவின் வீட்டிற்கு செல்லக் கூடாது, அவர்கள் கொடுக்கும் பொருளை வாங்கக்கூடாது.
இன்றைய நவீன உலகத்தில் இக்போ மக்களிடம் ஓசு எனும் சாதி அடையாளம் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் அவர்களது மனதைவிட்டு மறையவில்லை, அவர்களூடே இன்னமும் வாழ்ந்து இருந்துகொண்டுதான் இருக்கிறது.மத மாற்றம் அவர்களது மனதை மாற்றவில்லை.
Osu caste system உட்பட மனித உரிமைகளுக்காய் குரல் எழுப்பும் நைஜீரியா நாட்டு நண்பர் Leo அவர்கள் எழுதிய கட்டுரைகள், Nigeria World எனும் பத்திரிக்கையில் வந்த கட்டுரைகள் மற்றும் Africa Journal of Evangalical Theologyல் வெளிவந்த கட்டுரையையும் ஆதாரமாய் கொண்டு எழுதப்பட்டது

கருத்துகள் இல்லை: