செவ்வாய், 17 டிசம்பர், 2019

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு வீடியோ


  மாலைமலர் : குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக
சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதுடெல்லி: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பா.ஜனதா தனது பலம் மற்றும் ஆதரவு கட்சிகளுடன் இந்த சட்டத்தை கொண்டு வந்தது.
இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ஜெயராம் ரமேஷ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா, திரிபுரா முன்னாள் மகாராஜா பிரத்யோத் கிஷோர் தேவ் வர்மன், சுப்ரீம்கோர்ட்டு வக்கீல் எம்.எல்.சர்மா ஆகியோர் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதே போல இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, அனைத்து அசாம் மாணவர் சங்கம், ரிகாய் பஞ்ச், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மொத்தம் 18 மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், “குடியுரிமை திருத்த சட்டம் அரசியல் சாசனம் வழங்கியுள்ள சம உரிமைக்கும், மதசார்பின்மைக்கு எதிரானது என்றும் எனவே இந்த சட்டதிருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி பாப்டே தலைமையில் நீதிபதிகள் கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மூத்த வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, கபில்சிபல் ஆகியோர் நேற்று முறையிட்டனர்.

இதைத்தொடர்ந்து 18 மனுக்கள் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடர்ந்தது.

18 மனுக்கள் மீது நாளை விசாரணை நடப்பதால் தி.மு.க.வின் மனுவும் அதோடு சேர்த்து விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: