
பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்க விரும்பும் மாணவர்களில் பெரும்பாலானோர் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்திலேயே சேர விரும்புவர். இந்த பல்கலைக்குக் கீழ் தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. பொறியியல், தொழில்நுட்பம் என உயர் கல்விகளை வழங்குவதுடன் அண்ணா பல்கலை ஆராய்ச்சி பணிகளையும் செய்து வருகிறது.
சமீபத்தில் அண்ணா பல்கலைக்கு இன்ஸ்டிட்யுஸன் ஆப் எமினன்ஸ் என்ற சிறந்த அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியது. இதன்மூலம் மாநில அரசால் வழங்கப்பட்டு வந்த 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடருமா என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே பல்கலையை இரண்டாகப் பிரிக்க மாநில அரசு முடிவு செய்தது.
அதன்படி இன்று பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக 5 அமைச்சர்கள் குழுவை மாநில அரசு நியமித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த நவம்பர் 19 ஆம் தேதி இதுகுறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. இதில் அண்ணா பல்கலைக் கழகம் இன்ஸ்டிட்யுஸன் ஆப் எமினன்ஸ் என்றும் அண்ணா பல்கலைக் கழகம் என்றும் இரண்டாகப் பிரிக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்காக அண்ணா பல்கலைக் கழகம் 1978 என்ற சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டம் உருவாக்க முடிவெடுப்பது குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அண்ணா பல்கலை இன்ஸ்டிட்யுஸன் ஆப் எமினன்ஸ் என்று அறிவிக்கும் பட்சத்தில் மாநிலத்தின் இட ஒதுக்கீடு கொள்கை என்னவாகும் என்பது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும், இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர்கள் குழு நியமிக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இதனிடையே மாநில இட ஒதுக்கீடு முறை குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. டிசம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு அளித்த பதிலில் மாநில அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.வி. அன்பழகன் ஆகியோர் அடங்கிய குழு பல்கலையை இரண்டாகப் பிரிப்பது குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போதைய பல்கலைக் கழகம், மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்துடன் இயங்கும், புதிதாக மற்றொரு பல்கலைக் கழகத்தைத் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக