வெள்ளி, 20 டிசம்பர், 2019

BBC : சென்னை பல்கலைக்கழக மாணவர் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது எப்படி?


குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடி வந்த சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் புதன்கிழமை இரவு முடிவுக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து காவல்துறையினரால் அகற்றப்பட்டனர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் போராட்டம் செய்த மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் செவ்வாய்க்கிழமை முதல் போராட்டம் நடத்திவந்தனர்.
புதன்கிழமையன்றும் போராட்டம் தொடர்ந்த நிலையில், புதிதாக மாணவர்கள் அந்தப் போராட்டத்தில் இணைவதற்கு காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. பல்கலைக்கழகத்தில் வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்தது.
இந்த நிலையில் புதன்கிழமையன்று இரவு பல்கலைக்கழக வளாகத்திற்குள் வந்த காவல்துறையினர் எஞ்சியிருந்த 17 மாணவர்களைக் கைதுசெய்து, திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்குக் கொண்டுசென்று விடுவித்தனர்.
இதையடுத்து மாணவர்கள் வீடு திரும்பினர். தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் ரத்துசெய்யப்பட்டிருப்பதோடு, விடுதிகளும் மூடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: