செவ்வாய், 17 டிசம்பர், 2019

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் எல்லாம் கட்!’ - அமித் ஷா

metronews.lk :இந்தியாவில் ‘இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் எல்லாம் கட்!’ என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய மக்கள் தொகைதான் இப்போது அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் காரணிகளில் மக்கள்தொகை பெருக்கமும் ஒன்றாக இருக்கிறது என அமித் ஷா நினைக்கிறார். இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பி.ஜே.பி அரசு, தங்களது அனைத்து அஜெண்டாக்களையும் அதிரடியாக நிறைவேற்றிவருகிறது. இந்நிலையில், இன்னும் சில நாள்களில் அடுத்த அதிரடி மசோதாவை நிறைவேற்றி, நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கத் திட்டமிட்டுள்ளார், அமித் ஷா. 2019ஆம் ஆண்டு மே மாதம், இரண்டாவது முறையாக அதீத பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது பி.ஜே.பி. இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன், தங்களது நீண்டகாலத் திட்டங்கள் அனைத்திற்கும் உயிர்கொடுக்கும் முடிவுக்கு அப்போதே வந்தது. குறிப்பாக, பி.ஜே.பி அரசின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் பல ஆண்டுகளாகத் தங்கள் கொள்கையாக வைத்திருந்த சில திட்டங்களை இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றிட வேண்டும் என்று பி.ஜே.பி அரசுக்கு மறைமுக அழுத்தமும் கொடுத்தது.
 அதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடரிலேயே முத்தலாக் மசோதாவைக் கொண்டுவந்து, அதைச் சட்டமாக்கியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அதைச் செயல்படுத்தியது பி.ஜே.பி.


அதேபோல், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, சுதந்திரம் பெற்றது முதலே காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவந்தது. அதையும் அதிரடியாக நிறைவேற்ற முடிவுசெய்த பி.ஜே.பி அரசு, ஒரே நாளில் அந்த சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்திற்குள் கொண்டுவந்தது. எதிர்க்கட்சிகள் அதற்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தபோது, தங்களது பெரும்பான்மை பலத்தைக் காட்டி, அந்த மசோதாவைக் கொண்டுவந்து காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்தும், சிறப்பு அதிகாரத்தை ரத்துசெய்தும் சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தார், உள்துறை அமைச்சர் அமித் ஷா. இதில், இஸ்லாமியர்களைத் தவிர ஆறு சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று புதிய ஃபார்முலாவைக் கொண்டுவந்தனர். இதற்கும் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், வடகிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டமும் வெடித்தது. ஆனால், அதைப் பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் அந்த மசோதாவை நிறைவேற்றியது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நீண்ட நாள் அஜெண்டாவில் ஒன்றான பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்பதை பி.ஜே.பி அரசு பலமுறை மறைமுகமாகச் சொல்லிவருகிறது. மத்திய சட்டத்தறை அமைச்சகம், இதுகுறித்த அறிக்கையை தயார்செய்துவருகிறது.மேலும், சட்ட முன்வடிவு குறித்தும் அந்த அமைச்சகம் ஆய்வு செய்துவருகிறது. விரைவில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் நிலை இருக்கிறது. இந்நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் புதிய மசோதா ஒன்றை விரைவில் தாக்கல்செய்ய உள்ளதாக, மத்திய அரசுக்கு நெருக்கமான வட்டாரத்தினர் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

 “இந்தியாவின் மக்கள்தொகைதான் இப்போது அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாகிவருகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் காரணிகளில் மக்கள்தொகைப் பெருக்கமும் ஒன்றாக இருக்கிறது. இப்போது, இந்தியாவில் அதிகரித்துவரும் மக்கள் தொகைப் பெருக்கத்தின் நீட்சி, எதிர்காலத்தில் இந்தியாவே உலகத்தின் மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் நாடாகும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இதற்கும் முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கு, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சீனா கொண்டுவந்த குழந்தை பிறப்பு தடைச் சட்டத்தைப் போன்று, இந்தியாவிலும் கொண்டுவர முடிவு செய்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒரு தம்பதிக்கு இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி. அதற்கு மேல் குழந்தைகள் பெற்றால், அரசு சலுகைகளை ரத்து செய்யும் சட்டத்தைக் கொண்டுவர இருக்கிறார்.

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் ரேஷன், மானியம் உள்ளிட்டவற்றை அரசு நிறுத்திவிடும். மூன்றாவது குழந்தை பெற அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க முடியாது என்பன போன்ற விஷயங்களை இந்தச் சட்டத்தில் புகுத்த இருக்கிறது மத்தியஅரசு” என்கிறார்.

‘முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, சீனா இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து, மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தியது. ஆனால் அடுத்த தலைமுறையில், இளைஞர்களின் தட்டுப்பாடு அந்த நாட்டில் அதிகரித்து, மக்கள் தொகையில் பிறப்பு விகிதமும் கணிசமாகக் குறைந்தது. எனவே, இந்த சட்டத்தின் தவற்றை உணர்ந்துகொண்ட சீனா, இப்போது குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கிறது.

இந்தியாவும் அவசரப்பட்டு பிறப்புக் கட்டுபாடு சட்டத்தைக் கொண்டுவந்து, சீனாவின் நிலை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது’ என்று அச்சப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். சீனா ஆனால், இந்தச் சட்டத்தை விரைந்து கொண்டுவந்து நிறைவேற்றுவதில் அமித் ஷா உறுதியாக இருக்கிறார் என்கிறார்கள், மத்திய அரசுக்கு நெருக்கமானவர்கள். பெரும்பான்மை பலம் இருக்கும்போதே இந்த மசோதாவைக் கொண்டுவந்து, அடுத்த ஆண்டே இந்த சட்டத்தை அமல்படுத்திவிடுவார்கள் என்கிறார்கள் அவர்கள்

கருத்துகள் இல்லை: