வெள்ளி, 24 ஜூலை, 2020

விவசாயம் பற்றி பல இதழ்களில் வரும் ஓவர் பில்ட் அப் கதைகள் ..

அமெரிக்க நாசாவில் வேலையை விட்டுவிட்டு விவசாயம் பார்க்க கழனி புகுந்த என்ஜினீர்', 'குறைந்த  முதலீடு, அதிக லாபம்', 'கார்ப்பரேட் அழுத்தங்கள் இல்லாத மன நிம்மதியான விவசாய வாழ்க்கை', மற்றும் பல 'பெப்பப்' வரிகளும் விவசாயத்தை புனிதப்படுத்தும் வசனங்களும் கேட்டு அதை தொட்டால் கெட்டோம் என்பதை பின்னாளில் சில நண்பர்களின் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்.
பிலன் காமராஜ் : ஐந்து வயசு இருக்கும் பொழுது அப்பாவுடன் அவர் கிராமத்துக்கு போயிருக்கேன். எதுக்குன்னா, நரி பார்ப்பதற்கு. கரும்பு தோட்டத்தில் அறுவடையின் பொழுது பரண் மீதிருந்து பார்த்தால் நரி குட்டிகளுடன் ஓடுவது தெரியும். தோட்டத்திலேயே வெல்லம் காச்சுவார்கள்.
பத்து வயசு இருக்கும் பொழுது எங்க அப்பாவின் கிராமத்துக்கு கோடை விடுமுறைக்கு போனால் செம கொண்டாட்டமாக இருக்கும். ஊர் ஒருபுறம் வயல் மறுபுறம் இடையில் ஆறு ஓடிக் கொண்டிருக்கும். வயலில் பம்பு செட் கிணற்று நீரை இரைக்கும் தொட்டிக்குள் கும்மாளம் போட்டு, ஆற்று மீனை பிடித்து வந்து வீட்டுத் தொட்டியில் விட்டு என விளையாட ஏக மகிழ்ச்சி.
அதுக்கப்புறம் அதிகம் சென்றதில்லை. பொறியியல் படிக்கும் பொழுது வீட்டிலிருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான மோட்டார் பம்பை கட்டுப்படுத்த நான் செய்திருந்த மின்னனு கட்டுப்பாட்டு கருவியை பார்த்து சித்தப்பா வயலில் இருக்கும் மோட்டார் பம்பிற்கும் ஒன்று செய்து கொடுக்க சொன்னார்.

அதுவும் 3phase மின்சாரம் இரவு ரெண்டு மணிக்கு இலவசமாக வரும் பொழுது, தனியனியங்கியாக செயல்படும் கருவி. நான் செய்வதன் தரம் எப்படி இருக்கும் என எனக்கே சந்தேகம் இருந்ததால், வீணாக உயிருடன் விளையாட வேண்டாம் என செய்யவில்லை.

< ஏழாண்டுகளுக்கு முன்னர் சுவீடனில் இருக்கும் பொழுது 30வயதை நெருங்கும் காலத்தில், போதும் கார்ப்பரேட் வாழ்க்கை, ஊருக்கு போய் ஒரு ஆட்டுப் பண்ணை வைப்போம். தொழில் நுட்பத்தை கொண்டு மேலாண்மை செய்யும் அதிநவீன பண்ணை. அதில் ஆடு, கோழி, வாத்து, மீன், காளான் என வளர்த்தால், நல்ல வருமானம் என யோசித்து தேடி தேடிப் படித்தேன். அது போல முன்னரே செய்திருந்த சிலரை தொடர்பு கொண்டேன். அப்பாகிட்ட கேட்டு சின்னதா ஒரு நிலம் எடுத்துக்கலாம், முதலீடு செய்ய என்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு, மற்றவற்றிருக்கு வங்கியில் கடன் வாங்கிக்கலாம் என்ற எண்ணதோட அன்று ஐரோப்பாவில் கிடைத்த ஒரு வேலையை கூட விருப்பமில்லை என மறுத்துவிட்டேன்.

இந்திய அலுவலகத்தில் என் மேலாளருக்கு நான் சேர்ந்த நாள் முதலே இந்த சந்தேகம் இருந்தது. அப்பப்போ கேட்டு உறுதி செய்து கொள்வார். ஆனாலும் இந்த கிறுக்கன் என்னைக்காவது கிராமத்துக்கு போய் மண்வெட்டி பிடிக்கறேன்னு ராஜினாமா கடிதத்தோட வருவான் என அவருக்கு உள்ளுக்குள் எங்கேயாவது தோன்றியிருக்கும், வெளிக்காட்டாமல் விசாரித்து கொள்வார். அவரும் அத்தகைய பின்புலத்தில் இருந்து வந்தவர் தான்.

என் பண்ணை விவசாயத்திற்கு அப்பா சம்மதம் தெரிவித்தார், சற்று தயக்கத்தோடு. அம்மாவிடம் அதுபற்றி பேசும் பொழுது "ஆமாடா உங்க அப்பா விவசாயம் பார்த்து அதுக்கப்புறம் அரசு வேலை கிடைச்சதும் விவசாயத்தை விட்டுட்டு போனாரு. பணிஓய்வு பெற்றதும் பணிமூப்பில் கிடைச்ச பாதி காசை வயலில் மோட்டார் பம்பை சரி செய்யவே செலவழிச்சு இப்போ அதையும் நிறுத்திக்கிட்டாரு. இந்த லட்சணத்துல நீ இப்போ போய் விவசாயம் செய்யப் போறியா ? நீ பார்க்குற அதிநவீன தொழில்நுட்பம் வளரும் வேகத்திற்கு நீயும் வளருவ, வசதி வாய்ப்புகள் வரும். அதைவிட்டுட்டு இதில் இறங்கி மறுபடியும் குடும்பத்தை ரெண்டு தலைமுறை பின்னுக்கு இழுத்துட்டு போயிடாதா!!! நீ பணிஓய்வு பெறும் போது வந்து விவசாயம் பாரு, இப்போ என்ஜினீரா வேலையை பாரு" என்றார்

எதார்த்தம் அதுதான். இங்கே இதுபோன்ற விவசாய இதழ்களில் தொலைக்காட்சிகளில் வரும் 'அமெரிக்க நாசாவில் வேலையை விட்டுவிட்டு விவசாயம் பார்க்க கழனி புகுந்த என்ஜினீர்', 'குறைந்த முதலீடு, அதிக லாபம்', 'கார்ப்பரேட் அழுத்தங்கள் இல்லாத மன நிம்மதியான விவசாய வாழ்க்கை', மற்றும் பல 'பெப்பப்' வரிகளும் விவசாயத்தை புனிதப்படுத்தும் வசனங்களும் கேட்டு அதை தொட்டால் கெட்டோம் என்பதை பின்னாளில் சில நண்பர்களின் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்.
நீர் பற்றாக்குறை அதிகரித்து இருக்கும் இன்றைய சூழ்நிலையில் விவசாயம் அத்தனை எளிமையானது கிடையாது. விவசாயம் மற்ற தொழில் போல அதுவும் கடின உழைப்பை கோரும் வேலை. Subject to market risk என stock market விளம்பரங்களில் வருவதை போல விளைபொருள் விலை போகுமா என தெரியாத ஆபத்து நிறைந்த ஒரு தொழில்.
இது போன்ற build-up விளம்பர அட்டைப்பட கட்டுரைகளை பார்த்து உந்தப்பட்டு ஏதும் செய்யும் முன்னர் கள எதார்த்தம் என்ன என அறிந்து கொண்டு செயல்படுங்கள்

கருத்துகள் இல்லை: