வெள்ளி, 20 டிசம்பர், 2019

விஜயகுமார் ( கல்கி சாமியார்) வாங்கி குவித்த பல கோடி சொத்துகள் முடக்கம்


பினாமி பெயரில் கல்கி விஜயகுமார் வாங்கி குவித்த பல கோடி சொத்துகள் முடக்கம்மாலைமலர்: பினாமி பெயரில் கல்கி விஜயகுமார் வாங்கி குவித்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதப்பாளையத்தில் கல்கி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தை கல்கி விஜயகுமார் என்று கூறப்படும் விஜயகுமார் என்பவர் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
விஜயகுமார் தன்னை ‘விஷ்ணுவின் அவதாரம்’ என்று கூறி கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை தேடி ஏராளமானோர் வந்தனர். அவர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். இதில் அவருக்கு பணம் அதிக அளவில் கிடைத்ததாகவும், அதை வைத்து தான் சித்தூரில் கல்கி ஆசிரமத்தை கட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கல்கி ஆசிரமம் பெயரில் பல சொத்துகள் வாங்கி இருப்பதாகவும், கட்டுமான துறை மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிலும் ஏராளமான முதலீடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில், வருமான வரித்துறையினர் கடந்த அக்டோபர் மாதம் கல்கி ஆசிரமம் சம்பந்தப்பட்ட 40 இடங்களில் சோதனை நடத்தியதில், ரூ.800 கோடி வருவாய் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.


அதுமட்டுமல்லாமல் இந்திய பணம் 44 கோடியும், வெளிநாட்டு பணம் 20 கோடியும் என மொத்தம் ரூ.64 கோடியும், 88 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.5 கோடி வைரங்களும், சில ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கல்கி விஜயகுமார், அவரது மகன் கிருஷ்ணா, மருமகள் பிரீத்தா உள்ளிட்டோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான ஆந்திர மாநிலம் கள்ளிவெட்டு பகுதியில் ஒன்னெஸ் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருவதும், இந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றி வருபவர்கள் பெயரில் தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களின் பல்வேறு இடங்களில் 907 ஏக்கர் பரப்புள்ள சொத்துகள் வாங்கி குவித்திருப்பதும் தெரியவந்தது.

தமிழகத்தில் கோவை மதுக்கரை, ஊட்டி, ஆரணி ஆகிய இடங்களில் சொத்துகள் வாங்கி இருப்பதும் கண்டறியப்பட்டது. ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் மட்டும் பேராசிரியர்கள் பெயரில் 400 ஏக்கர் நிலம் வாங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த சொத்துகளின் மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும்.

ஒன்னெஸ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ‘தாசாஜி’ என்று அழைக்கப்படுகின்றனர். துறவிகளான இவர்களுக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படுவதில்லை. உணவு மற்றும் தங்குமிடம் மட்டுமே வழங்கப்படும். இவர்கள் சொத்துக்காக ஆசைப்பட மாட்டார்கள் என்ற காரணத்தால் இவர்கள் பெயரில் கல்கி விஜயகுமார் சொத்துகளை வாங்கி குவித்ததும் வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்தது.

மேற்கண்ட 3 மாநிலங்களில் எந்தெந்த இடங்களில் பினாமி பெயரில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டு அவற்றை முடக்கம் செய்து வருமான வரித்துறையின் பினாமி தடுப்புப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். சம்பந்தப்பட்ட சொத்துகள் இருக்கும் பகுதிக்கு உட்பட்ட சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகளுக்கும் இதுகுறித்த தகவலை வருமான வரித்துறையினர் அனுப்பி உள்ளனர்

கருத்துகள் இல்லை: