ஞாயிறு, 19 ஜூலை, 2020

பைலட்டை கைகழுவும் எம்.எல்.ஏ.க்கள்.. கெலாட் கேம்?

கெலாட் கேம்: பைலட்டை கைகழுவும் எம்.எல்.ஏ.க்கள்?மின்னம்பலம் : சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டை ஆதரிக்க முன் வந்தால் அவர்களின் தகுதி நீக்கம் பற்றி பரிசீலிக்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் ராஜஸ்தான் மாநில பொறுப்பாளருமான அவினாஷ் பாண்டே கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநில துணை முதல்வராகவும் காங்கிரஸ் தலைவராகவும் இருந்த சச்சின் பைலட், அம்மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

இதை எதிர்த்து அவர்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க, வரும் ஜூலை 21 ஆம் தேதி வரை அந்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
நீதிமன்றம் அளித்த அவகாசத்துக்கு இன்னும் இரு தினங்களே இருக்கும் நிலையில் இன்று (ஜூலை 19) காங்கிரஸ் பொதுச் செயலாளர் அவினாஷ் பாண்டே தி ஹிந்து நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “ ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சட்டசபையில் தனது பலத்தை வெளிப்படுத்த முழுமையாக தயாராக உள்ளார். அவரது அரசாங்கம் 5 ஆண்டு காலத்தை நிறைவு செய்யும். அசோக் கெலாட் பெரும்பான்மைக்குத் தேவையான சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கிறார். தேவைப்பட்டால், ராஜஸ்தான் சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டுவது குறித்து கூட நாங்கள் முடிவு செய்வோம். ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக இப்போது காங்கிரஸ் காத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார் “சச்சின் பைலட் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் இப்போதும் பேசி வருகிறதா?” என்ற கேள்விக்கு
“காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் அறிவுறுத்தலைப் பின்பற்றாத எம்.எல்.ஏக்கள் முதலில் சபாநாயகரின் நோட்டீஸுக்கு திருப்திகரமான பதிலை அளிக்க வேண்டும். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் திரும்பி வர விரும்பினால், அவர்களின் தகுதி நீக்க நோட்டீஸ் குறித்து கட்சி முடிவு செய்யும்” என்றார் பாண்டே.
இதற்கிடையே பைலட் முகாமின் எட்டு அல்லது ஒன்பது எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்பு கொண்டுள்ளனர் என்ற தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இது குறித்து கேட்கப்பட்டதற்கு, "நான் யூகங்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்று பதிலளித்துள்ளார்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: