திங்கள், 16 டிசம்பர், 2019

குடியுரிமை: நாடு முழுவதும் பரவும் போராட்டம்!

minnambalam.com : குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் பரவி வருகின்றன.
மக்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் பற்றியெரியும் நிலையில், நாட்டின் மற்ற மாநிலங்களிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
டெல்லி
குடியுரிமை: நாடு முழுவதும் பரவும் போராட்டம்!தலைநகர் டெல்லியில் ஜாமியா நகரில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதில் மூன்று பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கலைத்தனர். போராட்டத்தின்போது, மாணவ, மாணவிகள் மீது சீருடை அணியாத நபர்களும் தாக்குதல் நடத்தினர்.
இதனால் அந்தப் பகுதியே போராட்டக் களமாகக் காட்சியளித்தது. ஜாமியா பல்கலைக்கழகத்தின் முன்பு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். கேட்-1 வழியாக உள்ளே நுழைந்த காவல் துறையினர் மாணவர்களைக் கைது செய்தனர்.

அனுமதியின்றி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்ததாக போலீசார் மீது குற்றம்சாட்டிய ஜாமியா பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை கண்காணிப்பாளர், “யாரிடமும் அனுமதி வாங்காமல் காவல் துறையினர் வேகமாக உள்ளே நுழைந்தனர். எங்கள் ஊழியர்கள் மற்றும் மாணவர்களைத் தாக்கி பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேறுமாறு மிரட்டுகின்றனர்” என்று தெரிவித்தார். எனினும் மாணவர்கள் அல்லாத போராட்டக்காரர்களை மட்டும்தான் வெளியேற்றுகிறோம் என தெற்கு டெல்லி உதவி ஆணையர் பதிலளித்தார்.

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், டெல்லி காவல் துறை தலைமையகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லி முதல்வர் அருண் கேஜ்ரிவால், “யாரும் வன்முறையில் ஈடுபடக் கூடாது. எந்தவொரு வன்முறையும் ஏற்றுக்கொள்ள முடியாதது. போராட்டங்கள் அமைதியாக நடைபெற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுக்தேவ் விஹார், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஒக்ஹ்லா விஹார், ஜசோலா விஹார் ஷஹீன் பாக் ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் நேற்று மாலையில் இருந்து மூடப்பட்டுள்ளன. மேற்கண்ட நிலையங்களில் மெட்ரோ ரெயில்கள் நிற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம்
சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கண்ணீர்ப் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் மாணவர்களைக் கலைத்தனர். மேலும், மாணவர்களின் இருசக்கர வாகனங்களையும் போலீசார் அடித்து நொறுக்கினர்.

மேற்கு வங்கம்
குடியுரிமை சட்டத் திருத்தத்தை மேற்கு வங்க முதல்வர் கடுமையாக எதிர்த்துள்ள நிலையில், அம்மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் பேரணி நடத்த ஆலோசனை நடைபெற்றது.
இந்த நிலையில் கொல்கத்தா ராஜ்பவனில் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஜெகதீப் தங்கர், “போராட்டத்தில் ஈடுபடாமல் பொதுமக்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். குடியுரிமை சட்டத் திருத்தத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டேன் என அறிவித்துள்ளதை மம்தா பானர்ஜி திரும்பப் பெறுவார் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பஞ்சாப்
இதுபோலவே பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் அமைந்துள்ள ராய்ப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நேற்று மாலை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதாகைகளுடன் சாலை வழியாகப் பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள், மத்திய அரசைக் கண்டித்தும், சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.
தமிழகம்
தமிழகத்தில் வசிக்கும் அசாம் இளைஞர்கள் ஒன்றுகூடி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டனப் போராட்டம் நடத்தினர். வரும் 19ஆம் தேதி திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன. இதுபோலவே பல்வேறு இயக்கங்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகின்றன.

பிகார்
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பிகார் தலைநகர் பாட்னாவிலும் போராட்டம் வெடித்துள்ளது. பிகார் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், சட்டத்திற்கு எதிராக பதாகைகள் ஏந்தியபடி போராடினர். மேலும், ஒரு பகுதியில் நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் அந்தப் பகுதியில் இருந்த காவல் நிலையத்துக்குத் தீ வைக்கப்பட்டது.

பாஜக கூட்டணிக் கட்சி வழக்கு
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் போவதாக பாஜக கூட்டணிக் கட்சியான அசோம் கனபரிஷத் கட்சியின் தலைவர் குமார் தீபக் தாஸ் தெரிவித்துள்ளார்.
இதுபோலவே கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது.

கருத்துகள் இல்லை: