வியாழன், 23 ஜூலை, 2020

’உள்ளம் உருகுதையா முருகா… கந்த சஷ்டி கவசம் . சாவித்திரி கண்ணன்

சாவித்திரி ண்ணன் : முருக பக்தனாக இருந்த போதிலும் தனிப்பட்ட முறையில் கந்தசஷ்டி கவசம் பாடலை நான் ஒரு முறை கூட பாடியதே இல்லை! பாடவேண்டும் என்று தோன்றியதும் இல்லை!
ஆனால்,சின்னஞ் சிறிய வயதில் இருந்து அந்தப் பாடலை பல நூறு முறை யதேச்சையாக கேட்டு வந்துள்ளேன்! நானாக விரும்பி ஒலிக்கவிட்டு கேட்டதில்லை!
டி.எம்.எஸ்சின் நிறைய முருகன் பாடல்களை மீண்டும்,மீண்டும் கேட்டு உள்ளம் கனிந்து கசிந்துருகியுள்ளேன்!
’’உள்ளம் உருகுதையா முருகா…’’
’’அழகென்ற சொல்லுக்கு முருகா’’
இந்த இரண்டும் என் நெஞ்சுக்கு நெருக்கமானவை!
’’சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா..’’என்ற பாடலில் வரும்
’’உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது – அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ..’’ என்ற வரியில் நெஞ்சம் நெக்குருகிவிடும்!
என் வாழ்க்கையில் இடையில் ஒரு பதினைந்து ஆண்டுகள் எனக்கு கடவுள் நம்பிக்கையே இல்லாமலிருந்தது! ஆனால்,அப்போதும் கூட இந்தப் பாடல்களை நான் விரும்பி கேட்டுள்ளேன். உருவ வழிபாடுகள் அனைத்தும் நமது கற்பிதங்கள் என்பதை இன்றும் நான் நன்கு உணர்ந்தாலும் கூட, பக்தி இசையில் மனம் லயிப்பது ஏதோ ஒரு வகையில் எனக்கு மகிழ்வைத் தருகிறது.

யோசித்துப் பார்க்கும் போது மென்மையான - நம் உள்ளத்தை உருகச் செய்கின்ற - நம்மை மேன்மைபடுத்துகிற பாடல்களில் எனக்கு பெரு விருப்பம் ஏற்பட்டுள்ளது என உணர்கிறேன்!
விபரம் தெரியாத வயதில் இருந்து காந்தி மீது எனக்கு மிகவும் ஈடுபாடு உண்டு! ஆனாலும் காந்தியடிகள் மிகவும் பக்தி சிரத்தையுடன் வணங்கிய ராமன் மீது எனக்கு ஏனோ சிறிதளவு கூட ஈடுபாடு ஏற்பட்டதில்லை! அது போல ஆண்டாளின் பெருமாள் பாடல்களின் தமிழ் மிக பிடித்திருந்தாலும் அதை பக்திக்கானதாக என்னால் ஏற்க முடியவில்லை!
எனக்கு மாணிக்க வாசகரின் எட்டாம் திருமுறை திருவாசகப் பாடலான, ’’நமச் சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க’’ பாடலும், அவ்வையாரின் விநாயகர் அகவலான ’’சீதகளபச் செந்தாமரைப் பூவும் பாதச் சிலம்பும் பண்ணிசை பாட..’’ பாடலும் மனப்பாடம்! இத்துடன் சிவவாக்கியரின் ’’ஓடி,ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை..’’ என்ற தத்துவப் பாடலிலும் அதிக ஈடுபாடு உண்டு!
என் அம்மா ஒரு வள்ளலார் பக்தையாக இருந்தார்கள்! அவர்கள் வள்ளலார் பாடல்களை மனம் உருகப்பாடுவார்கள்! அந்த வகையில் என் சிறு வயது முதலே எனக்கு வள்ளலார் பாடல்கள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.
வள்ளலரின் முருகன் பாடலான ’’ஒருமையுடன் நினது திருவடிகளை நினைக்கும் உத்தமர் தம் உறவு வேண்டும்…!’’ என்ற பாடலும்,
’’அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்.
ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்’’
என்ற பாடலும் என் அம்மா வழியில் இன்றும் நான் தினசரி பாடும் வள்ளலார் பாடல்களில் முக்கியமானவை!
அதாவது, ’ஒருயிர்,ஈருயிர் உயிரினங்கள் தொடங்கி ஆறுயிரான மனிதன் ஈறாக எல்லா உயிர்களுக்கும் அன்பு செய்ய வேண்டும்’ என்ற கருத்து எனக்கு விருப்பமுள்ளது என்ற வகையில் மனதில் ஆழப் பதிந்தது!
கந்தர் சஷ்டி கவசத்தின் சில வரிகள் வன்முறை வரிகளாக உள்ளது என்பதே நான் அந்தப் பாடலை பாடாமல் நான் தவிர்த்தற்கு காரணம் எனத் தோன்றுகிறது.ஆனால், நான் முன்பே சென்ற பதிவில் குறிப்பிட்டபடி அந்த காலகட்டத்தில் நிலவிய சமூகச் சூழல்களின் தேவையாக அந்தப் பாடலுக்கு ஒரு முக்கியத்துவம் ஏற்பட்டு இருக்கிறது என்பதே என் புரிதல். மேலும் சூலமங்களம் சகோதரிகள் குரலில் மிக இனிமையாக அந்தப் பாடல் ஒலிக்கத் தொடங்கிய பிறகு இப்பாடல் மென்மேலும் புகழ் பெற்றது! என் மனைவிக்கு கந்த சஷ்டிக் கவசத்தில் சிறுவயது முதலே ஈடுபாடு உண்டு!
ஆனால்,ஏன் இந்தப் பாட்டில் எனக்கு மட்டும் ஏன் ஒரு ஈர்ப்பு உருவாகவில்லை என யோசித்துப் பார்க்கையில், இக்காலகட்டத்திற்கான பொருத்தப்பாடு இந்தப் பாட்டில் சற்று குறைந்திருப்பதும்,அகிம்ஸையை நாடும் என் மன நிலைக்கு இந்தப் பாடல் அவ்வளவு ஏற்பில்லாமல் இருப்பதும் இந்தப் பாடலை நான் பாடாமல் தவிர்த்திருக்க காரணமாயிருக்கலாம்!
ஒரு பாட்டில் ஒருவருக்கு பெருஈடுபாடு உருவாவதற்கு அவரது மன நிலை, வாழ்க்கைச் சூழல், குடும்பச் சூழல்,சமூகச் சூழல் ஆகிய பல்வேறு காரணிகள் இருக்கிறது என்பதே யதார்த்தம்! நான் நானாக இருப்பதையே விரும்புகிறேன். அதே போல அவரவர்களும், அவரவர் தன்மையிலேயே வழிபடவும், வழிபாட்டை மறுத்து இயங்குவதற்குமான எல்லா உரிமைகளும் கொண்டவர்கள் என உணர்ந்து மதிக்கிறேன்!
சாவித்திரி கண்ணன்
பத்திரிகையாளர்

கருத்துகள் இல்லை: