புதன், 22 ஜூலை, 2020

சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா!

சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா!மின்னம்பலம் : தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 3000த்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி, சாத்தான்குளம் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும், போலீசார் தாக்குதலால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த இரட்டை கொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

இவ்வழக்கில் 10 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 14ஆம் தேதி, மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம், காவல் ஆய்வாளர் ஸ்ரீதா், சாா்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க ஒப்புதல் வழங்கியது.
இவர்களை சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர். இவர்களைத் தொடர்ந்து வழக்கில் கைதான தலைமைக் காவலர் சாமதுரை,முதல் நிலைக் காவலர்கள் வெயில்முத்து, செல்லதுரை ஆகியோரும் காவலில் எடுக்கப்பட்டனர்.
இவர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருந்த நிலையில், வழக்கில் திடீர் திருப்பமாக சிபிஐ அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காவலர் சைலேந்திர குமார், உதவி ஆய்வாளர் சச்சின் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சாத்தான்குளம் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
அதிகாரிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த 3 காவலர்கள் இன்றே ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து காவலர்கள் 3 பேருக்கும் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-கவிபிரியா<

கருத்துகள் இல்லை: