புதன், 18 டிசம்பர், 2019

இம்ரான் கான் -CAA : முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள்.. அணுஆயுத போருக்கு இட்டு செல்லும் ஆபத்து உள்ளது ...


CABvikatan.com - மோகன் இ : இந்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய குடியுரிமைச் சட்டத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வினையாற்றியுள்ளார்.
மிகவும் சர்ச்சைக்குள்ளான குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கிய போராட்டங்கள் தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டம் சர்வதேச அளவிலும் பல இடங்களிலிருந்து எதிர்வினையைச் சந்தித்தது. இந்தியாவின் குடியுரிமைச் சட்டம் அடிப்படையிலே பாகுபாடாக இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது தடை விதிக்க வேண்டும் என சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் பரிந்துரைத்திருந்தது.
வங்கதேசமும் இதற்கு மிகவும் கவனமுடனே எதிர்வினையாற்றி வருகிறது. இந்த மசோதாவுக்கு ஆரம்பம் முதலே பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் சர்வதேச அகதிகள் மன்றத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.


 ``ஏற்கெனவே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நெருக்கடியைத் தொடர்ந்து தற்போது இந்தப் புதிய சட்டம் மேலும் பல நெருக்கடிகளை உருவாக்கும். இதன்மூலம் இந்திய முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தானுக்கு வர நேரிடும். பாகிஸ்தானால் அதைச் சமாளிக்க முடியாது. இது வெறும் அகதிகள் பிரச்னையாக மட்டுமல்லாமல் இரண்டு அணுஆயுத நாடுகளையும் போர் முனைக்கு இட்டுச் செல்லும். இந்திய அரசு, காஷ்மீரை ஆக்கிரமித்ததோடு, அஸ்ஸாமில் முஸ்லிம்கள் குடியுரிமையையும் பறித்தது. தற்போது இந்தப் புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது'' என்று குற்றம்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், ``பாகிஸ்தான் பிரதமரின் அனைத்துக் கருத்துக்கும் இந்தியா பதிலளிக்க வேண்டிய தேவையில்லை. இம்ரான் கான், இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாமல் அவர்கள் நாட்டின் சிறுபான்மையினர் நிலைமையில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளது

கருத்துகள் இல்லை: