திங்கள், 16 டிசம்பர், 2019

உன்னாவ் பாலியல் வன்முறை பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி - டெல்லி நீதிமன்றம்


உன்னாவ் கற்பழிப்பு வழக்கு: நீக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி - டெல்லி நீதிமன்றம் தீர்ப்புமாலைமலர் : உத்தர பிரதேசம் மாநிலம், உன்னாவ் இளம்பெண் பாலியல் பலாத்தாரம் செய்யப்பட்ட வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுடெல்லி: உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் 'நான் 17 வயது சிறுமியாக இருந்தபோது பாங்கர்மாவ் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கடந்த 2017-ம் ஆண்டில் என்னை கடத்திச் சென்று கற்பழித்து விட்டார்’ என உள்ளூர் போலீசில் புகார் செய்திருந்தார்.
இந்த புகாரின்மீது வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடித்து வந்த போலீசார் இவ்விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்த பின்னர் ஒருவழியாக நடவடிக்கையில் இறங்கினர். லக்னோ நீதிமன்றத்தில் இந்த கற்பழிப்பு வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது வக்கீல், தாயாருடன் மற்றும் உறவினர்களுடன் ரேபரேலி நோக்கி காரில் சென்றபோது காரின்மீது லாரி மோதியதில் அவரது உறவுக்கார பெண் மற்றும் வக்கீல் மகேந்திர சிங் ஆகியோர் உயிரிழந்தனர்.

அந்த இளம்பெண்ணும் அவரது தாயாரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர். இந்த விபத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ண கொல்வதற்கு நடந்த சதி என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் மற்றும்  9 பேர் மீது தனியாக கொலை உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக உ.பி.போலீசாரால் கடந்த 2-4-2018 அன்று கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை காவலில் இருந்த அவர் 9-4-2018 அன்று சிறைக்குள் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின.

விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த இளம்பெண் சுப்ரீம் கோர்ட் (முன்னாள்) தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் கற்பழிப்பு, விபத்து, கள்ளத்துப்பாக்கி வழக்கு, சிறை மரணம் மற்றும் அதன் தொடர்புடைய இதர வழக்குகள் என மொத்தம் 5 வழக்குகளையும் லக்னோ நீதிமன்றத்தில் இருந்து டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த 1-8-2019 அன்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

உன்னாவ் வழக்கில் தீர்ப்பு வழங்கிய டெல்லி நீதிமன்றம்

மேலும், அந்த பெண்ணுக்கு உத்தர பிரதேசம் மாநில அரசு 25 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் கார் விபத்து தொடர்பான விசாரணையை 7 நாட்களில் சி.பி.ஐ. முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. 

டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அன்றாடம் விசாரணை நடத்தி 45 நாட்களுக்குள் வழக்கை முடிக்கவும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது.

உன்னாவ் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 25 லட்சம் ரூபாய் நிவாரணத்தை உத்தர பிரதேசம்அரசு வழங்கியது. மேல் சிகிச்சைக்காக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

உடல்நிலை தேறிய பின்னர் மத்திய துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் மகளிர் ஆணைய நிர்வாகிகள் கண்காணிப்பில் டெல்லியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பத்தாருடன் அந்த இளம்பெண் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

குல்தீப் சிங் செங்காரை கட்சியில் இருந்து நீக்கியதாக பாஜக தலைமை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இந்த கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குல்தீப் சிங் செங்காருக்கு எதிராக கடந்த 9-8-2019 அன்று டெல்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கிரிமினல் குற்றப்பிரிவு 120பி, 363, 366, 376 மற்றும் 'போக்சோ’ சட்டத்தின் இதர பிரிவுகளின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை மாஜிஸ்திரேட் தர்மேஷ் சர்மா பதிவு செய்துகொண்டார்.

அன்றிலிருந்து தொடங்கிய விசாரணையில் சி.பி.ஐ. தரப்பில் 13 சாட்சிகளும், குல்தீப் சிங் செங்கார் தரப்பில் 9 சாட்சிகளும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இருதரப்பு வக்கீல்களின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்தது.

இந்நிலையில், உன்னாவ் இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்தாரம் செய்த வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டணை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது

கருத்துகள் இல்லை: