புதன், 18 டிசம்பர், 2019

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் - பெண்கள் சாலை மறியல்.. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் - பெண்கள் சாலை மறியல்தினத்தந்தி : குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. திருவனந்தபுரத்தில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவனந்தபுரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. கேரளாவிலும் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகிறது. முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடந்த சத்தியாகிரக போராட்டத்தில் காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.


முஸ்லிம் அமைப்புகள் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ., சமாஜ்வாடி கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன. போராட்ட குழு சார்பில் பேரணி மற்றும் மத்திய தலைமை கணக்கு அதிகாரி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முஸ்லிம் பெண்கள் திருவனந்தபுரம் எம்.ஜி. சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைத்தனர்.

மேலும் மாவட்ட தலைநகரங்களில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடந்தது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் மூடப்பட்டன. அரசு அலுவலகங்கள,் பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டன. அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. திருவனந்தபுரம்-மூணார் இடையே இயக்கப்பட்ட அரசு பஸ் மீது தாக்குதல் நடந்தது.

திருவனந்தபுரம் தம்பானூரில் ஆட்டோ இயக்கப்படாததால் வெளியூர்களில் இருந்து ரெயில் மூலம் வந்த பயணிகள் அவதி அடைந்தனர். மாநிலம் முழுவதும் அமைதியாக நடந்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை

கருத்துகள் இல்லை: