செவ்வாய், 17 டிசம்பர், 2019

ஜாமியா வன்முறை: குடியரசுத் தலைவரைச் சந்தித்த எதிர்க்கட்சிகள்!

ஜாமியா வன்முறை: குடியரசுத் தலைவரைச் சந்தித்த எதிர்க்கட்சிகள்!மின்னம்பலம் : டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகக் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 
தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று (டிசம்பர் 17) சந்தித்து முறையிட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் வன்முறையாக மாறியது. மாணவர்களுக்கு ஆதரவாகக் கேரள, மேற்கு வங்க மாநில முதல்வர்களும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே பல்கலைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் இன்று மீண்டும் டெல்லியில் போராட்டம் நடைபெற்றுள்ளது. மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் ஒன்று கூடி சீலம்பூர் பகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்க முற்பட்டனர். கல்வீச்சு தாக்குதலும் நடைபெற்றுள்ளது. இதனால் டெல்லியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. ஜாப்ராபாத், மவுஜ்பூர்- பாபர்நகர், சீலம்பூர்- கோகுல்பூர் மெட்ரோ ரயில் நிலையங்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் திமுக டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திருணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று மாலை சந்தித்துப் பேசினர். அப்போது நாட்டில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சோனியா காந்தி, ”வடகிழக்கில் தொடங்கிய போராட்டம் தற்போது தலைநகர் உட்பட நாடு முழுவதும் பரவி வருகிறது. மேலும் பல இடங்களில் போராட்டம் நடைபெறலாம் என்று அஞ்சுகிறோம். பாஜக மக்களின் குரலை நசுக்கி வருகிறது. மக்கள் குரலை ஒடுக்கும் போதும், சட்டத்தை அமல்படுத்துவதிலும் மோடி அரசு எந்த இரக்கமும் காட்டாது என்பதை அனைவரும் பார்த்திருப்பீர்கள்” என்று கூறினார்

கருத்துகள் இல்லை: