வியாழன், 19 டிசம்பர், 2019

இரா. சம்பந்தர் :விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லதுதான்


BBC :இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் . யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அது ஒரு சர்வதேச ஒப்பந்தம். தன்னிச்சையாக ஒரு நாடு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக முடியாது. அது நிறைவேற்றப்பட வேண்டும். அது ஒரு சர்வதேசக் கடமை.
1988ஆம் ஆண்டு 13ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதுதான் அரசியல் சாசன ரீதியாக ஏற்பட்ட முதல் ஆட்சி அதிகாரங்களைப் பொறுத்தவரையில் ஒரு திருத்தம். அது இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அது முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். அது நிறைவேற்றப்படுமென்ற பல வாக்குறுதிகளைப் பல அரசாங்கங்கள் கொடுத்திருக்கிறார்கள். அவற்றை அவர்கள் இன்னமும் நிறைவேற்றவில்லை.
அரசாங்கம் சர்வதேச ரீதியாக வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கின்றது. அதைப் பாரதப் பிரதமருக்கும் கொடுத்திருக்கிறது.

ஜனாதிபதியாக இருந்த போது மகிந்த ராஜபக்ஷசவும் அவருடைய வெளி விவகாரச் செயலாளர் பேராசிரியர் ஜி.எல்.பிரீசும் இந்திய அரசாங்கத்திற்கு வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்கள். நாங்கள் 13ஆவது அரசியல் சாசனத் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவோம். அதற்கு மேலதிகமாக அதைக் கட்டியெழுப்பி அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்துவதற்கு நாங்கள் வழிசெய்வோம் என்று. அது நடைபெற வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.
இந்த விடயம் சம்பந்தமாக இந்திய வெளி விவகார அமைச்சர் இலங்கை வெளி விவகார அமைச்சர் இந்திய வெளி விவகார அமைச்சின் பேச்சாளர்கள் பல முறைகளில் பேசியிருக்கின்றார்கள். பல வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
>இந்த ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பிறகு இந்தியாவினுடைய வெளி விவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்த பொழுது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிற்கு கூறிய செய்தி என்னவெனில் இங்கு எதிர்பார்க்கின்றதை இந்தியப் பிரதமர் எதிர்பார்க்கின்றார் நீங்கள் சமத்துவத்தின் அடிப்படையில் நீதியின் அடிப்படையில் கௌரவத்தின் அடிப்படையில் சமாதானத்தின் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வை நீங்கள் ஏற்படுத்த வேண்டுமென்று. இது சாதாரணமான சொற்கள் அல்ல.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு வாரத்திற்குள் இந்தியாவிற்குச் சென்ற போது இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பொழுது ஒரு கூட்டாக ஊடக சந்திப்பு நடைபெற்றது.அந்த ஊடக சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோதி இவ்விதமான ஒரு தீர்வை ஏற்படுத்தி தமிழ் மக்கள் இலங்கையில் கௌரவமாக வாழக் கூடிய சூழ்நிலை ஏற்பட வேண்டுமென்று நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் கூறியிருக்கின்றோம் அதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று கூறியிருக்கின்றார்.இவை நடைபெற வேண்டும். இவற்றை நிறைவேற்றுவதுதான் எங்களது கடமை. இவற்றை எவராலும் நிறைவேற்ற முடியாது என்றில்லை. கற்பனையில் வாழ்கின்றவர்களால் நிறைவேற்ற முடியாது.
இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் அத்துடன் முடிவடையவில்லை. தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கணிக்கப்படுகின்றார்கள். அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களுக்கு சமத்துவ அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு கொடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியம்.
இலங்கை அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்த பொழுது உதவிய நாடுகள் நோர்வே, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஜப்பான், போன்ற நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருக்கின்றது.
அதிகார பகிர்வின் ஊடாக நாட்டில் சமத்துவமாக மக்கள் வாழக் கூடிய வகையில் ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்துவோம் என்று. அந்த நாடுகளும் தங்களுடைய கருத்தகளைக் கூறியிருக்கின்றார்கள். அமைப்பு ரீதியாக மாற்றங்கள் ஏற்பட வேண்டும். ஆழமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அவ்விதமான மாற்றங்களின் ஊடாக ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும்.
அமெரிக்கா தனிப்பட்ட முறையிலும் இலங்கைக்குக் கூறியிருக்கின்றது.உங்களுடைய பழைய நிலைமைகளில் உள்ளக சுயநிர்ணய உரிமையைப் பற்றிப் பேசியிருக்கின்றீர்கள். சமஷ்டியைப் பற்றிப் பேசியிருக்கின்றீர்கள், அதியுச்ச அதிகாரப் பகிர்வைப் பற்றிப் பேசியிருக்கின்றீர்கள்.
ஆனபடியால் அந்த அடிப்படையில் ஒரு தீர்வு வர வேண்டுமென்றும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.இவை நிறைவேற்றப்பட வேண்டும். இவற்றை நிறைவேற்றுவதற்கு நாங்கள் திட்டங்களை வகுத்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் என்ன விதமாகச் செயற்படப் போகின்றோம் என்பதை முடிவெடுத்து அதைச் செய்ய வெண்டும். அது தான் எங்களுடைய கடமை. அது தான் எங்களுடைய எதிர்காலம்.
அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் பல தேவையான அதிகாரங்களை நாங்கள் பெற்று எமது மக்கள் சமத்தவமாக நீதி பெற்றவர்களாக சமாதானமாகக் கௌரவமாக வாழக் கூடிய நிலைமை ஏற்பட வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான சர்வதேச சமூகம் விசேசமாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு உதவி புரிந்தார்கள். அதுவொரு நிபந்தனையின் அடிப்படையில் தான்.தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பிறகு நாங்கள் ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வை காண்போம் என்று. ஆனால் தற்பொழுது அந்த வாக்குறுதிகளிலிருந்து தப்பிக்க முயல்கின்றார்கள்.அதற்கு சர்வதேச சமூகம் இடமளிக்கக் கூடாது. அதற்கு சர்வதேச சமூகம் இடமளித்தால் அதனுடைய அர்த்தம் என்னவென்றால் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு அவர்களும் உதவுகின்றார்கள் என்று தான். அந்த நிலைமை இருக்க முடியாது. அந்த நிலைமை இருக்கக் கூடாது.
உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையினுடைய தீர்மானங்கள் சிவில் அரசியல் உரிமைகள் பொருளாதார சமூக கலாச்சார உரிமைகளின் அடிப்படையில் அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் எமக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையுண்டு. அது மறுக்கப்பட்டால் அதற்கு வெளியக சுயநிர்ய உரிமையுண்டு. இதைச் சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும்.
நாங்கள் எவரையும் பகைக்கவில்லை. பகைமை எங்களுக்கு வேண்டாம். ஆனால் எமது மக்களின் உரிமைகளைக் கடைசி வரையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: